7
அண்ணன் தம்பிக்கு இடையே கூட போட்டி பொறாமை நிலவும் இந்தக் காலத்தில் தன் உயிரைக் கூடப் பெரிதாக எண்ணாமல் அடுத்தவர் ஆபத்தில் உதவிக்கரம் நீட்டியவர் பெருந்தலைவர்.
விருதுநகர் புல்லக்கோட்டை ரோடு வடபுறம் சுண்ணாம்புக் கால்வாய்களும், செங்கற் சூளைகளும் அதிகம். அதில் நான்கு சூளைகளுக்குச் சொந்தக்காரர் வேல் கொத்தனார் என்பவர். அவரிடம் பத்தொன்பது வயதே ஆன சின்னராமு என்பவன் உதவியாளராகப் பணியாற்றி வந்தான்.
கலவைக்குக் களிமண் சுமந்து வருவது முதல் சூளை பிரிப்பது வரை நல்ல பயிற்சி உண்டு சின்னராமுவுக்கு. அது மட்டுமல்லாமல் கொத்தனாருக்குச் சுருட்டு வாங்கிக் கொடுப்பது என்று சின்ன வேலைகளையும் விசுவாசமாகச் செய்து வந்தான்.
ஒருநாள் கொத்தனார், “பவளக்காரர் வீட்டுக்குடா! பார்த்து நாளைக் காலையிலே மறுசூளை வைக்கணும்” என்று சின்னராமுவிடம் கூறினார். இரவுப் பொழுது முடிந்தால் சூளை ஆறிவிடும். மேல் பக்கமிருந்து எளிதாகச் சூளையைப் பிரிக்கலாம். ஆனால் அவசரத்தில் குறுக்கு வழியில் சின்னராமு சூளையைப் பிரித்தான். வேலைக்காரி ராக்கு தூக்கிச் சுமந்தாள்.
ஆனால் திடீரென்று சூளை சரிய ஆரம்பித்து, சின்னராமு சாய்ந்தான். வேலைக்காரி ராக்கு, “அய்யா சாமி ராமு போச்சே!” என்று கதற ஆரம்பித்தாள்.
அந்த அபயக்குரல் தோழர்களுடன் உலா வந்து கொண்டிருந்த காமராசர் காதில் கேட்க, ஓடிப்போய் சூளையில் ஏறி சின்னராமுவின் கையைப் பற்றி வெளியே தூக்க முயன்றார். மற்ற நண்பர்களும் சுவரில் தாவி ஏறி கை கொடுக்க சின்னராமு காப்பாற்றப்பட்டான். அன்று இரவு ஓட்டல் அதிபர் பாலு அய்யர், ஞானம் பிள்ளை, கோவில் தலைவர் சண்முக சுந்தர நாடார் மற்றும் பலர் காமராசரை முதுகில் தட்டிப் பாராட்டினர்.