40
கடைத்தெருவில் இரு நண்பர்கள் சந்தித்தனர். “எப்படி இருக்கே, பொருளாதாரமெல்லாம் எப்படி?” என்றான் ஒருவன். “நான் நல்ல வசதியா இருக்கிறேன்.” “கடன் கிடன் உண்டா?” “இல்லே.” “பேங்கிலே பணம் போட்டு வச்சிருக்கியா” “ஆமாம்” “கையிலே பையிலே?” என்றான். “பணத்துக்கு பஞ்சம் இல்லை. ஆமாம் ஏன் இவ்வளவு விளக்கமா கேட்கிறே” என்றான் மற்றவன்.
“சும்மாதான் ஒரு நூறு ரூபா கைமாத்து வேணும். முன்னாடியே கேட்டுட்டா அடடே. இப்ப பணம் இல்லையேன்னு பலபேரு கை விரிச்சிடறாங்க. அதுதான் இப்படி விசாரிச்சுட்டு கேட்டேன். தர்றியா” என்றான்.
இப்படி நண்பர்களைக் கூட சமயம் பார்த்துத் தலையைத் தடவுகிற மனிதர்கள் மத்தியில் தன்னை எதிர்ப்பவர்களைக் கூட நேசித்தவர் பெருந்தலைவர்.
ராஜாஜி முதல்வராக இருந்து குலக்கல்வித் திட்டத்தை உருவாக்கி வந்த நேரம். ஒரு நாள் காலை 7 மணியளவில் திருப்பூர் வின்செண்ட், காமராசரை அவரது வீட்டில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். ராஜாஜியின் தன்னிச்சைப்போக்கால் வருத்தமடைந்து இருந்தார் பெருந்தலைவர். அதை வின்சென்டிடம் கூறிக்கொண்டிருந்தார்.
அன்று தலைவருக்கு உடல்நலக் குறைவாக இருந்தது. அந்தச் சமயத்தில் உதவியாளர் வைரவன் ஓடி வந்து இராஜாஜி வந்து கொண்டிருக்கிறார் என்ற தகவலைக் கூறினார். என்ன பெரியவரா? அவர் படியேற வேண்டாம். நானே கீழே வருகிறேன் என்று கூறி விட்டு, கட்டிலில் இருந்து துள்ளி எழுந்து கீழே வந்து விட்டார்.
ராஜாஜி காரில் இருந்து இறங்கிக் கொண்டே “என்ன உடம்புக்கு” என்று கேட்டார். கைகூப்பி வணக்கம் தெரிவித்த பெருந்தலைவர், “நான் நல்லாத்தான் இருக்கிறேன். சொல்லி அனுப்பி இருந்தா நானே வந்திருப்பேனே” என்றார்.
“எனக்கு வேறு எந்த விசேஷமும் இல்லை. உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு இப்பத்தான்கேள்விப்பட்டேன். உடனே வந்துட்டேன். வாங்கோ” என்றவாறு இராஜாஜி வீட்டிற்குள் வந்தார்.
கீழே இருந்த ஒரு தனியறையில் இருவரும் பத்து நிமிடம் பேசினர். பிறகு இருவரும் வணக்கம் தெரிவித்துக்கொண்டனர். ராஜாஜி விடைபெற்றார். பிறகு பெருந்தலைவர் வின்சென்டைப் பார்த்து, “பாவம் பெரியவர், ரொம்ப தளர்ந்து தெரியறார். பொறுப்புன்னா சும்மாவா?” என்றார். பெருந்தலைவரின் இதயத்தில் உள்ள பாசத்தையும் மரியாதையையும் இதன் மூலம் காணலாம்.