78
வகுப்பில் பாலுச்சாமியின் தொல்லை தாங்க முடியவில்லை. ஆசிரியருக்குப் பல முறை கண்டித்துப் பார்த்தும் திருந்துகிற வழியே தெரியவில்லை.
பக்கத்துப் பையனை அடிப்பான், கெட்ட வார்த்தை பேசுவான். பீடி புகைப்பான், ரோட்டில் ஓடும் பஸ் மீது கல் வீசிட ஆரம்பிப்பான். அரசியல், கட்சி, ஊர்வலம் நடத்தினால் அதில் சேர்ந்து ஓடுவான்.
ஆசிரியர் அவனை இழுத்துப் போய், தலைமையாசிரியரிடம்அவன் செய்த தவறுகளை எடுத்துச்சொல்லி டி.சி. கொடுக்கச்சொன்னார். தலைமையாசிரியர், “சார் நம்ம பாலுச்சாமி நடவடிக்கைகளைப் பார்க்கும் போது, அவன்தான் எதிர்கால அமைச்சர்னு தோணுது. மினிஸ்டர் படிச்ச ஸ்கூல்னு பேர் வரலாம். அவன் படிச்சா படிச்சிட்டுப்போகட்டும்” என்றார்.
இப்படியே பழகி விட்ட நமக்குத் தூய்மையான வாழ்வுடன் ஒரு தலைவர் நம் சமகாலத்தில் வாழ்ந்தார் என்று கேள்விப்படுவதே அதிசயம் தான்.
மார்ஷல் நேசமணி மரணம் அடைந்ததால் 1969ஆம் ஆண்டு ஜனவரியில் நாகர்கோவில் இடைத்தேர்தல் நடந்தது. நெடுமாறன், சிரோன்மணி இரு இளைஞர்களும் தொகுதி நிலவரத்தைக் கூறினர். நாகர்கோவில் தொகுதியில் தலைவர் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்கினார்.
1969ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. அப்பச்சி, அப்பச்சி என்று குமரி மக்கள் அன்போடு பெருந்தலைவரை அழைத்தனர். காமராசர் பேட்ஜை உடம்பிலே குத்திக் கொண்ட காட்சி நெகிழ வைத்தது. ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 201 ஓட்டுகள் வித்தியாசத்தில் பெருந்தலைவர் வெற்றி பெற்றார். நாகர்கோவிலுக்கு நாயகனாகி குமரி மக்களின் அப்பச்சி ஆனார் பெருந்தலைவர்.
அன்னை சிவகாமி அம்மையார் சுகவீனமாய் இருப்பதாகத் தலைவருக்குத் தகவல் வந்தது. தாயார் முகத்தில் எந்தவிதமான பரபரப்போ, பதட்டமோ காணப்படவில்லை.
விருதுநகரில் வீட்டிற்குள் சென்ற தலைவர் மயங்கிய நிலையில் இருந்த அன்னை அருகில் அமர்ந்தார். கண் விழித்துப் பார்த்த அன்னையின் விழிகளில் நீர் வழிந்தது. எந்தவிதச் சலனமும் இன்றி தாயின் உணவு மற்றும் மருந்து பற்றி காமராசர் விசாரித்தார்.
“ஒரு வாய் சாப்பிட்டு விட்டுப் போ” என்று அன்னை சிவகாமி கூறினார். தலைவரும் அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு “அப்போ நான் வரட்டுமா” என்று கை கூப்பினார். “மகராசனாய்ப்போய் வா” என்று தாய் விடை கொடுத்தார். வீட்டில் சாப்பிட்டு எவ்வளவு நாளானது? என்று உடன் இருந்தவர்கள்கேட்டார்கள். “ஒரு 25 அல்லது 30 வருடம் இருக்கும்” என்றார் தலைவர். அனைவரும் திகைத்தனர். மரணப் படுக்கையில் இருந்த தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய தலைவர் உடனே நாட்டைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.