47
ஒருவர் தன்னுடைய நண்பரின் பிறந்த நாளுக்குப் போகமுடியாததால் பரிசுப் பொருளை அனுப்ப நினைத்தார். ஒரு கிளியை நன்றாகப் பேசப்பழக்கியிருந்தார். அந்தக் கிளியையே பரிசுப்பொருளாக அனுப்பி வைத்தார். கொஞ்ச நாள் கழித்து கிளி எப்படி இருக்கிறது என்று விசாரித்து கடிதம் எழுதினார். “மிகவும் சுவையாக இருந்தது. இன்னொரு கிளி அனுப்பி வைக்கவும்” என்று பதில் வந்தது. பேசுங்கிளியை அனுப்பி வைத்த நண்பர் நொந்தே போனார்.
இப்படிப்பட்ட மனிதர்கள் மத்தியில் பறவைகளிடம் பாசம் காட்டியவர் பெருந்தலைவர் காமராசர். ஒருமுறை அவர் தமது அறையில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அவரைப் பார்க்கப்போன தங்கவேலன் என்பவர் எதைத் தேடுறீங்க அய்யா என்று கேட்டார். “செய்தி கேட்பதற்காக வைத்திருந்த டிரான்சிஸ்டர் ரேடியோ ரிப்பேராப்போச்சு. பழைய ரேடியோ ஒண்ணு உண்டு. அதை எங்க வச்சேன்னு தெரியல. ரொம்ப நாளா அதைப்பார்க்கவே இல்லை. எங்க இருக்கோ” என்று சொல்லிக்கொண்டே தேடினார். திடீரென்று அவர் முகத்தில் பிரகாசம் தென்பட்டது. இதோ இங்க இருக்கு என்றவர் எதையோ உற்றுப்பார்த்து விட்டு திகைத்தார். ரேடியோவின் பின்பகுதி திறந்து கிடந்தது. ஒரு குருவி அதில் கூடு கட்டி இருந்தது. குஞ்சுகளும்இருந்தன. என்ன செய்யலாம் என்று பெருந்தலைவர் யோசித்துக் கொண்டிருந்தபோது அவரைப் பர்க்க வந்த நண்பர், “அய்யா கவலைப்படாதீர்கள் குருவிக்கூட்டை அப்புறப்படுத்திவிட்டு ரேடியோவை சரி செய்து தருகிறேன்” என்றார். வங்கதேச விடுதலைப்போர் உச்சகட்டத்தை அடைந்திருந்த நேரம். இந்திய ராணுவம் வங்க தேசத்துக்கு உதவியாகப் போரில் குதித்துவிட்ட நேரம். பரபரப்பாக செய்திகள் வந்து கொண்டிருந்தது. உடனே செய்திகளைக்கேட்க பெருந்தலைவருக்கு ஆவல்தான். ஆனாலும் குஞ்சுகளோடு இருந்த குருவிக் கூட்டைக் கலைக்க காமராசருக்கு மனம் வரவில்லை. அதை ஒன்றும் செய்ய வேண்டாம் என்றவர் தனது அந்தரங்கச்செயலாளர் வெங்கட்ராமனை அழைத்துக் குஞ்சுகள் பெரிதாகி குருவி தன் கூட்டை விட்டுக் காலி செய்கிறவரை அங்கேயே இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும என்று உத்தரவு போட்டார். குருவியிடம கூட அவர் காட்டிய கருணையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
மனிதர்கள் மட்டுமல்ல மற்ற உயிர்களையும் நேசிக்கத் தெரிந்தவர்களே மாமனிதர்கள் ஆக முடியும்.