21
ஒரு கோரிக்கையை வலியுறுத்தி பல பேர் சேர்ந்து உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினார்கள். அதில் பாதிப்பேர் ஒரு குழுவாகவும் மீதிப்பேர் இன்னொரு குழுவாகவும் அமர்ந்திருந்தனர். ஒரே கோரிக்கைக்காகத்தானே போராட்டம், பிறகு ஏன் இரண்டு பிரிவாக அமர்ந்திருக்கிறீர்கள்? என்று கேட்டபோது கிடைத்த பதில் “இதில் பாதிப்பேர் அசைவம் சாப்பிடுகிறவர்கள். மீதிப்பேர் சைவம். அதற்கேற்ற மாதிரி அமர்ந்து இருக்கிறார்கள்” உண்ணாவிரதப் போராட்டம் படுகிறபாடு இது. பல போராட்டங்கள் இப்படித்தான் போலித்தனமாக அமைந்து விடுகின்றன.
விடுதலைப்போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் பெருந்தலைவர் காமராசர். போராட்டத்தில் வெற்றி கிடைத்த பின் அதன் பலனை அனுபவிப்பதிலேயே பலர் நாட்டம் செலுத்துவார்கள். இதிலும் மாறுபட்டே விளங்கினார். காமராசர் விடுதலைக்குப்பின் நாட்டில் ஏற்பட்டப் பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திப்பதிலும் அடிமைத்தனத்தால் சீர்கெட்டுக் கிடந்த நாட்டை வளப்படுத்துவதிலுமே அவரது நாட்டம் இருந்தது. பாகிஸ்தான் பிரிவினை காந்தியடிகளின் மரணம் ஆகிய நிகழ்ச்சிகளால் கவலை கொண்டிருந்த நேருஜி போன்ற தலைவர்களுக்கு உறுதுணையாக இருந்து உரிய ஆலோசனை சொல்லும் மாமனிதராக அவர் திகழ்ந்தார். அகில இந்திய அளவில் முக்கியமான காலங்களில் வேண்டப்பட்ட ஒரு நபராக அப்போதே அவர் உருவாகி விட்டார். அதே நேரத்தில் தமிழ்நாட்டின் மீதும் அவருக்கிருந்த பாசத்துக்கு அளவே இல்லை.
1936-இல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஆனார். 1937ல் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1940 முதல் 1952 வரை மொத்தம் 12 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக பெருமளவு வெற்றி கிடைக்காததற்கு தாமே பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். சத்தியமூர்த்தி கர்மவீரர் காமராசருக்குக் குருவாக இருந்து வழிகாட்டினார். தனுஷ்கோடி நாடார் என்பவர் உற்ற நண்பராக இருந்தார். 1954-ல் மூதறிஞர் ராஜாஜி தமிழக முதலமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்தபோது அந்தப்பொறுப்பைத் தாமே ஏற்றுக்கொண்டார். 13-04-1954 தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று அந்த தவப்புதல்வர் தமிழகத்தின் முதல்வரானது மிகப்பொருத்தம்.
யார் தங்களுடைய மனநிலை, சுபாவம் ஆகியவற்றை சூழ்நிலைகளுக்குப் பொருந்தி இருப்பதாக மாற்றிக் கொள்கிறார்களோ அவர்களே உயர்ந்து நிற்பார்கள்.