14
எந்தக் காரியத்தை எதற்காகச் செய்கிறோம் என்று தெரியாமலேயே பல பேர் செயல்பட்டுக்கொண்டிருப்பார்கள். ரெயில் நிலையத்தில் ரெயில் வந்து நின்றதும் பெட்டிகளுக்கு இடையே உள்ள இணைப்பை சுத்தியலால் அடித்து சரி செய்யும்வேலையில் ஒருவர் அமர்த்தப்பட்டார். அவர் ஓய்வுபெறும் நாள் வந்தது. வழியனுப்பு விழாவும் நடைபெற்றது. அதற்கு நன்றி தெரிவித்துப் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார். “ரெயில் வந்து நின்றதும் இணைப்புகளில் சுத்தியலால் அடிக்கும் வேலையை இவ்வளவு நாளும் தவறாமல் செய்து வந்தேன். ஆனால் ஒரு விஷயத்தை இன்றைக்கு இங்கு வந்திருக்கிற அதிகாரிகள் தெளிவுபடுத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எதற்காக சுத்தியலால் அடித்தேன் என்று இது வரைக்கும் எனக்குத் தெரியவில்லை, இன்றைக்காவது சொல்லுங்கள்” என்றார். அதிகாரிகளில் ஒருவர் சொன்னார். “எங்களுக்கும் அது சரியாகத் தெரியவில்லை. மேலிடத்தில் கேட்டுச்சொல்கிறோம்.”
இப்படிப் பலபேர் இருக்கையில், காமராசர் தன்னுடைய வாழ்வைத் திட்டமிட்டு அமைத்துக் கொண்டார். ஆறாம் வகுப்பு வரையே படிக்க முடிந்தது. அதற்குப்பின் தாய்மாமனார் ஜவுளிக்கடையில் வேலை செய்ய வேண்டியதாயிற்று. ஆனாலும் அவரது நாட்டமெல்லாம் அரசியலிலேயே இருந்தது. பத்திரிகைகள் படிப்பதும், சத்தியமூர்த்தி, திரு.வி.க., வ.உ.சி. போன்ற தலைவர்களின் உரைகளையும், எழுத்துக்களையும் ஊன்றிக் கவனிப்பதும் இவரது அன்றாடப் பணிகளாகிவிட்டன. ஞானப்பிள்ளை என்பவர் விருதுபட்டியில் பொடிக்கடை வைத்திருந்தார். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் கூடிப்பேசும் இடமாக அது அமைந்தது. ஏதேனும் மறைபொருளை உள்வைத்துப் பேசும்பேச்சை பொடி வைத்துப்பேசுதல் என்பார்கள். ஆனால் விடுதலைப் போராட்டச்செய்திகளை மறைவாகப் பேசுவதற்குப் பொடிக்கடையே களமாக அமைந்தது பொருத்தம்தான். ‘ஞானப்பிள்ளைக் கூட்டம்’ என்றே அந்தக் குழுவுக்குப் பெயர் வந்துவிட்டது. காமராசரும் அந்தக் குழுவில் ஒருவரானார். அரசியல் ஈடுபாடு அதிகமாயிற்று. அவரது வீட்டில் இதைக்கண்டு அஞ்சினார்கள். அவரை விருதுபட்டியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று நினைத்தார்கள். அதன்படி திருவனந்தபுரத்திலிருக்கும் தாய்மாமன் கடைக்கு அனுப்பி வைத்தனர். தாய்மாமனின் கண்காணிப்பு அதிகமாயிருந்தது. அதனால் விருதுபட்டி நண்பர்களிடமிருந்து வரும் கடிதங்களை அஞ்சலகத்துக்கே சென்று வாங்கி மறைத்து வைத்தே படிப்பார். ஆனால் இந்த ஏற்பாட்டையும் தாண்டி ஒரு நாள் ஒரு கடிதம் மாமனின் கையில் சிக்கி விட்டது. அவ்வளவுதான், மறு வண்டியிலேயே அவர் விருதுபட்டிக்கு அனுப்பப்பட்டார். அங்கு வந்ததும் காமராசரின் அரசியல் ஈடுபாடு அதிகமாயிற்று. குடும்பத்தினர் பயந்தனர். பேரனுக்கு வெள்ளைக்காரர்களால் ஆபத்து வருமோ என்று பாட்டியார் நடுங்கினார். ஆனால் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் காமராசர் தமது கடமையில் ஈடுபட்டார்.
வாய்ப்பினால் உருவானவன் அல்ல மனிதன். வாய்ப்பை உருவாக்குபவனே மனிதன். ஒவ்வொரு நாளையும் உன்னதமான நாளாக எண்ணி உழைத்தால் உலகம் நம் கையில். கடமையை உணர்ந்தவர்களுக்குக் காலம் வசப்படும். வெற்றி நிசப்படும்.