81
ஒருத்தர் வீட்டு வசதி வாரியத்தில் வீடுகட்ட ஆசைப்பட்டு ஒரு நிறுவனத்தில் கடன் பெற்று வீடுகட்டினார். திடீரென ஒருநாள் வீடு சுவர் விரிந்து மேல் கூரையும பிளந்து விரிசல் ஏற்பட்டு விட்டது.
வீடு கட்டியவர் கோபத்துடன் நிறுவன அதிகாரியிடம் வந்து கத்தினார். “வீடு பிளந்து இரண்டு வீடா ஆயிட்டது சார்” என்று அழாக்குறையாகப் புலம்பினார்.
“கோபப்படாதீங்க. விளக்கமா பேப்பர்லே எழுதிக்கொடுத்துட்டுப்போங்க. ஒரே வாரத்துலே ஆக்ஷன் எடுக்கிறோம்” என்றார் அதிகாரி. சில நாட்கள் கழித்து இவருக்கு ஒரு கடிதம் வந்தது. பதில், “வணக்கம். எங்களிடம் 2.5லட்சத்தில் ஒரு வீடு வாங்கி மாதம் 2000 கட்டி வருகிறீர்கள். அது வெடித்து இரண்டு வீடாக ஆகி விட்டதாக எழுதியுள்ளீர்கள். மகிழ்ச்சி. இந்த மாதம் முதல் இரண்டு வீட்டுக்கும் சேர்த்து மாதம் நாலாயிரம் கட்ட வேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” இதைப் படித்த வீட்டுக்காரர் மயங்கி விழுந்தார். வீடு கட்டுவதில் திட்டமிடாவிட்டால் சிக்கல் வரும். அதே போல நகரத்தைத் திட்டமிடுவதிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். சென்னை நகரம் திட்டமில்லாமல் வளர்ந்த நகரமாகும். முதலில் வந்த போர்ச்சுகீசியர்கள் சாந்தோம் என்ற சிற்றூரை அமைத்தனர். பின் ஆங்கிலேயர்கள் ஜார்ஜ் கோட்டையை கட்டி அதனுள் தங்கள் குடியிருப்பை அமைத்துக்கொண்டு தங்களின்சேவை புரிவோருக்கான தங்குமிடங்களையும் உருவாக்கினார்.
ஆனால் 1640இல் செயிண்ட ஜார்ஜ் கோட்டை அமைக்கப்படுவதற்கு முன்பே மயிலாப்பூர், திருஅல்லிக்கேணி, திருவான்மியூர், சேத்துப்பட்டு, திருஒற்றியூர்போன்ற அழகிய சிற்றூர்கள் பழமையோடு விளங்கி வந்தன.
சென்னையில் மக்கட் பெருக்கமும் வளர்ந்தது. 1940ஆம் ஆண்டு சென்னையின் மக்கள் தொகை 7 லட்சம். காமராசர் ஆட்சி ஏற்ற பிறகு அது மும்மடங்காக உயர்ந்தது. நகர அபிவிருத்திக் கழகம் ஏற்பட்டு (C.I.T.) புதிய குடியிருப்புப் பகுதிகள் தோன்றின.
சென்னை நகரின் புறநகர்ப் பகுதியில் மேலைநாட்டுப் பாணியில் குட்டி நகரங்களை அமைக்க நகர அபிவிருத்திக் கழக அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்காக மேல் நாடு சென்று ஆய்வு செய்ய கூடிப்பேசினர். துறை சார்ந்த அமைச்சரையும் நேரில் சந்தித்துக்கோப்பில் ஒப்புதல் பெற்றனர்.
இனி முதலமைச்சர் ஒப்புதல் பெறுவது தான் பாக்கி. அதுவும் கிடைத்து விட்டால் அரசுப் பணத்தில் விமானத்தில் வெளிநாட்டுக்குப் பறக்கலாம்.
காமராசர் 1954 ஏப்ரல் 13ஆம் நாள் பதவியேற்ற போது “ஹிந்து” நாளிதழ் காமராசரின் பரந்த கட்சி அனுபவத்தைப் புகழ்ந்து எழுதியதே தவிர, அரசை நடத்தும் விவசாகரத்தில் ராஜாஜியின் ஆற்றலை இவரிடம் எதிர்பார்க்க முடியாது என்பது போல எழுதியிருந்தது.
லண்டனிலே படித்த ஐ.சி.எஸ்உயர் அதிகாரிகள்தான் மேனாட்டுப் பயணத்துக்கான கோப்பைக் காமராசரிடம் பரிந்துரைத்தார்கள். எல்லாரும் அவர் அதில் கையெழுத்திட்டு விடுவார் என்றே நம்பினார்கள். கோப்பைப் படித்த தலைவர் சிந்தித்தார்.
திட்டமிட்டு அமைக்கபட்ட ஊர் நம் நாட்டில் இல்லையா? மேல நாட்டுக்காரனா நமக்கு இதில் வழி காட்டுவது? அதிகாரிகள்சென்று பார்த்துவரக் கூடிய இடங்கள் நம் பண்பாட்டுக்கு ஒத்து வரக்கூடியதுதானா மக்கள் வரிப்பணத்தில் இந்த மேனாட்டுப் பயணம் தேவையா? என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றியது. அப்போது அவர் மனத்தில மதுரை மாநகர் தோன்றியது.
ஊரின் மையத்தில் மீனாட்சி அம்மன்கோவில் சுற்றி ரத வீதிகள், அடுத்த சுற்றில் அளவெடுத்தது போல மாட வீதிகள், அதற்கடுத்த ஆவணி வீதிகள், இடையில் இவற்றை இணைக்கும் சாலைகள், அந்தக் காலத்திலேயே தொலை நோக்கோடு நகரை அமைத்திருக்கிறார்கள். இதற்கு மேல் திட்டமிட என்ன இருக்கிறது எனச் சிந்தித்தவர், “இதற்காக மேனாட்டுப் பயணம்தேவையில்லை. எக்காலத்திற்கும் ஏற்ற மதுரை நகரைக் கண்டு ஆய்வுசய்து வாருங்கள்.” என்று கோப்பில் குறிப்பெழுதிக் கையெழுத்திட்டார்.
இப்படி எந்த விஷயத்திலும் சிந்தித்துச் செயலாற்றக் கூடிய வல்லமை பெருந்தலைவருக்கு உண்டு.