76
அமெரிக்க ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன் ஒரு நாள் தன் கோச் வண்டியிலே தலைநகரான வாஷிங்டனுக்கு போய்க்கிட்டு இருந்தார். அந்தச் சாலைப் பக்கத்திலே ஒரு சதுப்பு நிலம் புதை குழி.
லிங்கன் ஒரு அரசாங்க வேலையாப் போய் விட்டு திரும்பிக்கிட்டிருந்தார். நல்ல விலை உயர்ந்த ஆடைகள் அணிந்திருந்தார். அந்த சமயம் அந்தப் புதை குழியிலே ஒரு பன்றிக் குட்டி விழுந்து தவிச்சுக்கிட்டிருந்தது. அதைப் பார்த்து இரக்கப்பட்ட லிங்கன் வண்டியை விட்டு இறங்கிப் போய் அந்தச் சகதியிலே இருந்து பன்றிக் குட்டியைக் காப்பாற்றினார். அப்புறம் வண்டி ஏறி வெள்ளை மாளிகைக்கு வந்து சேர்ந்தார். உடையெல்லாம் சகதி அழுக்கு.
இதைத் தெரிஞ்சுகிட்ட எல்லாரும் ஆபிரஹாம் லிங்கனைப்புகழ்ந்தாாகள். உடனே லிங்கன், “தயவுசெய்து என்னைப் புகழாதீங்க. அந்தச் சின்னப் பிராணி சகதியிலே மாட்டிக்கிட்டு துடிச்சிக்கிட்டிருந்தது. அதைப் பார்த்ததும் என் இதயத்துலே முள் பாய்ந்தது போன்ற உணர்ச்சி. அந்த முள்ளைப் பிடுங்கி எறிஞ்சேன். அவ்வளவுதான். உண்மையிலே அந்த பிராணிக்கு நான் உதவினேன் என்கிறதை விட எனக்கு ஏற்பட்ட இன்னலைப் போக்கிக்கிட்டேன்ங்கிறது தான் உண்மை” என்றாராம்.
உயர்ந்தவர்கள் எப்போதும் பகட்டை விரும்புவதில்லை. பெருந்தலைவரும் அந்த முறையில் பண்பாளராகத் திகழ்ந்தார்.
1954-ஆம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு நாளன்று முதல்வர் பொறுப்பு ஏற்பதற்காகப் புறப்பட்டார் பெருந்தலைவர். தொண்டர்கள் கூட்டம் வாழ்த்து கோஷம் முழங்க, தன் காரில் ஏறினார். உடனே முன்னால் நின்ற காவலர் வண்டியில் இருந்து சைரன் ஒலிக்கத் தொடங்கியது. காரை நிறுத்தச் சொன்ன தலைவர், காவல் அதிகாரியை அழைத்து “அது என்னய்யா சத்தம்” என்றார்.
“ஐயா, முதலமைச்சர் செல்லும் போது போக்குவரத்தை உஷார் படுத்த எழுப்பும ஒலி இது. வழக்கமான சம்பிரதாயம் என்றார் அதிகாரி“.
இதோ பாருங்க. முன்னாலே இந்தப் பழக்கம் இருந்திருக்கலாம். எனக்கு இதெல்லாம் வேண்டாம்னேன். சத்தம் போடாமப் போங்க என்றார் தலைவர்.
நுங்கம்பாக்கம் சந்திப்பில் போக்குவரத்தைச் சீர் செய்து கொண்டிருந்த காவலர் இவர் சென்ற வண்டியை நிறுத்தி எதிர்ப்புறத்தில் வந்த வண்டிகளுக்கு இடம் கொடுத்து அனுப்பிய பின் இவர் வண்டி செல்ல அனுமதி அளித்தார்.
தலைவருடன் சென்ற காவல்துறை மேலதிகாரிகள் சினமுற்றனர். காமராசரோ அந்தக் காவலரின் கடமையைக் கண்டு பூரித்தார். வண்டியைப் பார்த்த பிறகுதான் காவலுக்கு விஷயம் புரிந்தது. முதல்வர் காரையே நிறுத்திவிட்டோமே என்று கலங்கினார்.
அன்று மாலையே பெருந்தலைவர் வீடு திரும்பியபோது வாசலில் காத்து நின்று மன்னிப்புக் கேட்ட காவலரைத் தட்டிக்கொடுத்த தலைவர், அவரது கடமையுணர்வைப் பாராட்டினார்.
தன்னைத்தலைவராக எண்ணிக்கொள்ளாமல் மக்களில் ஒருவராகவே பாவித்துக் கொண்டது தான் தலைவரின் சிறப்பு.