"

29

கிராமவாசிகள் இரண்டு பேர் பட்டணத்துக்குப் போனார்கள். பல மாடிக் கட்டிடம் ஒன்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கே இருந்த லிஃப்ட் மூலமாக மேலே போக வயதான பெண்ணொருத்தி ஏறினாள். மீண்டும் கொஞ்ச நேரத்தில் லிஃப்ட் கீழே வந்தது. பதினெட்டு வயது இளம் பெண் ஒருத்தி அதிலிருந்து வெளியே வந்தாள். இருவருக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை. பட்டணத்தில் அதிசயம் நடக்குது; பாத்தியா கிழவி ஒருத்தி கூண்டுக்குள்ளே போனா, கொஞ்ச நேரத்தில் குமரியா மாறி வெளியே வாறாளே என்றான் ஒருவன். இப்படியெல்லாம் வசதி இருக்குன்னு தெரிஞ்சிருந்தா எம் பொஞ்சாதியையும் கூட்டி வந்து குமரியாக்கியிருப்பேனே என்றான் மற்றவன். இப்படி அறியாமையில் மூழ்கிக் கிடப்பவர்கள் மிகுந்த நாடு இது.

முதலில் மக்களின் அறியாமையைப் போக்க வேண்டுமென்று முனைப்புடன் செயல்பட்டார் கர்மவீரர் காமராசர். அனைவருக்கும் கல்வி வழங்கல் என்பதை ஒரு சபதம் போலவே ஏற்றார் அவர். இருநூறு ஆண்டு காலத்தில் பெற்ற கல்வி வளர்ச்சிக்கு மேலான வளர்ச்சியை எட்டாண்டு காலத்தில் வழங்கியவர் காமராசர் என்று கல்வித்துறை அறிஞர் நெ.து.சுந்தரவடிவேலு குறிப்பிடுகிறார். கல்விக்கண் கொடுத்த வள்ளல் என்று பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் பாராட்டுரை வழங்கி உள்ளார். காமராசர் காலத்தில் மட்டும் தமிழகத்தில் தோன்றிய பள்ளிகளின் எண்ணிக்கை 6 ஆயிரம். முந்நூறு பேர் ஜனத்தொகை கொண்ட ஓர் ஊருக்கு ஒரு பள்ளி என்று திட்டமிடப்பட்டு காரியம் நடந்தது. இலவச கல்வித் திட்டமும் மதிய உணவுத் திட்டமும் செயல்படுத்தப்பட்டன. சுமார் 4 லட்சம் என்றிருந்த கற்றோர் எண்ணிக்கை 13 லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டியது. இப்படி உயர்ந்த நோக்கத்துக்காக அவர் செயல்பட்டுக்கொண்டிருந்த போது சாதாரண காரியங்களுக்காக அவரை அணுகி சிரமப்படுத்தியர்வளும் உண்டு. ஓர் ஊரில் சிலர் அவரை அணுகி எங்கள் ஊர் சுடுகாட்டுக்கு நல்ல பாதை போட்டுத்தர வேண்டும் என்று கேட்டார்களாம். காமராசர் கொஞ்சமும் கோபப்படாமல் உயிரோடு இருக்கிறவங்க நல்லா வாழ நான் வழி தேடிக்கிட்டிருக்கேன். நீங்க செத்துப் போனவங்களுக்கு வழி கேட்கிறீங்களே என்று நகைச்சுவையாக பதில் சொன்னாராம்.

ஒவ்வொருவருக்கும் சிறந்த குறிக்கோள் வேண்டும். குறிக்கோள் இல்லாதவர்களின் வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் போன்றது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.