83
ஒரு இடத்தில் ஒரு இந்தியன், ஒரு ரஷ்யன், ஒரு அமெரிக்கன் மூவரும் கூடி இறைவனைப் பிரார்த்தித்தார்கள். கடவுள்தோன்றினார்.
ரஷ்யர், “ரஷ்யா எப்போது முன்னேறும்” என்று கேட்டார். உடனே கடவுள் “இன்னும் 50 வருடம் ஆகும்” என்றார். உடனே ரஷ்யர் “அதைப் பார்க்க நான் இருக்க மாட்டேனே” என்று கூறி அழுதார்.
அமெரிக்கரும் கடவுளிடம் அதே கேள்விகளைக்கேட்க “80 வருடம் ஆகும்” என்றார் கடவுள். “அவ்வளவு காலம் வாழ்ந்து நான் அதைப் பார்க்க முடியாதே” என்று அமெரிக்கரும் அழுதார்.
இறுதியாக இந்தியர் “எங்கள் இந்தியா எப்போது முன்னேறும்?” என்று கேட்டது தான் தாமதம் கடவுள் அழ ஆரம்பித்தார். ஏன் என்று கேட்டால் “அதைப் பாாக்க நானே இருக்க மாட்டேனே” என்றாராம்.
ஆனால் பெருந்தலைவர் காமராசர் போன்ற தலைமை கிடைத்தால் இந்தியா உலகிலேயே முதன் முதலில் முன்னேறி இருக்கும் என்று கடவுள் கூறி இருப்பார்.
1973ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி சென்னை கண்ணப்பர் திடலிலும், சைதாப்பேட்டை தேரடித்திடலிலும், காங்கிரஸ் கூட்டங்கள் நடந்தன. சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரசார் அதிலும் தமிழக காங்கிரசார் எதற்கும்போராட வேண்டிய அவசியம் நேரவில்லை. காரணம் தமிழகத்தில் பெருந்தலைவர் கட்சிப்பொறுப்பு ஆட்சிப்பொறுப்பையும் திறம்பட நடத்தியதுதான்.
ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு மதுவிலக்கை ரத்து செய்தது. காங்கிரசார் இதனை எதிர்த்து போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்சினை, மதுவிலக்கை மீண்டும் அமுல்படுத்துதல், நெசவாளர் பிரச்சினை போன்ற பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ் நாட்டில் போராட்டம் நடத்த காங்கிரசார் முடிவு செய்தார்கள்.
காமராசரின் கட்டளைக்காக காத்துக் கிடந்த பல ஆயிரக்கணக்கான காங்கிரஸ் இளைஞர்கள் உற்சாகத்துடன் போராட்டத்தில் குதித்தார்கள்.
இந்தச் சூழலில் சைதாப்பேட்டை கண்ணப்பர் திடல் இரண்டு கூட்டங்களில்பேசிய பெருந்தலைவர்,
“நாட்டின் இன்றைய நெருக்கடிகளுக்குப் பொருளாதார அரசியல் சூழ்நிலைதான் காரணம், வேகமாக திட்டம்போட்டார்களே தவிர வேலை வாய்ப்பு இல்லை, உறைவிட வசதியில்லை; ஏமாற்றுபவர்கள் அதிகமாகி விட்டதால் பணவெறி பதவி வெறியில் நாடு நிலைகுலைந்து விட்டது. காந்தீய வழியில் போராடுவோம். இதில் வன்முறை, முறைகேடு இருக்காது. அறப்போராட்டத் தொண்டர்கள் போலீசாரால் எத்தகைய துன்பம் வந்தாலும் பொறுமையோடு தாங்கிக்கொள்ள வேண்டும். வாய்மையே வெல்லும் என்று கூறினார்.
இந்த வீர உரை இளைஞர்களுக்கு எழுச்சியை உண்டாக்கியது. தமிழ் நாட்டில் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் உட்பட 35000 பேர் கைது செய்யப்பட்டு சிறை வைக்க இயலாததால் மீண்டும் விடுதலை செய்யப்பட்டனர்.