27
வெளிநாட்டுக்குச் சென்று திரும்பிய ஒருவர் தன் நண்பரிடம் வெகுவாகப் பெருமை அடித்துக் கொண்டார்.
“நான் பேசுவது இங்கிலீஷில்தான், படிக்கிறது இங்கிலீஷ் புக்தான். பார்க்கிறது இங்கிலீஷ் மூவிதான்” என்றார். அதற்கு நண்பர், “சரி இங்கே ஒரு இங்கிலீஷ் படம் ஓடுகிறது போய் பார்ப்போமா” என்றார்.
“போகலாம். ஆனால் நேரமாகிவிட்டதே” என்றார் வெளிநாட்டுத் தமிழர். உடனே நண்பர் “We will go by taxi” என்றார். அதற்கு அவர் “அந்தப் படத்தை நான் ஏற்கெனவே பார்த்து விட்டேனே” என்றாராம். இப்படிப் போலித்தனமான ஆங்கில மோகம் கொண்டவர்கள் பலர்.
ஆங்கிலத்தைச் சரியாகப் பயன்படுத்தும் ஆற்றல் பெற்றிருந்தவர் பெருந்தலைவர்.
1962ல் பொதுத் தேர்தல்கள் முடிந்து முடிவுகள் வெளியாகி விட்டன. அந்த சமயத்தில் முதலமைச்சர் காமராசரை சந்திக்க பத்திரிக்கை நிருபர்கள் வந்தார்கள்.
தேர்தலில் தி.மு.க. கட்சி சட்டசபையில் 50 இடங்களைக் கைப்பற்றிவிட்டதைப் பற்றிக் கருத்து கேட்டனர். அதற்கு பெருந்தலைவர் “அதிக இடங்களைப் பிடித்து விட்டார்கள் என்பது உண்மை. ஆனால் நாட்டு மக்களை பிரிக்க நினைப்பதையே கொள்கையாக வைத்துக்கொண்டிருக்கின்ற ஒரு கட்சி எப்படி நல்ல எதிர்க்கட்சியாக விளங்க முடியும்?” என்றார். பிறகு பெருந்தலைவர் ஆங்கில தினசரிகளின் நிருபர்களைப் பார்த்து “நான் நல்ல எதிர்க்கட்சி அல்ல என்று சொன்னேனே. அதில் நல்ல என்பதற்கு ஆங்கிலத்தில் என்ன வார்த்தை போடப்போகிறீர்கள்” என்று கேட்டார்.
ஒரு நிருபர் ‘Good’ என்றார். மற்றொருவர் ‘Strong’ என்றார். தலைவர் திருப்தியடையவில்லை. நிருபர்கள் தங்களுக்குள் கிசுகிசுவென பேசினார்களே தவிர சரியான ஆங்கிலப் பதம் கிடைக்கவில்லை. கடைசியில் காமராசரே ‘Sound’ என்று போட்டால் சரியாக இருக்குமா? என்று கேட்டார். உடனே நிருபர்கள் அனைவரும் மகிழ்வோடு அதனை ஏற்றுக்கொண்டனர்.
ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மத்தியில் அவர்களுக்கே தெரியாத பதத்தை சரியாக எடுத்து பயன்படுத்திய பெருமை பெருந்தலைவரைச் சாரும்.