58
தேர்வுக் காலங்களில் மாணவர்கள் பாடங்களை நம்புவதை விட அதிகமாக கடவுளைத்தான் நம்புவார்கள். கொஞ்சமாகப் படித்திருக்கிறேன். அதற்குள்ளேயே கேள்வி வரவேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள். படிக்காமலேயே இருந்தவிட்டு பாஸ் பண்ணினால்தேங்காய் உடைப்பதாக பிள்ளையாரிடம் வேண்டிக் கொள்வார்கள்.
ஆனால் ஒருமாணவர் பிள்ளையாரிடம் வேண்டியது வினோதமாக இருந்தது. “பிள்ளையாரப்பா எல்லாக் கேள்விகளையும் படித்துவிட்டேன். எந்தக் கேள்வி கேட்டாலும் எழுதிவிடுவேன். நூற்றுக்கு நூறு மார்க் வாங்கிவிடுவேன். அந்த நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும் உன் துணை வேண்டும். ஏன் தெரியுமா? எனக்கு காக்காய் வலிப்பு நோய் உண்டு. பரிட்சை எழுதும்போது அந்த நோய் வந்து விடாமல் நீதான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.” ஆக மனிதனுக்கு நம்பிக்கை, முயற்சி, உழைப்பு என்று எவ்வளவு இருந்தாலும் அவனையும் மீறி சில காரியங்கள் நடந்து விடுகின்றன. அங்கேதான் அவனுக்கு மீறிய சக்தி ஒன்று உண்டு என்பது உண்மையாகிறது.
ஆலயங்களுக்கு அடிக்கடி சென்று வழிபாடு செய்யாவிட்டாலும் ஆன்மீக உணர்வு கொண்டவர் பெருந்தலைவர். காமராசரை ஆன்மீகத்தில் கண்ணன் என்று வர்ணித்தார் கவிஞர் கண்ணதாசன். காமராசரின் பக்தி எனும்போது கடவுள் பக்தி, தேசபக்தி, குருபக்தி என்று மூன்று கோணங்களில் அமையும். பெருந்தலைவரின் ஆட்சிக் காலத்தில் புராண இதிகாசங்களைப் பரப்பும் திட்டம் ஒன்று செயல்பட்டது. சத்யசபா என்ற பெயரில் ஒரு மன்றம் நிறுவப்பட்டு அதன் வழி கதாகாலட்சேபங்கள் நடத்தப்பட்டன. அயராத பணிகளுக்கு நடுவேயும் பெருந்தலைவர் வருகை தந்து ஊக்கம் தந்தார். பிற மதங்களையும் மிகவும்மதித்தவர், பேணியவர் பெருந்தலைவர்.
திருமுருக கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவின் போது ஒரு சுவையான நிகழ்ச்சி நடந்தது. அன்றைய நிகழ்ச்சிக்கு பெருந்தலைவர் வரப்போகிறார் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்த வாரியார் சுவாமிகள் சமயம் பார்த்து ஒரு செய்தியினை வெளியிட்டார். எந்தக் காரியத்தை ஒப்படைத்தாலும் அதைச் சிறப்பாக செய்து முடிப்பவர் ஆஞ்சநேயர். காரணம் அவர் ஒரு பிரம்மச்சாரி. பிரம்மச்சாரிகள்தான் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட காரியத்தைச் சரியாகச் செய்யக்கூடிய ஆற்றலும் வல்லமையும் பெற்றவர்கள். அது அந்தக் காலத்தில மட்டுமல்ல. இந்தக் காலத்துக்கும் பொருந்தும். இப்படி அவர் சொல்லிக் கொண்டிருந்தபோதே பெருந்தலைவர் அங்கு வந்து கொண்டிருந்தார். செய்தி சூழ்நிலைக்குப் பொருத்தமாக அமைந்ததால்மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். பிரம்மச்சாரி என்று நான் குறிப்பிட்டது யார் என்பதை நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என்று வாரியார் குறிப்பிட்டதும் மக்களின் ஆரவாரத்துக்கு அளவே இல்லை.
“பக்தி உடையார் காரியத்தில் பதறார். வித்து முளைக்கும் தன்மையைப் போல் வினைகளை முடிப்பர்” என்கிறார் பாரதியார். அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் பெருந்தலைவர்.