"

35

மற்றவர்கள் மனதைக் கடித்துக் குதறி புண்படுத்தி வேடிக்கை பார்ப்பது நம்மில் பலருக்குக் கைவந்த கலை. அது மனைவியாக இருந்தாலும் விட மாட்டார்கள்.

ஒரு காரில் கணவன், மனைவி இருவரும் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது வழியை மறித்தபடி சில கழுதைகள் படுத்துக்கொண்டிருந்தன. உடனே காரை நிறுத்திய கணவன் மனைவியைப் பார்த்து,

உன்னோட உறவுக்காரங்க எல்லாரும் படுத்திருக்காங்க பார் என்றார். உடனே மனைவி உறவுக்காரங்கதான்; உங்களைக் கல்யாணம் பண்ணின பிறகு வந்த உறவு என்றார்.

இப்படி ஒருவரை ஒருவர் கடித்துக் கொள்வதால் என்ன பயன்? தன்னைப் பழித்துப் பேசியவர்களைக் கூட மனம் நோகாமல் தான் நடந்து கொண்டது மட்டுமின்றி மற்றவர்கள் அவ்வாறு நடப்பதையும் தடுப்பவர் பெருந்தலைவர்.

சென்னை நகர சபைக்குத் தேர்தல் நடந்த சமயம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி நாயுடு தெருவில் காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டம். மேடையில் காமராசர் அமர்ந்திருந்தார்.

காமராசர் திருமணம் ஆகாதவர். குடும்பம் இல்லை. குடும்பம் இல்லாதவருக்கு கஷ்ட நஷ்டம் எப்படித் தெரியும்? என்ன பொறுப்பு இருக்கும்? பொறுப்பு இல்லாதவருக்கு எப்படி ஆட்சியைச் சரிவர நடத்த முடியும்? என்று ஒரு தலைவர் குறை கூறியிருந்தார். அதற்குப் பதிலளிப்பதற்காக எழுந்த ஒரு பேச்சாளர் அந்தத் தலைவரை முன்னிலைப்படுத்தி பதில் கூற முயன்றார். பேச்சின் தரம் வசவாக மாறத் தொடங்கியது.

அதுவரை கேட்டுக் கொண்டிருந்த பெருந்தலைவர் தாங்க முடியாமல் கோபத்துடன் எழுந்து நீங்கள் அதிகம் பேசி விட்டீர்கள். போதும் அமருங்கள் அடுத்தவர் பேசட்டும் என்று கூறி வரம்பு மீறிப் பேச முயன்றவரைத் தடுத்தார்.

தனக்குத் துன்பம் வரும்படி பேசியவர் கூட மனம் நோகக் கூடாது என்று நினைக்கக் கூடிய உயர்ந்த பண்பினைப்பெற்றவர் பெருந்தலைவர்.

யார் மீதும் புழுதி வாரித் தூற்றாதீர்கள். ஒரு வேளை குறி தவறலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். உங்கள் கைகள் அழுக்காகி விடும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.