"

84

அறிஞர் கான்பூசியஸ் அவர்களிடம் நல்ல அரசுக்கு உரிய அம்சங்கள் எவை?” என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கான்பூசியஸ் மூன்று அம்சங்கள் தேவை. மக்களுக்குப்போதிய அளவு உணவுப்பொருட்கள், படைபலம், பொதுமக்களின் நம்பிக்கை, இந்த மூன்றில் ஒன்றைக் கைவிட நேரிட்டால் முதலில் படை பலத்தைக் கைவிடலாம். அடுத்து ஒன்றைக் கைவிட நேரிட்டால் உணவைக் கைவிடலாம். ஆனால் பொதுமக்களின் நம்பிக்கை இல்லாவிட்டால் எந்த அரசுமே இராதுஎன்றார்.

அப்படி மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நல்ல தலைவராக இருந்தவர் பெருந்தலைவர்.

அரசு மருத்துவமனைகளில் உள்ள பயிற்சி மருத்துவர்கள்வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். மருத்துவப் பட்டப்படிப்பின் ஐந்தாண்டுக் காலப்படிப்பை முடித்த பின் ஓராண்டுக் காலம் அவர்கள் அரசு மருத்துவமனைகளில் பயிற்சி பெற வேண்டும். அதை வெற்றிகரமாக முடித்த பின்னரே மருத்துவப் பட்டச் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த ஓராண்டுப் பயிற்சிக் காலத்தில் அவர்களுக்கு மாதம் ரூ.2500 கொடுக்கப்பட்டு வந்தது. இதை ரூ.3000 ஆக உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துப் போராட்டம் நடத்தினார்கள்.

இந்த மருத்துவப் படிப்பு தோற்றுவிக்கப்பட்ட நாளில் இருந்து 1963ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை இந்த பயிற்சிக் காலத்தில் மாணவர்களுக்கு எந்தவிதப் பொருளுதவியும் வழங்கப்படவில்லை. அவர்கள் தங்கள் கைக்காசுகளைச் செலவழித்தே ஓராண்டு பயிற்சியை முடித்தனர். அவ்வப்போது உள்ள துறை அமைச்சரிடம் மாணவர்கள் தங்கள் குறைகளை எடுத்துக் கூறினாலும் எந்தத் தீர்வும் ஏற்படவில்லை.

பெருந்தலைவர் முதல்வராக இருந்த காலத்தில் அத்துறை அமைச்சராயிருந்த திருமதி ஜோதி வெங்கடாச்சலம் அம்மையார் அவர்கள்மாணவர்கள் தரும் கோரிக்கை விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்வாரே தவிர அவர்களது குறை தீர்த்து வைக்க முன்வரவில்லை.

இந்நிலையில் பயிற்சி மருத்துவர்கள் இருபது பேர் சேர்ந்து பெருந்தலைவரைப் பார்க்க முடிவெடுத்து தலைமைச்செயலகம் சென்றனர். பெருந்தலைவர் வந்தார்.

நீங்களெல்லாம் யாரு?” தலைவர்

ஐயா நாங்களெல்லாம் ஹவுஸ் சர்ஜன்கள்என்றார் ஒரு டாக்டர்.

அப்படின்னா என்ன?” ன்னார் தலைவர்.

ஐந்து வருடம் டாக்டர் படிப்பை முடிச்சிட்டு ஒரு வருடம் பயிற்சி டாக்டராக வேலை பார்ப்பவர்கள். நாங்கதான் இந்த ஒரு வருடம் நோயாளிகளைப் பார்த்து சிகிச்சை அளிப்போம். இந்த ஒரு வருடம் முடிஞ்ச பிறகுதான் டாக்டர்கள்ங்கிற பேர்லே வேலை பார்க்க முடியும்.

சரி இப்ப என்னை எதுக்குப் பார்க்க வந்தீங்க?” தலைவர்

ஐயா இந்த ஒரு வருடப் பயிற்சிக் காலத்துக்கு எங்களுக்கு ஏதாவது உதவித் தொகை தரணும்னு கேட்டுக்கொள்கிறோம்என்று டாக்டர்களில் ஒருவர் சொன்னார்.

இதென்னய்யா அநியாயமா இருக்கு 5 வருடம் படிச்சுட்டு ஒரு வருடம் ஓசியா வேலை வாங்கிறதா? சரியில்லையே நீங்க போங்க. இதை நான் என்னன்னு பார்க்கிறேன்என்றார் தலைவர்.

நான்கே நாட்களில் பயிற்சி டாக்டர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.105 வழங்கப்படும் என்ற உத்தரவு வந்தது.

நியாயம் என்றால் உடனடி முடிவெடுப்பதில் தலைவர் காமராசர் தான் அனைவருக்கும் முன்னோடி ஆவார். அன்று அவர் உத்தரவு இட்ட ரூ.105தான் இப்போதைய விலைவாசிக்கு ஏற்ப உயர்த்தப்பட்டுள்ளது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.