34
ஒரு சமயம் வேலூர் சிறையில் சர்தார் இருந்தார். கடுங்காவல் தண்டனை பெற்ற அரசியல் கைதிகளும் சிறைக்குள்வேலை செய்ய வேண்டும் என்ற விதி இருந்தது. ஆனால் கொடுக்கப்பட்ட வேலைகளைச் சரியாகச் செய்யத் தெரிந்தவர்களால்தான் ஒழுங்காகச் செய்ய முடியும்.
பெரும்பாலான கைதிகள் தொழிலாளியாக இல்லாத காரணத்தினால் கொடுத்த வேலையைச் சரியாக செய்ய முடியாத காரணத்தினால் மூலப்பொருட்கள் அதிக அளவில் வீணாகின.
இது சிறை அதிகாரிகள் கவனத்துக்குப் போனது. கைதிகளை விசாரித்து, அவர்களுக்கு என்ன வேலை செய்யத் தெரியும்? என்று கேட்டு அதன்படி தெரிந்த வேலைகளைக்கொடுப்பது என முடிவானது.
இதை சர்தாரும் அறிந்து கொண்டார். அரசியல் கைதிகளை கடுங்காவல் கைதிகள்போல நடத்துவது சர்தாருக்குப் பிடிக்கவில்லை. மறுநாள் விசாரிக்கப்பட இருந்த நண்பர்கள் மூவரிடம் இரகசியமாய் சில யோசனைகள் கூறினார்.
மறுநாள் அதிகாரிகள் இந்த மூன்று கைதிகளிடமும் என்ன வேலை செய்யத் தெரியும்? என்று விசாரித்தார்கள். ஒருவர் கூட்டத்தில் சொற்பொழிவு செய்யத் தெரியும் என்றார். அடுத்துவர் சத்தியாக்கிரகம் செய்வேன் என்றார். மூன்றாவது ஆள் இறந்து போனவர்களுக்கு கருமாதி சடங்கு செய்வேன் என்றார். துரை கோபப்பட்டு இனி மற்றவர்களை விசாரிக்க விரும்பவில்லை. அரசியல் கைதிகளுக்கு இனிமேல் சிறையில் எந்த வேலையும் கொடுக்க வேண்டாம். கடுங்காவல் கைதிகளையும் வெறும் கைதிகள் போலவே நடத்துங்கள் என்று உத்தரவிட்டார்.
இப்படித் தொண்டர்களுக்காகவும், மக்களுக்காகவும் வாழ்ந்த தலைவர்கள் பலர்; அவர்களில் காமராசரும் ஒருவர்.
பெருந்தலைவரின் தயாள குணம் அவரது பேச்சு, செயல் எல்லாவற்றிலுமே வெளிப்படும். வெளியூர்ப் பொதுக்கூட்டம் ஒன்றில் முதலமைச்சர் காமராசர் வருவதற்காகத்திரளான மக்கள் கூட்டம் அவருக்காகக் காத்துக்கொண்டிருந்தது. மலர் மாலைகளோடு பிரமுகர்களும், தொண்டர்களும் இருப்பதைப் பார்த்த பெருந்தலைவர் “பேச்சு முன்னே மாலை பின்னே” என்று கூறிவிட்டார்.
அதற்கு காமராசர் சரியான காரணமும் சொன்னார். “பொதுமக்கள் நம் கருத்தைக் கேட்பதற்காகத் தான் பொதுக்கூட்டம் நடத்துகிறோம். அவர்களும் வெகு நேரமாக நமக்காக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் முதலில் அவர்கள் நன்மைக்கான விஷயங்களைப் பேசிவிட்டு பிறகு மாலை மரியாதையை ஏற்றுக் கொள்ளலாம்” என்றார் பெருந்தன்மையோடு.
அதேபோன்று மேடையில் அதிக வெளிச்சம் பொதுமக்கள் இருக்கும் பகுதியில் வெளிச்சக் குறைவாகவும்இருந்தால் கடிந்து கொள்வார். மக்களைப் பார்க்கத்தான் வந்தேன். அவர்களது முக உணர்ச்சிகளைப் பார்த்தால்தான் நாம் செய்வது சரியா தவறா என்று தெரியவரும். எனவே விளக்குகளை அவர்களைப் பார்த்துத் திருப்புங்கள் என்பார்.
இப்படி ஒவ்வொரு சிறு விஷயத்திலும் மக்களின் உணர்வுகளைக் கவனித்து அதற்கேற்ப நடந்து கொள்வதால்தான் மக்கள் அவரைப் பெருந்தலைவராக ஏற்றுக் கொண்டார்கள்.