66
ஒரு வயலுக்கு நடுவே ஒரு குருவி கூடுகட்டி தன் குஞ்சுகளோடு வசித்து வந்தது. தாய்குருவி இரைதேடப்போய்விட்டது. இப்போது வயலின் சொந்தக்காரன்தன் மகனோடு வயலுக்கு வந்து பார்த்தான்.
“தம்பி பயிர் முற்றி விட்டது. நாளைக்கே ஆட்களை அழைத்து வந்து அறுவடை செய்து விடு” என்று கூறினார். மாலையில் தாய்க்குருவி கூடு திரும்பியதும். அதனிடம் குஞ்சுகள் நடந்ததைக் கூறி வேறு இடம் பார்க்கச்சொல்லின. தாய்க்குருவி “அவசரமில்லை” என்றது.
இரண்டு நாட்கள் கழித்து வயலுக்குச் சொந்தக்காரனும் மகனும் வந்தார்கள். அடடா தானியம் மிகவும் முற்றிவிட்டது நாளைக்கு எப்படியும் ஆட்களை அழைத்து வந்து அறுவடை செய்தே ஆகவேண்டும் என்றான்.
அன்று மாலை வந்த தாயிடம் குஞ்சுகள் கேட்டதை சொல்லின. “அவசரமில்லை” என்றது தாய்க்குருவி.
ஒரு வாரம் சென்றது. மீண்டும் வயலுக்கு வந்த சொந்தக்காரன் வயலைப் பார்த்துவிட்டு தன் மகனிடம் “மிகவும் முற்றிவிட்டது. இனி ஆட்கள் கிடைப்பார்களா என்று பார்ப்பது நல்லதல்ல. நாளைக்கு நானும் நீயும் அறுவடை செய்து விடுவோம்” என்றான்.
இந்த விஷயத்தை குஞ்சுகள் தாய்க்குருவியிடம் கூறியதும் “நேரம் வந்து விட்டது. வாருங்கள்வேறு இடம் போகலாம்” என்றது.
பிறரை நம்பாமல் சுயமாகவே வேலை செய்பவர்களின் வாழ்க்கை முன்னேறும் என்பதில் சந்தேகமில்லை. பெருந்தலைவர் தனது சொந்த உழைப்பையே பெரிதும் நம்பினார். அதுவே அவர் பல உயர்வுகளைப் பெறக் காரணம்.
1963ம் ஆண்டு நவம்பர் மாதம் 3,4 ஆகிய தேதிகள் அப்போதைய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் டி.சஞ்சீவய்யா தலைமையில் ஜெய்ப்பூர் காங்கிரஸ் மகாசபைக் கூட்டம் நடந்தது. இதில் காமராசர் திட்டம்செயல்படுத்தப்படும் விதமும் – விளைவுகளும் என்பது பற்றி 6 மணி நேரம் விவாதம் நடந்தது.
காமராசர் திட்டம் பல அதிசயிக்கத் தக்க நல்ல பலன்களை விளைவித்திருக்கிறது. புது வேகத்தையும் புத்துணர்ச்சியையும் உண்டாக்கி இருக்கிறது என்று கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அப்போது நேரு, “இந்தத் திட்டம் புதிய புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் பொருத்தமானவர் காமராசர்தான்” என்று குறிப்பிட்டார்.
முன்னதாக அக்டோபர் 9ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தது. இதில் காமராசர், லால்பகதூர் சாஸ்திரி, அதுல்யா கோஷ் ஆகியோர் பெயர்கள் தலைவர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் நேரு பெருந்தலைவரை விரும்பியதால் காங்கிரஸ் கமிட்டி காமராசரை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ஒரு மனதாகத் தீர்மானித்தது.
ஜூலை மாதம் (1963) நேருஜியை காமராசர் சந்தித்துத் தனது காமராசர் திட்டம் பற்றிக் கூறியபோதே அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராகப் பெருந்தலைவர் தான் வரவேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்தார் நேரு. “தமிழ்நாட்டில் கட்சி வேலை பார்க்கவே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன். எனவே தலைவராக விரும்பவில்லை” என்று அப்போது நேருஜியிடம் பெருந்தலைவர் கூறினார்.;
ஆனால் நேருஜியின் ஆசை 3 மாதம் கழித்து நிறைவேறியது. அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பெருந்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.