55
சூழ்நிலைக்குத தக்கபடி பாரபட்சம் காட்டுகின்ற குணம் பலரிடம் உண்டு.
ஒரு பெண்மணி ஒரு ஜவுளிக்கடைக்குள் நுழைந்தாள். சீக்கிரமாக ஒரு சேலை கொடுங்கள் என்றார். கடை ஊழியர் நூற்றுக்கணக்கான சேலைகளை அள்ளிப்போட்டு செலக்ட் பண்ணுங்கள் என்றார். அதற்கெல்லாம் நேரமில்லை. நீங்களே ஏதாவது ஒன்றை எடுத்துப்போடுங்கள் என்றார் அந்த பெண்மணி. நாங்களாக எடுத்துக்கொடுத்தால் ஏதாவது குறை சொல்வீர்கள். கலர் பிடிக்க வேண்டும் தரத்தைப் பார்க்க வேண்டும என்று நீட்டிக் கொண்டே போனார் கடைக்காரர்.
“அதைப்பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை. சுமாரான விலையில் ஒரு புடவையை நீங்களே எடுத்துக் கொடுங்கள். ஏன்னா புடவை எனக்கில்லை. என்னோட நாத்தனாருக்கு. அவளுக்குப் பிறந்த நாளாம். புடவை எடுக்கச்சொல்லி அடம் பிடிக்கிறார் என் வீட்டுக்காரர்” என்றார் அந்தப் பெண்மணி.
தன்னோடு கொள்கையில்வேறுபட்டிருந்தாலும் அவர்களோடும் பாரபட்சம் காட்டாமல் பழகியவர் பெருந்தலைவர் காமராசர். இவரும் மூதறிஞர் இராஜாஜி அவர்களும் கொள்கையில் வேறுபட்டு நின்றவர்கள். இராஜாஜி சுதந்திரக் கட்சியைத் தொடங்கிய நேரம். அரசியல் மோதல் உச்சகட்டத்தை எட்டியிருந்த வேளை சென்னை இல்லத்தில் கட்சித் தொண்டர்களோடு இராஜாஜி குறித்து விவாதம் செய்துகொண்டிருந்தார் பெருந்தலைவர் “மூதறிஞர்” அவரைத் தேடி அங்கு வருகிறார் என்ற செய்தி அறிந்ததும் முன் வாசலுக்கே ஓடி வந்து வரவேற்றார் பெருந்தலைவர்.
“ஐயா, வணக்கம். நீங்க இங்க வரணுமா? சொல்லலி விட்டிருந்தா நானே ஓடி வந்திருப்பேன். உங்களது அறிவுக்கும் அனுபவத்திற்கும் நீங்கள் என்னைத் தேடி வருவதா” என்று துடித்தார் தலைவர். அதைக்கண்டு இராஜாஜியே உருகிப்போனார். தமது கடைசி காலத்தில் இராஜாஜி தமது கட்சியினருக்கே காமராசர்தான் தலைவர். சுதந்திரக் கட்சியினர் அவரிடமே ஆலோசனை கேட்டுச்செயல்பட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தார்.
பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ஜீவா அவர்கள் காமராசர் அவர்களோடு கொள்கையில் மாறுபட்டு நின்றவர்தான். ஆனாலும் அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறுதி நிலை வந்த நேரத்தல் அவர் சொன்ன வார்த்தைகள் “என் மனைவிக்குத் தந்தி கொடுங்கள் காமராசருக்குப் போன் செய்யுங்கள்.”
டாக்டர் கலைஞர் அவர்கள் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அவரின் அன்னையார் இயற்கை எய்தினார். அதை அறிந்ததும் பெருந்தலைவர் விரைந்து அவர் இல்லம் சென்று அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார்.
காதலைப் பற்றி குறுந்தொகை கூ றும் கருத்து இது
“நிலத்தினும் பெரிதே
வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே”
இதனையே பெருந்தலைவரின் கருணைக்கும் ஒப்பிட்டுச் சொல்லலாம்.