85
பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் கூட்டத்தில்பேசுவதற்காக மேடையில் அமர்ந்திருந்தார். அப்பொழுது கூட்டத்தின் முன் வரிசையில் இருந்த இளைஞர் ஒருவன் சிறிதும் மரியாதை இன்றித் தன் கால்மேல் காலைப்போட்டு உட்கார்ந்திருந்தான்.
மேடையில் இருந்த இன்னொருவர் பெரியாரிடம், “அந்த இளைஞனைப் பார்த்தீர்களா? நாம் எல்லாம் மேடையில் இருக்கிறோம். கால்மேல் காலைப் போட்டுக்கொண்டு கொஞ்சம்கூட மரியாதை இல்லாமல் இருக்கிறான்?” என்றார்.
அதற்குப் பெரியார் “அவன் கால்மேல் அவன் காலைப் போட்டுக் கொண்டு இருக்கிறான். இதில் நம்ம மரியாதை எங்கு குறைகிறது? என்று பதில் சொன்னார்.
இப்படி எதையும் பகுத்தறிவோடு பார்க்கிற பெரியார் பெருந்தலைவரைப் பற்றிப் பெருமிதமாகப் பேசியவர்.
தந்தைப்பெரியாரின் நீண்ட கால ஏக்கம் நிறைவேறியது போல அமைந்தது காமராசர் ஆட்சி.
அந்தக் காலத்தில் சேலம் நகர் மன்றத் தலைவராக சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் இருந்தார். இருவரும் நெருங்கிய நண்பர்கள். ராஜாஜியின் வேண்டுகோளை ஏற்று பெரியார் அரசியலுக்கு வந்தார். ராஜாஜி மிதவாதி, பெரியாரோ தீவிரவாதி.
காந்தியின்மேலுள்ள பற்றுதலால் அவரது மதுவிலக்குக் கொள்கையை ஏற்று தன் தோட்டத்துத் தென்னை மரங்களை வெட்டினார். கதராடைக் கொள்கைக்காக பிரச்சாரம் செய்தார். காந்தியின் “ஹரிஜன முன்னேற்றம்” என்ற கொள்கைக்கு ஆதரவாக வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு “வைக்கம் வீரர்” என்ற பெயர் பெற்றார்.
தமிழரிடையே வறுமை, அறியாமை, கல்லாமை, சாதியுணர்வுச் சிறுமை போன்ற குடி கெடுக்கும் “ஆமைகளை” ஒழிப்பதற்குப் பொதுவாழ்வே சிறந்தது என உணர்ந்து சொல்லாற்றலை வளர்த்து கொண்டார்.
நாட்டில் அமைந்த மக்களரசுகளின் பிரதமர்களாக பனகல் அரசர், முனுசாமி ரெட்டியார், ராஜாஜி(ஆரியர்), டி.பிரகாசம், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியர், குமாரசாமி ராஜா போன்றவர்கள் ஆட்சி செய்தார்களே அன்றி தமிழ்நாட்டின் தமிழன் ஒருவன் கூட இல்லையே என்று வருந்திய நிலையில் காமராசர் முதல்வரானதும் பெரியார் மிகவும் மகிழ்ந்தார்.
காமராசரின் எளிமை “பண்பாடு” முழு அர்ப்பணிப்பு, செயல்திறன் கண்டு அவரைத் தமிழரின் துயர் துடைக்க வந்த “பச்சைத் தமிழர்” என்று பாராட்டினார். பெரியார் அவர்கள், “இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்த முன்னேற்றம் ஆயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. மூவேந்தர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள், முஸ்லீம்கள், வெள்ளைக்காரர்கள், இவர்கள் ஆட்சியில் எல்லாம் நமது கல்விக்கு வகை செய்யப்படவில்லை.
தோழர்களே என்சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னம் பத்து ஆண்டுகளுக்காவது காமராசரை விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள். அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். காமராசரைப் பயன்படுத்திக்கொள்ள நாம் தவறிவிட்டால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது” என்று பேசினார்.
காமராசர் திட்டத்துக்கே பெருந்தலைவர், முதல்வர் பதவியைத் துறக்க முடிவெடுத்த போது எதிர்த்துக் குரல் கொடுத்தவர் பெரியார்.
பிறகு காமராசர் குடியாத்தம் தொகுதியில் போட்டியிடப்போவதாகக் கூறிய உடன் முதலில் ஆதரவு தெரிவித்தவர் பெரியார்தான்.
இப்படி எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட பெரியாரால்போற்றப்பட்ட பெருமை பெருந்தலைவருக்குக் கிடைத்தது.