8
மாவீரன் அலெக்சாண்டரின் ஆசிரியராக விளங்கியவர் தத்துவ மேதை டயோஜெனிஸ். இவர் ஒரு நாள் இரு மண்டை ஓடுகளை மேஜையின் மேல் வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அலெக்சாண்டர், “ஆசிரியர் அவர்களே! மண்டை ஓடுகளைப் பார்த்து என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்டார்.
அதற்கு அவர் “இந்த இரண்டு மண்டை ஓடுகளுக்கு இடையே ஏதாவது வேறுபாடு கண்டுபிடிக்க முடிகிறதா என்று பார்!”என்றார். அலெக்சாண்டரும் பார்த்து விட்டு “எந்த வேறுபாடும் இல்லை” என்றார்.
“இந்த இரண்டில் ஒன்று உன் தந்தையுடையது; மற்றொன்று அவரது அடிமையுடையது. எது உன் தந்தையுடையதாக இருக்கும் என்று கண்டுபிடிக்க முயன்றேன் முடியவில்லை” என்றார். இதைக்கேட்டதும் ஆணவம் மிக்க அலெக்சாண்டரின் அறிவுக் கண்கள் திறந்தன.
இறைவனின் படைப்பில் எல்லோரும் சமம் என்ற இந்தத் தத்துவம் சிறுவனாக இருக்கும் போதே காமராசர் மனதில் நன்கு பதிந்தது. எனவே சாதியால்தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லப்பட்டவரின் உரிமைக்காகப் போராடினார்.
பங்குனி மாதம் வளர்பிறை! மாரியம்மன்கோவில் தீச்சட்டி விழா. நையாண்டி மேளமும் நாதசுரமும் முழங்க ஊர்வலம் ஆரம்பித்தது. பம்பை இசைக்குத் தக்கபடி, தீச்சட்டி எடுத்தவர்கள் கால்களை எடுத்து வைத்து ஆடுவார்கள்.
குமரன் என்ற வாலிபன் நல்ல உடல் அமைப்பு உடையவன். பள்ளர் தெருவைச் சேர்ந்தவன். பயிற்சி முறை இல்லாத இந்த ஆட்டத்தில் குமரன் தனித் திறமை காட்டினான். எல்லோரும் அவனுடைய ஆட்டத்தை ஆர்வமுடன் பார்த்தனர்.
இனிமேல் அம்மன் கோவிலில் தீச்சட்டி செலுத்த வேண்டும். கோவிலின் மேல்புறம் உள்ள அக்கினிச் சட்டிக் கிடங்கை நோக்கிக் குமரன் நடக்க ஆரம்பித்தான். அப்போது “இந்தா குமரா இங்கே வா…!” என்று கணீரென்று குரல் ஒலித்தது. குமரன் மட்டுமின்றி கூட்டமே திசை திரும்பியது.
“இவ்வளவு நேரமும் அருமையாக ஆடினாய். இப்போது கோயிலுக்குள் போய்ச் சட்டியை செலுத்தாமல் வேறெங்கோ போகிறாயே” என்று காமராசர் அழைத்தார். குமரனின் இடது கையை தன் கையில் பிடித்தபடி அம்மனிடம் கொடுப்பது போல பூசாரியிடம் சமர்ப்பித்து உண்டியலில் காணிக்கை போட்டு விபூதி வாங்க வேண்டும். “வா கோயிலுக்குள் போகலாம்” என்று கூறி காமராசர் முன்னேறினார்.
கோவில் வாசற்படியில் நின்ற பூசாரி இரண்டு கைகளையும் விரித்து தடுத்தார்.
“வேண்டாம் தம்பி! குமரன் பள்ளர் தெருவாச்சே, அவங்க எல்லாம்கோவிலுக்கு வெளியே அக்கினிச் சட்டி மாடம் இருக்கிறது இல்லையா. அங்கேதான் காணிக்கைச் செலுத்தணும்” என்றார் பூசாரி.
“இன்னைக்கு சாயந்திரம் தெருத்தெருவா வீடுகளில் பால் கறந்து கொடுத்தான். அவன் கைப் பட்ட பாலை அம்மன் அபிஷேகத்திற்குக் கொடுக்கிறீங்க. ஆனால் இவன் மட்டும் கோவிலுக்குள் நுழையக்கூடாதா?” என்று காமராசர் கோபமாகக் கேட்டார்.
ஞானம்பிள்ளை என்பவர் “நாட்டாமைக்காரர் வீட்டுத் தம்பி ! இது ஊர்க் கட்டுப்பாடு. பள்ளர் பறையர்களுக்கு தனி இடம் இருக்கு” என்றார். உடனே காமராசார் இடைமறித்தார்.
“ஆவாரங் காட்டு நிலத்தைப் பள்ளர் தெருக்காரர்கள் உழுதபோதுதானே இந்த அம்மன் சிலை கிடைச்சது. இந்த அம்மன் கிட்ட இவங்க நேர்த்திக் கடன் செலுத்தக் கூடாதா”
“அவங்களுக்கு உரிமை தர வேண்டியது ஊர்க்காரங்க தான். அவங்க மனசு மாறணும். “நாட்டாமைக்காரர் வீட்டுப் பிள்ளையே கட்டுப்பாட்டை மீறினால் எப்படித் தம்பி”
அப்போதும் காமராசர் குமரன் கையை விடவில்லை. மேற்குப் புறமுள்ள வெளிப்புற மாடத்தில் அக்கினிச் சட்டி இடப்பட்டது. அங்கு இருந்த தனி உண்டியலில் குமரனின் காணிக்கை போடப்பட்டது. பூசாரி கொடுத்த விபூதியை காமராசர் நண்பர் குழுவோடு பெற்றுக் கொண்டார்.