60
படித்துப் பட்டம் பெற்ற இளைஞர்கள் சிலர் சாலையில் நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களைச் சந்தித்த ஒரு நிருபர் எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்று திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார். எதிர்காலத்தில் என்ன ஆவோம்னு எங்களுக்கே தெரியவிலலை என்றார்கள். தன்னம்பிக்கை இல்லாததால் வந்த தகராறு இது. ஒருவர் இன்னொரு இளைஞரிடம் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார். அப்பாவுக்கு உதவியாக இருக்கிறேன் என்று பதில் வந்தது. அப்பா என்ன செய்கிறார்? என்ற அடுத்து கேள்விக்கு அப்பா சும்மாதான்இருக்கிறார் என்று பதில் வந்தது. உழைப்பில் நம்பிக்கையில்லாததால் வந்த விளைவு இது.
பெருந்தலைவர் காமராசர் தன்னம்பிக்கையின் சிகரமாகவே திகழ்ந்தார். எந்த நிலையினும் துன்பத்தைக் கண்டு துவளும் நிலை அவருக்கு ஏற்பட்டதில்லை. 1967இல் காங்கிரஸ் செல்வாக்கு இழக்க, காமராசரும் தோற்றுப் போகிறார். மாற்றுக் கட்சித் தலைவர்கள் கூட பெருந்தலைவர் தோற்கும் நிலை ஏற்பட்டிருக்கக் கூடாதென்றே வருந்தினர். ஆனால் பெருந்தலைவர் அதைத் தோல்வி என்று எண்ணாமல் ஜனநாயகத்தின் வெற்றி என்றே மகிழ்ந்தார். இத்தகைய சிந்தனை மாபெரும் தலைவருக்கே ஏற்படும்.
திரு.லால்பகதூர் சாஸ்திரி பிரதமராய் இருந்த போது, டெல்லியில் தங்கியிருந்த பெருந்தலைவரைக் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்ட்டது. அதிலிருந்து தப்பிய பெருந்தலைவர் தன்னம்பிக்கை இழக்கவில்லை. அரசியலைத் துறக்கவிலலை. தாக்க வந்தவர்களைக் கோபித்து அறிக்கையும் விடவில்லை. அவரது பணிகளில் வேகம் கூடியதே தவிரக் குறையவில்லை. கட்சியில் சேர்ந்து உடனே பதவிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுபவர்களைப் பார்த்து அவர் சொன்னார். “என்னால் காத்திருக்க முடியாது. உடனே பதவியில் உட்கார வேண்டுமென்றால் முடியுமா? நெல்லை இன்றைக்கு விதைத்து விட்டு நாளைக்கே அறுவடை செய்ய வேண்டுமென்றால் சாத்தியப்படுமா?”
“நேற்று இன்று நாளை என்று முக்காலத்தையும் உணர்ந்து வாழ்க்கையில் நம்பிக்கை வைக்க வேண்டும்” என்று இளைஞர்களுக்கு அறிவுரை கூறினார். தான் தளராமல் இருப்பது மட்டுமல்ல. தன்னை நம்பியிருப்பவர்களையும் தளரவிடாமல் பாதுகாப்பவர் பெருந்தலைவர்.
ஒருமுறை நாகப்பட்டினம் ஒய்.எம்.சி.ஏ–யின் சார்பில் பாரதியாரின் படத்திறப்பு விழா ஒன்று நடந்தது. அனந்தராமன் என்பவர் பாரதியாரின் பாடல்களைப்பாடுமாறு பணிக்கப்பட்டார். பாரத தேசமென்று பெயர் சொல்லுவோம் என்ற பாடலைப் பாடி வரும் போது ஓரிடத்தில் மறதியால் பாட முடியாமல் திண்டாடினார் அவர். உண்மைகள் செய்வோம் பல வன்மைகள் செய்வோம் என்று அந்த வரியை மேடையிலேயே எடுத்துக்கொடுத்தார் பெருந்தலைவர். அவையோர் அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
நம்பிக்கை இருந்தால்
நதி மீதும் நடைபோடலாம்
வெம்பி வீழாமல் விதியையும் வெல்லலாம்
எம்பிக்குதித்து நிலாவுக்கு ஒரு முத்தம்கொடுக்கலாம்
அத்தகைய நம்பிக்கையின் நாயகராகத்திகழ்ந்தவர் பெருந்தலைவர்.