38
கோயில்களில் சுண்டல் கொடுப்பவர் நம்மவராய் இருந்தால் நாம் வரிசையில் நிற்கு வேண்டியதில்லை. நாம் நிற்கும் இடத்துக்கு சுண்டல் வரும். சுண்டல் விநியோகத்திலே இப்படிச் சுரண்டல் நடந்தால் பொதுச் சொத்துகளைப் பாதுகாக்கும்அதிகாரம் படைத்தவர்களின் நிலை என்ன? அதிகாரத்தில் இருப்பவர்களின் வீட்டு நாய்களுக்குக் கூட ஆடம்பரமான உணவு கிடைக்கும்.
வட நாட்டிலிருந்து தென் நாட்டுக்கு வந்திருந்த ஒரு எம்.எல்.ஏ., இங்குள்ள ஒரு எம்.எல்.ஏ., வீட்டில் தங்கினாராம். பங்களாவைப் பார்த்தவர் “இவ்வளவு செலவு செய்து எப்படிக் கட்டினீர்கள்” என்று கேட்டாராம். அதற்குத் தென்னாட்டுக்காரர் அவரை அழைத்துச் சென்று “அதோ ஒரு பாலம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறதே அதில் பாதிதான் இந்த பங்களா” என்றாராம். பின்தென்னாட்டுக்காரர் வடநாட்டுக்குப் போனபோது “என் பங்களாவைவிடப் பெரியதாக இருக்கிறதே எப்படிக் கட்டினீர்கள்” என்று கேட்டபோது, அவரை மாடிக்கு அழைத்துப்போன வடநாட்டு எம்.எல்.ஏ., “அதோ ஒரு பாலம் தெரிகிறதா?” என்று கேட்க இவர் “தெரியவில்லையே” என்று சொல்ல, “ஆமாம் அந்த முழுப் பாலம் தான் இந்த பங்களா” என்றாராம். ஆனால் பெருந்தலைவர் தனது தாயாரின் பராமரிப்புக்குக் கூட அளவாகத்தான் பணம் கொடுத்தார்.
பெருந்தலைவர் தன் தாயின் செலவுக்கு மாதம் ரூ.120 கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். பெருந்தலைவர் முதல்வர் ஆன பிறகு அவர் தாயாருக்கு செலவுக்குக் கொடுத்த பணம் போதவில்லை. அதன் காரணமும் உருக வைக்கக் கூடியதுதான்.
“அய்யா முதல்வராக இருப்பதால் என்னைப் பார்க்க யார் யாரெல்லாமோ வருகிறார்கள். அப்படி வருபவர்களுக்கு காபி, சோடா, கலர் கூட கொடுக்காமல் எப்படி அனுப்புவது? எனவே அய்யாவிடம் சொல்லி மாதம் 150 ரூபாய் கிடைக்க ஏற்பாடு செய்தால் நலமாக இருக்கும்” என்றாராம். இந்த விஷயம் பெருந்தலைவரிடம் சொல்லப்பட்டது. ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. “யார் யாரோ வருவார்கள். உண்மைதான். அவர்கள் சோடா, கலர் கேட்கிறார்களா? அவர்களுக்கு ஒன்றும் கொடுக்க வேண்டாம். தவிர கையில் கொஞ்சம் ரூபாய் போய்ச் சேர்ந்தால் அம்மா எங்காவது கோவில், குளம் என்று போய் விடுவார்கள். வயதான காலத்தில் வெளியூர் போவது நல்லதல்ல. எனவே இப்போது கொடுத்து வரும் 120 ரூபாயே போதும்” என்று சொல்லிவிட்டார்.
அதே போலவே பெருந்தலைவரின் தங்கை மகன் ஜவகருக்குத் திருமண ஏற்பாடு நடந்தது. எனவே வீட்டில் உடனடியாக ஒரு கழிப்பறை கட்ட வேண்டும். அதற்குத் தோதாக வீட்டை ஒட்டிய ஒரு இடம் விலைக்கு வந்தது. அதன் விலை 3000 ரூபாய். எனவே இதை அய்யாவிடம் சொல்லி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தலைவரின் தாயார் விரும்பினார்.
ஒரு முதலமைச்சரின் வீட்டில் இந்த வசதி கூட இல்லாவிட்டால் எப்படி? இந்தச் செய்தி தலைவரிடம் கூறப்பட்டது.
அதற்குத் தலைவர் “கழிப்பறைக்கு நான் இடம் வாங்கினால் ஊரில் உள்ளவன் நான் பங்களா வாங்கி விட்டதாகப் பத்திரிக்கைகளில் கூட எழுதுவார்கள் எனவே அதெல்லாம் வேண்டாம்” என்று மறுத்துவிட்டார். மீண்டும் மீண்டும் வற்புறுத்திய பிறகே அவரின் அனுமதி கிடைத்து தாயாரின் விருப்பப்படி அந்த இடமும் வாங்கப்பட்டது.