41
ஒரு பெண்மணி வீட்டின் ஜன்னல் ஓரத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். கழுத்தில் தங்கச் சங்கிலி கிடந்தது. ஒரு திருடன் ஜன்னல் வழியாகக் கையை விட்டு சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடி விட்டான். ஆனால் போலீசாரிடம் மாட்டிக் கொண்டான். வழக்கு நடந்தது. ஐந்து ஆண்டுகள் ஜெயில் தண்டனை கொடுத்து நீதிபதி தீர்ப்புக் கூறினார். குற்றவாளிக் கூண்டில் நின்று கொண்டிருந்த திருடன் நீதிபதியைப் பார்த்து சாமர்த்தியமாக “ஐயா! திருடியது எனது வலது கைதான், அப்படியிருக்க எனது உடல் முழுவதற்கும் தண்டனை கொடுப்பது சரியல்ல. வேண்டுமானால் என் கைக்கு மட்டும் தண்டனை கொடுங்கள்” என்றான். அவன் வழியிலேயே சென்று அவனை மடக்க நினைத்த நீதிபதி சரி உனது வலது கைக்கே தண்டனை கொடுக்கிறேன். அது உனது உடம்பில்தானே உள்ளது. வெட்டி எடுத்துக்கொள்ளலாமா என்றார்.
“அந்த சிரமம் உங்களுக்க வேண்டாம். நானே தருகிறேன்” என்றபடி செயற்கைக் கையைக் கழட்டிக்கொடுத்துவிட்டு நடையைக் கட்டினான் திருடன். இப்படி சமுதாயத்திலும் சட்டத்தை ஏமாற்றுகிற பெரிய மனிதர்கள் உண்டு.
உயர்ந்த பதவியில் இருந்தாலும் சட்டத்தின் உயர்வுக்கு மதிப்புக் கொடுத்தவர் பெருந்தலைவர் காமராசர். அவர் முதலமைச்சராக இருந்தபோது இப்படி எத்தனையோ சம்பவங்கள் நடந்ததுண்டு. ஒரு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் திரைப்பட அரங்கம் ஒன்றைக் கட்டியிருந்தார். ஆனால் அதைத் திறப்பதற்கு மாவட்ட ஆட்சியாளரின் அனுமதி கிடைக்காமலேயே இருந்தது. அந்த மாவட்டத்தில் காமராசர் சுற்றுப்பயணம் செய்யப்போகிறார் என்பதை அறிந்துகொண்ட அந்தப் பிரமுகர் காமராசரை அணுகி திரையரங்கத்தைத் திறக்க ஒரு தேதி வாங்கி விட்டார். அதற்குப் பயந்து கலெக்டர் அனுமதி வழங்கி விடுவார் என்பது அந்தப் பிரமுகரின் எண்ணம். குறிப்பிட்ட நாள் வந்தது. காமராசரும் அந்தத் திரையரங்கத்திற்கு வந்து சேர்ந்தார். அது வரையிலும் அனுமதி கிடைக்காததால் “எல்லா ஏற்பாடுகளும் ரெடி; ஆனா கலெக்டர் மட்டும் இன்னும் லைசென்சு கொடுக்கவில்லை” என்று காமராசரிடம் புகார் செய்தார் அந்தப் பிரமுகர். சுற்றுப் பயணத்தில் தன்னோடு இருந்த கலெக்டரிடம் விவரம் கேட்டார் காமராசர். “இந்தத் திரையரங்கைக் கட்டியதில் சில விதிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன. அதனால்தான் அனுமதி கொடுக்கத் தாமதமாகிறது. இப்போது நீங்கள் விரும்பினால் உடனே அனுமதி கொடுத்து விடுகிறேன்” என்றார் கலெக்டர். உடனே காமராசர் “அய்யய்யோ வேண்டாம் சட்டத்தை மீறி யார் நடந்தாலும் அது தப்புதான். உங்களுக்கு திருப்தி ஏற்பட்ட பிறகே அனுமதி கொடுங்கள்” என்று கலெக்டரிடம் சொல்லிவிட்டுத் திரையரங்கத்தைத் திறக்காமலேயே சென்று விட்டார். தனது செல்வாக்கைக் காட்டி கலெக்டரை மடக்கி விடலாம் என நினைத்த பிரமுகர் ஏமாந்து நின்றார்.
பயிர்களைச் சுமந்து நிற்கும் போது நிலம் அழகுபெறுகிறது. தாமரையைச் சுமந்து நிற்கும்போது குளம் அழகு பெறுகிறது. நாணத்தைச் சுமந்து நிற்கும் போது பெண் அழகு பெறுகிறாள். நேர்மையைச் சுமந்து நிற்கும்போது தலைவன் அழகு பெறுகிறான்.