32
ஒரு முறை கலைவாணர் என்.எஸ்.கே.யை சந்திக்க ஒருவர் வந்தார். “ஐயா மூன்று வேளை சாப்பாடு போட்டு மாதம் 5 ரூபாய் கொடுங்க நீங்கள் விரும்பும் போதெல்லாம் நாதஸ்வரம் வாசிப்பேன்” என்றார். “அப்படியா சரி” இப்போதே வாசி என்றார் கலைவாணர். வந்தவர் நாதஸ்வரம் வாசித்தார். வாசிப்பில் சுருதி, தாளம், ராகம் எதுவும் அமையவில்லை.
இசையைக் கேட்டுக்கொண்டிருந்த கலைவாணர் அதை நிறுத்தச் சொல்லிவிட்டு நூறு ரூபாய் பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்து “நீர் நாதஸ்வரம் வாசிக்கவில்லை. உமது வறுமையை வாசித்தீர். நன்றாகக் கற்றுக் கொண்டு வந்து பிறகு வாசியுங்கள். இப்போது சாப்பிட்டுவிட்டு போங்கள்” என்றார் கலைவாணர்.
தங்கள் தகுதிகளை உயர்த்திக் கொள்ளாமல் சிபாரிசின் மூலமே முன்னேற வேண்டும் என்று பலபேர் நினைக்கிறார்கள். அதற்கு சில அரசியல்வாதிகளும் ஏஜண்டாக இருக்கிறார்கள். இந்தத் தவறான போக்கிற்கு பெருந்தலைவர் சவுக்கடி கொடுத்த சந்தர்ப்பம் ஒன்று உண்டு.
பெருந்தலைவர் முதல்வராக இருந்த போது அவருக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தன்னுடைய புதல்விக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் வேண்டும் என்று சிபாரிசிற்காகச் சென்றார்.
“ஒவ்வொரு மந்திரிக்கும் பத்து பதினைந்து கோட்டா உண்டாம். உங்களுக்குச் சற்று அதிகமாக உண்டாம்” என்று கேட்டார் வந்தவர். உடனே பெருந்தலைவர் “நீங்கள் படித்தவராக இருக்கிறீர்கள். நான் வெளியூரிலிருந்து வந்ததும் என்னைப் பார்க்க வந்து இருக்கிறீர்கள். விபரம் தெரிந்தவர்களே இப்படி என்றால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? அட்மிஷனுக்கு என்று ஒரு முறை உண்டு. ஒரு கமிட்டி உண்டு. நடுநிலை மனிதர்கள் கமிட்டியில் இருக்கிறார்கள். அவர்கள் தான் அட்மிஷன் குறித்து முடிவு செய்வார்கள். இப்படி ஒரு பக்கம் கமிட்டி அமைத்துவிட்டு இன்னொரு புறம் சிபாரிசு செய்தால் எப்படி? அது நியாயமில்லையே. இப்போது நீங்கள் வெளியே போய், முதல்வரைப் பார்த்தேன். அட்மிஷன் கிடைத்து விட்டது என்று கூறினால் அது பரவி ஒரு தப்பான எண்ணம் ஏற்பட்டுவிடும். மனசாட்சிப்படி முறையோடு நடந்து கொள்ள வேண்டும். அதுதான் நல்லது. முறைப்படி முயற்சி செய்யுங்கள்” என்றார்.