45
அலங்கார நடையில்பேசுவது மட்டுமல்ல. அவசியமானதைப் பேசுவதும் சிறந்த சொற்பொழிவுதான். சிலர் சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாமல் ஏதேதோ சொல்லிக் கொண்டிருப்பார்கள். பிரமுகர் ஒருவரை அந்த ஊர்ப் பள்ளிக்கூடத் திறப்பு விழாவுக்கு அழைத்திருந்தார்கள். “உங்கள் ஊருக்குப் பள்ளிக்கூடம் வந்துவிட்டது பாராட்டுக்குரியது. நீங்கள் எல்லோரும் இதை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று பேசினார். ஆனால் ஓர் ஊரில் பைத்தியக்கார ஆஸ்பத்திரி திறப்பு விழாவிற்கு அதே பிரமுகரை அழைத்திருந்தார்கள். “இந்த ஊருக்கு பைத்தியக்கார ஆஸ்பத்திரி வந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. நீங்கள் எல்லோரும் இதை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று பேசியபோது கூட்டத்தினர் திகைத்துவிட்டனர்.
சூழ்நிலைக்கேற்றவாறு சுருக்கமாகவும், சுருக்கென்றும் பேசக்கூடியவர் காமராசர். மூதறிஞர் ராஜாஜி அவர்கள் தமிழக முதலமைச்சராய் இருந்தபோது மதுரையில் டி.வி.எஸ் நிறுவன கட்டிடத்திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார். அந்த விழாவில் காமராசரும் கலந்து கொண்டார். ராஜாஜி அவர்கள் பேசும்போது, “ஸ்ரீமான் டி.வி.சுந்தரம் அய்யங்கார் தாம் வயோதிகம் அடைந்த பின் தொழிலைத் தமது புதல்வரிடம் ஒப்படைத்து விட்டார். இளைஞர்களிடம் இப்படி பொறுப்பை ஒப்படைப்பது பாராட்டுக்குரியது” என்று குறிப்பிட்டார். பின்னர் பேசிய காமராசர் இவ்வாறு குறிப்பிட்டார். “வயதானவர்கள் இளைஞர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று இராஜாஜி கூறியதை நானும் வரவேற்கிறேன். தொழில் வர்த்தகத்துறைகளில் மட்டுமல்ல. அரசியலிலும் கூட வயோதிகர்கள் அந்த வழியைப் பின்பற்றினால் நாட்டுக்கு நன்மை உண்டு.” இதைக் கேட்டதும் கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சியில் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
ஒரு முறை சேலம் மாட்டம் ஆத்தூரில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடந்து கொண்டிருந்தது. பெருந்திரளாகக் கூடியிருந்த பெண்கள் பகுதியில் பேச்சு சத்தம் அதிகமாக இருந்தது. அமைதியாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தும் பயன் இல்லை. காமராசர் கூட்டத்துக்கு வந்த பிறகும் இந்த நிலை நீடித்தது. காமராசர் கைமக் முன் சென்று “தாய்மார்களே ரொம்ப நாளைக்கு அப்புறம் இங்கு தெரிஞ்சவங்களையெல்லாம் சந்திக்கிறீங்கன்னு நெனைக்கிறேன். அதனால நீங்களெல்லாம் உங்கள் பிரச்சினைகளைப் பேசி முடியுங்கள். அதற்குப் பிறகு மாநாட்டை நடத்திக் கொள்வோம்” என்றார். பெண்கள் பகுதியில் பேச்சு சத்தம் கப்சிப் என்று அடங்கியது.
சொற்கள் நமது சிந்தனைகளின் உடைகள், அவைகளை கந்தல்களாகவும், கிழிசல்களாகவும் அழுக்காகவும் அணியக் கூடாது.