"

6

ஒரு வீட்டில் இரவு சாப்பாடு நேரம் முடிந்ததும் குடும்பத்தார் அனைவரும் மொட்டைமாடிக்கு வந்தனர். குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்கள் சந்தேகங்களைக் கேள்வியாகக் கேட்க தந்தை பதில் கூறினார்.

ஒரு சிறுவன் வானத்துலே இவ்வளவு நட்சத்திரம் இருக்குதே எதுக்குப்பா என்றான்.

ராத்திரியானா வரத்தான்செய்யும் என்றார் அப்பா.

இல்லைப்பா அதுக்கு ஒரு காரணம் கட்டாயம் இருக்கும் என்ற பையன் அம்மாவிடம் அதே கேள்வியினைக்கேட்டான்.

தெரியவில்லைப்பா. நீயே சொல்லிவிடு என்றார் அம்மா. உடனே அச்சிறுவன் இரவு நேரத்தில யாராவது தவறு செய்கிறார்களா என்று ஆண்டவன் கோடிக்கணக்கான கண்களைக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கிறான். அதுதான் நட்சத்திரங்கள் என்றான் பையன்.

இப்படிப்பட்ட புத்திசாலிக் குழந்தையாகத் தான் பெருந்தலைவர் காமராசரும் வளர்ந்தார்.

காமராசரின் தாய்மாமன் கருப்பையா நாடார். இவர் நாட்டாமை, கிராம முன்சீப், கோவில் தர்மகர்த்தா எனப் பலப் பதவிகளை வகித்தவர். மாலையில் ஐந்து கோவில்களுக்கு வரிசையாகப் போய்விட்டு அவரது ஜவுளிக்கடைக்கு வருவார்.

விருதுபட்டியில் உள்ள நாடார்களில் பெரும்பாலோர் வியாபாரத்தில் நாட்டமுடையவர்கள். அரசாங்க உத்தியோகங்களில் அவர்களுக்கு ஆர்வம் இருந்தது இல்லை. பிள்ளைகளுக்கு ஓரளவுக்கு படிக்க எழுதத் தெரிந்தால் போதும் படிப்பை நிறுத்தி விடுவார்கள்.

இந்த நிலையில் ஒருநாள் அரசியல் பேச்சுக்களை காமராசர் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவரது மாமா கருப்பையா நாடார் கவனித்துவிட்டார். நம் வீட்டுப் பிள்ளைக்கு அரசியல் ஒத்து வருமா? என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

காமராசருக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்து விட்டது. கணக்கு, இங்கிலீசு கொஞ்சம் தெரியும். இனி படித்தது போதும் கடையில் அனுபவம் பெறட்டும் என குடும்பத்தார் முடிவு செய்து ஆறாம் வகுப்பு முழுப்பரீட்சை எழுதும் முன்பே பள்ளிப் படிப்பு நிறுத்தப்பட்டது.

தாய்மாமன் கடையில் வியாபார அனுபவம் பெற காமராசர் அனுப்பப்பட்டார். காமராசர் படித்து ஆளாகி கடைக்குப் போனதற்காக தெருவில் பெரியவர்கள் எல்லோரும் வாழ்த்தினார்கள்.

தினந்தோறும் இரவு பத்து மணிக்கு வரவு செலவுத் தொகை சரிபார்த்துக் கடைக்கணக்கு முடிந்ததும் காமராசர் நேரே வீட்டுக்குப் போகமாட்டார். தெப்பக்குளம் கைப்பிடிச் சுவரில் நண்பர்களோடு அமர்ந்து யுத்தச் செய்திகள், அரசியல் பற்றிய காரசார விவாதங்களெல்லாம் நடந்து முடிந்த பிறகு, நள்ளிரவுக்கு மேல்தான் வீடு திரும்புவார்.

கூட்டங்கள், பத்திரிக்கை படிப்பது, இவைதான் காமராசருக்கு அதிக விருப்பத்தைக் கொடுத்தன. ஆனால் பெரியவர்கள், காமராசரைக் கூட்டத்திற்கு போக விடாமல் தடுப்பதற்காக முயன்றனர். கூட்டம் நடக்கும்நேரத்தில் காமராசரைத் தனி ஆளாகக் கடையில் விட்டனர். இதனால் பல கூட்டங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தவறிப் போனது.

அன்று அம்மன்கோவில் திடலில் கூட்டம். டாக்டர் வரதராஜூலு நாயுடு பேசுகிறார் என்று தண்டோராப்போட்டனர். இன்றைக்கு ராத்திரிக் கூட்டம். அதனாலே நேரத்துக்குக் கல்லாவுக்கு மாற்று ஆள் வந்திட வேணும்; இல்லாவிட்டால் பின்னாலே என்மேல் குறைபடக் கூடாது என்று முதலிலேயே எச்சரித்து விட்டார் காமராசர்.

மாலைநேரம் கூட்டம் தொடங்கும் நேரமாகியும் மாற்ற ஆள் யாரும் வராததால் இருப்புக் கொள்ளாத காமராசர் கல்லாவைப் பூட்டிவிட்டு வீடு நோக்கிச் சென்று சாவியை வீசிவிட்டு பொட்டல் நோக்கிச் சென்றார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.