44
ஒரு நிறுவனம் இப்படியொரு விளம்பரம் செய்திருந்தது.
“நீங்கள் ஒரு வாரத்தில் லட்சாதிபதி ஆகலாம். அந்த ரகசியத்தை உங்களுக்கு எழுதி அனுப்புகிறோம். ஐந்து ரூபாய் கட்டணத்துடன் விண்ணப்பிக்கவும்.” லட்சாதிபதி ஆகும்ஆசையில் பலர் விண்ணப்பம் செய்தனர். எல்லோருக்கும் ஆலோசனை கூறிக் கடிதம் வந்தது. அதில் குறிப்பிட்டிருந்த வாசகம்,
“எங்கள் விளம்பரத்தைப் பார்த்து ஆயிரக்கணக்கான பேர் விண்ணப்பம் செய்ததால் இந்த ஒரு வாரத்தில் எங்களுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல்சேர்ந்து விட்டது. நீங்களும் இது போன்ற வழிகளைப் பின்பற்றினால் லட்சாதிபதி ஆகலாம்.” விண்ணப்பம் செய்தவர்கள் மண்டையைப் பிய்த்துக்கொண்டார்கள். இதைப்போலவே இன்னொரு விளம்பரம் “எலித் தொல்லையிலிருந்து நீங்க எளிய வழி. ஐந்து ரூபாயுடன் விண்ணப்பிக்கவும்.”
விண்ணப்பித்தவர்களுக்கு வந்த பதில்:-
“எலித் தொல்லையுள்ள இப்போதைய உங்கள் பழைய வீட்டை மாற்றிவிட்டு எலிகள் இனம் வராத புத்தம் புதிய வீட்டுக்குக் குடிபோகவும்.” இப்படி ஏமாற்றுகிறவர்கள் தான் சமுதாயத்தில் அதிகம்.
நம்பிக்கையின் நாயகமாகத்திகழ்ந்தவர்பெருந்தலைவர் காமராசர். அவர் முதல்வராய் இருந்த காலத்தில் சென்னை பூவிருந்தவல்லிக்கு அருகில் பார்வையற்றோர் பள்ளி ஒன்று இயங்கி வந்தது. தனியார் அறக்கட்டளையைச்சேர்ந்த அந்தப் பள்ளி அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பல ஏக்கர் பரப்பைக்கொண்டிருந்த அந்தப் பள்ளி வளாகம் அப்போதைய அமைச்சர் ஒருவரின் கண்ணில் பட்டு விட்டது. அந்தப் பள்ளியை வேறு ஒரு இடத்துக்கு மாற்றிவிட்டால் அந்த இடத்தை வேறு காரியத்துக்குப் பயன்படுத்தலாம் என்று அவர் திட்டமிட்டார். இதை அறிந்ததும் காமராசர் கொதித்துப்போய்விட்டார். மாற்றும் முயற்சியைத் தடுத்து நிறுத்தினார். அப்போது அவர் கூறினார்.
“மற்றவர்கள் மேல் நம்பிக்கை வைக்காமல் நம்மிடம் (அரசிடம்) நம்பிக்கையோடு கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்கள். இந்தப் பள்ளியை நடத்தாமல் போனால் மட்டும் நம்பிக்கைத் துரோகம் என்பதல்ல. இந்த இடத்தை மாற்றினாலே நம்பிக்கைத் துரோகம்தான். அரசிடம் ஒப்படைக்கப்பட்ட அறக்கட்டளையே சரியா நடக்கவில்லை என்றால் மற்றவர்கள் எந்த நம்பிக்கையோடு அறக்கட்டளைகளை நிறுவ முன்வருவார்கள். சாமர்த்தியமான பேச்சு நம்பிக்கையைக் காப்பாற்றாது. நாணயமாக நடக்கணும். அப்போது தான் நாலுபேர் நம்புவார்கள்.”
ஒருமுறை ஏழுத்தாளர் சாவி காமராசரைச் சந்தித்து புராண இதிகாசங்களை மக்கள் மத்தியில் பரப்ப குழு அமைப்பது பற்றிக் கலந்து பேசினார். அவருக்குக் காமராசர் சொன்ன அறிவுரை–
“நல்லா செய்யுங்க. இதுல கட்சிக்காரங்க யாரையும் சேர்த்துக்காதீங்க. நம்பிக்கைத் துரோகம் நடந்திடும்.”
“முயற்சியுடையோர்க்கு அவர் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்.”
தொழிலாளர்களுக்கு அவர் ஒரு தோன்றாத்துணை. சோம்பித் திரியும் மனிதருக்கு அவர் ஒரு தூண்டுகோல்.
முன்னேறத் துடிக்கும் சமுதாயத்திற்கு அவர் ஒரு சிறந்த தலைவர் என்று முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்கள் காமராசரைப் புகழ்கின்றார்.