37
சிலர் சாதி ஒழிப்பு பற்றி ஆரவாரமாகப்பேசுவார்கள். ஆனால் நடைமுறையில் கடைப்பிடிக்கமாட்டார்கள். ‘சாதிகளை ஒழிப்போம், சாதிகளை ஒழிப்போம்’ என்ற ஒரு அரசியல் தலைவர் ஆரவாரமாகப்பேசினார். அப்போது ஒரு தொண்டர் அவர் காதருகே சென்று “நம்ம சாதியையுமா?” என்று கேட்டார். உடனே தலைவர் சுதாரித்துக் கொண்டு நம்ம சாதியைத்தவிர மற்ற சாதிகளை ஒழிப்போம் என்று பேசத் தொடங்கினார்.
வேளாளர் சங்க கல்யாண மண்டபத்தில் ராமமூர்த்தி முதலியார் அரங்கில், நாச்சியப்ப கவுண்டர்தலைமையில், சுப்புநாயக்கர் முன்னிலையில் கருப்பசாமி நாடார் அனுசரணையில் நடக்கிறது சாதி ஒழிப்பு மாநாடு. இந்தப் போலித்தனங்களுக்கு ஆட்படாமல் அமைதிப் புரட்சி செய்தார் பெருந்தலைவர்.
பெருந்தலைவர் அமைத்த மந்திரி சபையில் எம்.பக்தவச்சலம், சி.சுப்பிரமணியம், ஏ.ப.ஷெட்டி, எம்.ஏ.மாணிக்க வேலு நாயக்கர், ராமநாதபுரம் ராஜா, ராமசாமிப் படையாச்சி, பரமேஷ்வரன் ஆகியோர் இடம் பெற்றனர்.
மந்திரிகளுக்கு இலாகாக்களை அளித்ததிலும் பெருந்தலைவர் ஒரு சமுதாயப் புரட்சி செய்தார். அரிசன மந்திரியான பரமேஷ்வரனுக்கு இந்து அறநிலையத் துறையை அளித்தார். மதுவிலக்கு இலாக்காவும் அவருக்கு அளிக்கப்பட்டது. வேண்டும் என்றே பெருந்தலைவர் செய்தாரா என்றெல்லாம் கூட அப்போது பேசப்பட்டது. ஆனால் அவர் இப்படிச் செய்ததன் குறிக்கோள் இலக்குத் தவறவில்லை. அறநிலையத்துறை மந்திரியாகப் பரமேஷ்வரனை ஆக்கியதன் மூலம், தமிழ் நாட்டிலுள்ள கோவில் தர்மகர்த்தாக்கள் ஒரு அரிசனுக்கு மதிப்பையும் மரியாதையும் அளிக்கும் நிலையைக் காமராசர் உருவாக்கினார்.
இப்படிச்செய்ததால் அரிசன மக்களுக்கு பெருந்தலைவர் ஒரு விடிவெள்ளியாகக் காட்சியளித்தார். புதிய சமுதாயத்தில் தங்கள் சமூகம் பெருந்தலைவர் மூலம் பெருமை பெற்றுவிட்டதாக அவர்கள் எண்ணி மனம் மகிழ்ந்தனர்.