"

25

மனிதர்கள்அதிகம் உழைப்பதால் சோர்வடைவதில்லை. கவலையாலும், வீணான உரசல்களாலும் அதிகம் சோர்வடைகிறார்கள். உழைப்பு உடலைப் பலப்படுத்தும், உழைக்காமல் முன்னேற நினைப்பவர் பலர் உண்டு.

ஒருவர் தன்னுடைய நண்பரிடம், நடக்கக் கூடாதது நடந்து போச்சுங்க என்று சலித்துக் கொண்டார். அப்படி என்ன நடந்து போச்சு என்று கேட்டதற்கு, நான் ரேஸில் பணம் கட்டிய குதிரை ஓடுவதற்கு பதிலா நடந்து போச்சுங்க என்றாராம்.

இப்படி இல்லாமல் உழைப்பையே உயிராகக் கொண்டவர்கள் உன்னதம் அடைகிறார்கள். இதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் கர்மவீரர் காமராசர் அவர்கள்.

மந்திரி பதவியை காமராசர் நாடிச்செல்லவில்லை. ஆனால் முதல் மந்திரி பதவி அவரை நாடி வந்தது. 1954ல் நாடி வந்த பதவியை 1963ல் அவராகவே ராஜினாமா செய்தார். இவ்வளவு நீண்ட காலம் முதலமைச்சர் பதவியை வகித்த முதல் முந்திரி பெருந்தலைவர்தான்.

பெருந்தலைவர் முதல்வரானதும் தமிழக மக்களுக்குக் கூறியதாவது, நாள் முழுவதும் உழைக்கிறவர்களை வேலைக்காரர், கூலிக்காரர் என்று குறை கூறுகிறோம். உழைப்பே இல்லாமல் பிறர் உழைப்பால் வாழ்ந்து வரும் சோம்பேறிகளை, எஜமானர், மகராசர் என்கிறோம். ஏழைகளின் துயரம் நீங்கவே நான் முதல்வர் பதவி ஏற்றுள்ளேன். இல்லாவிட்டால் எனக்கு பதவியே தேவையில்லை என்றார்.

கொஞ்சமும் மனம் தளராமல் குன்றாத ஊக்கத்துடன் தனது ஓயாத மக்கள்சேவையினால் சென்னை மாநிலத்தில மட்டுமல்லாது, இந்தியா முழுவதுமே பெருந்தலைவர் புகழ்பெற்றார்.

பல ஆண்டுகளாக நண்பர் என்ற முறையில் அவரை அறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. அவருடன் பழகப் பழக அவரிடத்தில் எனக்குள்ள மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது. திறமை, நல்லாட்சி இவைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஓர் அரசாங்கத்துக்குத் தலைவர் என்ற முறையில் அவர் சென்னை முதலமைச்சராக இருக்கிறார் என்று நேருஜி பெருந்தலைவரின் சேவையைப் பாராட்டினார்.

காமராசரின் ஆட்சித் திறனை கேள்விப்பட்டு இங்கிலாந்து தேச மகாராணியின் கணவர், எடின்பரோ கோமகன், காமராசரைப் பாராட்டிக் கைகுலுக்கி, மீண்டும் நான் பாரத நாட்டுக்கு வரும்போது, சென்னை வந்தால் நீங்களே முதல் மந்திரியாக இருப்பீர்கள் என்று ஆசி கூறிச் சென்றார். இப்படிப்பட்ட பாராட்டுகளுடன் பெருந்தலைவர் தமிழகத்தை நடத்திச் சென்றார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.