"

3

மற்றவர்களைப் பாராட்டுவதற்குப் பதிலாக அவர்களின் மனதைப் புண்படுத்துவதே சிலருக்கு வாடிக்கையாக இருக்கும். காலையில் ஒருவர் நாயைக் கூட்டிக் கொண்டு வாக்கிங் போனார். எதிரே வந்த ஒருவர் இவரைப் பார்த்து என்ன காலையில் குரங்கை கூட்டிக் கொண்டு எங்கேயோ போற மாதிரி இருக்கு என்றார். குரங்கா? நான் நாயைத்தானே கூட்டிக்கொண்டு போகிறேன் என்றார் அவர்.

நான் உங்களிடமா கேட்டேன், நாயிடமல்லவா கேட்டேன் என்று இவர் சொல்ல, குரங்காகிப்போனவர் கொதித்துப்போனார்.

ஓகோ! நாயிடம் கேட்டீங்களா? சரிதான். இனம் இனத்தோடுதானே பேசும் பதிலுக்கு கடித்தார்.

இப்படி இல்லாமல் மற்றவர்களை மதிக்கவும், பாராட்டவும் கூ டிய பண்பைப் பெறுவதே சிறப்பு. இத்தகைய பண்புகளைப் பெருந்தலைவர் காமராசர் சிறு வயதிலேயே பெற்றிருந்தார். விருதுபட்டியில் ஒரு தடவை வில்சன் என்பவர் வந்து வித்தைகளைச்செய்தார். வீரதீரச்செயல்களைச் செய்தார். மக்கள் வியப்போடு கண்டு களித்தனர். காமராசரும் அங்கு இருந்தார். 144 அடி உயரமான கம்பத்திலிருந்து கீழே குதித்து சாகசம் செய்தார் வில்சன். மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதற்கு மேல் அவர்களுக்கு எதுவும் செய்யத் தோன்றவில்லை. யாரும் எதிர்பாராத வகையில் ஒரு சம்பவம் நடந்தது. கையில் ஒரு முறுக்கு மாலையுடன் சிறுவன் காமராசர் வித்தை அரங்கத்துக்குள் நுழைந்தார். கூட்டம் மீண்டும் ஆரவாரம் செய்தது. முறுக்கு மாலை போடவந்தது தனக்கு பாராட்டா அல்லது அவமதிப்பா என்று தெரியாமல் கடுகடுப்பாக முகத்தை காட்டினார் வித்தைக்காரர்.

ரொம்ப நல்லா வித்தை காட்டினீங்க. இந்தாங்க முறுக்கு சாப்பிடுங்க என்று ஒரு முறுக்கை ஒடித்து வித்தைக்காரர் வாயில் ஊட்டப்போனார் காமராசர். வித்தைக்காரர் நெகிழ்ந்துபோனார். கள்ளங்கபடமற்ற அந்த பாராட்டுரையைக் கேட்டு முறுக்கு மாலையைப் பெற்றுக்கொண்ட வித்தைக்காரர் காமராசரின் முதுகில் தட்டிக்கொடுத்தார்.

இப்படி ஏதாவது ஒரு சாதனையை செய்து மற்றவர்களின் கவனத்தை கவர வேண்டும் என்ற ஆர்வம் சிறு வயதிலேயே காமராசருக்கு உண்டு.

ஒரு நாள் நண்பர்களை அழைத்து வைத்துக்கொண்டு ஒரு முட்டையை நடனமாட வைத்து வித்தை காட்டினார். நண்பர்கள் ஆச்சரியப்பட்டு இது காமராசர் மந்திரம் என்று பாராட்டினார்கள். இதில் மந்திரம் ஒன்றுமில்லை. எல்லாம் நமது மதி நுட்பம்தான் என்று அதை விவரித்தார் காமராசர். முட்டையில் சிறு துளை உண்டுபண்ணி உள்ளே இருப்பதை அப்புறப்படுத்திவிட்டு அதில் பாதரசத்தை ஊற்ற வேண்டும். பிறகு அதை வெயிலில் காய வைத்தால் சூடு ஏற பாதரசம் விரிவடைந்து முட்டை அசையத் தொடங்கும். இதுதான் விஷயம் நண்பர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ஆம் பின்னாளில் காமராசர் திட்டம் என்று ஒன்று வந்தபோது நாடே, உலகே ஆச்சரியப்பட்டதே. அதற்கு அடிப்படை இந்தப் புதுமை உணர்வுதான்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.