"

28

பிரெஞ்சு நாட்டுக் கலையரங்கம் ஒன்றில் புகழ்பெற்ற அமைச்சர்கள், வீரர்கள் பலரின் ஓவியங்களை வைத்திருந்தனர். ஒருநாள் அந்த அரங்கத்திற்கு நெப்போலியன் வந்திருந்தார்.

அவரைப் பார்த்து ஒருவர் உலகிலேயே மிகச் சிறந்த படைத்தலைவராக யாரைக் கருதுகிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு நெப்போலியன் எனக்குத் தெரிந்த வரையில் உலகத்திலேயே இரண்டாம் இடம் பெறும் சிறப்புப் படைத்தவர் ஜூலியஸ் சீசர்தான் என்று பதில் தந்தார். தான் மட்டும் தான் மிகச் சிறந்த படை வீரர்களில் முதன்மையானவர் என்ற அசைக்க முடியாத தன்னம்பிக்கை நெப்போலியனுக்கு இருந்ததால் புகழ் பெற்றார். அதே போல பெருந்தலைவரும் தான் நினைத்த காரியத்தைச் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை நிறைந்தவர் என்பதை அறியலாம்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சென்னையில் ராயபுரம் கடற்கரை அப்பகுதி மக்களுக்கு உல்லாசபுரியாக விளங்கியது. ஆங்கிலோ இந்திய பெருமக்கள் அப்பகுதியில் அதிகமாக வசித்து வந்தனர். பகல் பொழுது பல அலுவலகங்களில் பணியாற்றி விட்டு மாலை நேரத்தில் தங்கள் துணைவர்களோடு கடற்கரையில் உலா வருவார்கள்.

ஆனால் அந்த ராயபுரம் கடற்கரையும் அங்கே காதலர்கள் உலாவும் காட்சியும் மறைந்து விட்டது. தொழிற்பெருக்கம், துறைமுகம் விரிவாக்கம் போன்றவற்றால் அவை மறைந்து போயின. இந்தியரா ஆங்கிலேயரா என்று இரண்டு நிலையிருந்த ஆங்கிலோ இந்திய மக்களில் பெரும்பான்மையினர் ஆஸ்திரேலிய நாடு தந்த வரவேற்பை ஏற்றுக்கொண்டு அங்கு குடியேறினர்.

தூய்மையான கடற்கரைக்கு ஏங்கிய சென்னை மக்கள் விரும்பிச் செல்லும் மாலை நேர இடமாக செயின்ட் ஜார்ஜ் கோட்டை எதிரில் அமைந்த பரந்த கடற்கரை கிடைத்தது.

கடற்கரைக்குச் செல்லும் வழியில் ரெயில்வே கிராஸிங் ஒன்று குறுக்கிடும். இதனால் மக்கள் கூட்டம்போக்குவரத்து நெரிசலும் ரெயில்வே கதவடைப்பால் தடைப்படும்.

இந்த தொல்லைகளில் இருந்து மக்களுக்கு வசதி செய்து தரவேண்டும் என்றால் மேம்பாலம் அல்லது தரைவழிப்பாலம் கட்டப்படவேண்டும். வடபுறம் பாரிமுனை இருப்பதால் மேம்பாலம் கட்ட முடியாது. தரைவழிப் பாலம் அமைத்தால்தான் வசதியாகும் என முடிவெடுத்து பொதுப்பணித்துறையினர் ஆய்வுமேற்கொண்டனர்.

ஆய்வின் முடிவில் தரைப்பாலம் கட்டினால் ரிசர்வ் வங்கியின் கட்டிட அடித்தளம் பாதிக்கப்படும். பாலத்தில் நீரூற்று ஏற்படும். அதைக் கட்டுப்படுத்த முடியாது என்று பெருந்தலைவரிடம் விளக்கிக் கூறினார்கள்.

அதற்கு செயல்வீரர் காமராசர் முடியாதுன்னு சொல்றதுக்காகவா டெல்லியிலேயிருந்து வந்தீங்க. தரைவழிப் பாலம் கட்டுறோம். நீங்க சொல்ற எந்தக் குறைபாடும் இல்லாமல் கட்டி முடிக்கிறோம்னு சொல்லி அனுப்பினார்.

பிறகு சரியாகத் திட்டமிட்டு தொழில் வல்லுநர்களோடு கலந்து கட்டிட வல்லுநர்களை வரவழைத்தார். தரைவழிப் பாலம் அமைக்கும் பணியினை ஒப்படைத்தார். எழில்மிகு வசதியான பாலம் உருவானது.

இன்றைய காமராசர் சாலை தரைவழிப் பாலம் உருவான சூழல் இது. இப்படியாக பெருந்தலைவர் ஒரு செயலைக் கருதி விட்டால் அதற்கு எந்தத் தடைவரினும் அதனை ஏற்காது செய்து முடிப்பார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.