"

86

லுக்மான் ஹக்கீமிடம் யாரைக் கண்டாலும் இப்படி மரியாதை காட்டுகிறீர்களே இதை யாரிடமிருந்து கற்றீர்கள்?” என்று கேட்டார் அவருடைய நண்பர்.

முட்டாளிடமிருந்துஎன்று பதில் சொன்னார் ஹக்கீம்.

என்ன முட்டாளிடமிருந்தா?” என்று வியப்புடன்கேட்டார் நண்பர்.

அந்த முட்டாள்கள் செய்யும் அவமரியாதையை எல்லாம் தெரிந்து கொண்டு அவற்றை எல்லாம் விட்டு விட்டேன். அவ்வளவுதான்என்றார் ஹக்கீம்.

பிறருக்கு இடைஞ்சல் செய்யாமல் இருப்பதே ஒரு பண்புதான் என்பதை நன்கு உணர்ந்தவர் பெருந்தலைவர். இந்தப் பண்பு பற்றி தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமன் கூறும் செய்திகளைப் பார்க்கலாம்.

நாளேட்டு உலகின் பிதாமகர் என்று அழைக்கப்பட்டவர் திரு..என்.சிவராமன் ஆவார். 53 ஆண்டுகள் தினமணி நிறுவனத்தில் பணியாற்றிப் பல ஆண்டுகள் அந்த நாளேட்டின் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.

பெருந்தலைவர் காமராசர் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவரது கடைசிக் காலம் வரை நண்பராக இருந்தவர். 13-2-2002 ஆண்டுக்கான ஆனந்த விகடன் வார ஏட்டில் அவர் பேட்டி அளித்தார். அதில் “1930ஆம் ஆண்டு வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டேன். போராட்டத்தை ஆதரித்துப் பிரசங்கம் செய்தேன். இப்படி ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போதே உப்பளங்களை நோக்கி நடக்கத் தொடங்கினேன். ஒரு கான்ஸ்டபிள் ஓடிவந்து என் மார்பில் ஒரு லத்தியை வைத்துப் பலமாக அழுத்தினார். இதைப் பார்த்துப் பதறிய கலெக்டர் ஏய் குச்சியை எடுடா மூச்சு திணறிச் செத்துப் போகப் போறான்னு கத்தினார்.

பிறகு விசாரணை நடத்தி ஒரு வருடம் சிறைத் தண்டனை கிடைத்தது. திருச்சி, சென்னை, மத்தியச் சிறைகளில் சில காலம் இருந்தேன். கடைசியில் அலிப்புரம் ஜெயிலில் அடைத்தார்கள்.

வெறும் கருங்கல் தரைதான் எழுபதுக்கு நாற்பதடி பெரிய ரூம். அதிலே வரிசையா படுத்துக் கிடப்போம். காலையிலே நாலு அவுன்ஸ் கஞ்சி, மதியம் சாதம், குழம்பு சாயந்திரம் கஞ்சி.

இந்தச் சிறையிலே எனக்கு எதிரே தான் காமராசர் படுத்திருப்பார். படிச்சவங்களுக்கு இந்தப் படிக்காத மேதை தந்த மரியாதையை வேறு எவரும தந்ததில்லை. ஜெயில்லே நான் ஒரு ஓரமா உட்கார்ந்து சதா புத்தகம் படிச்சுட்டே இருப்பேன். குறுக்கும் நெடுக்குமா போறவங்க பேசிகிட்டே நடப்பாங்க. அப்போ காமராசர் நமக்குத் தான் படிப்பறிவு இல்லை. படிக்கிறவங்களையாவது தொந்தரவு பண்ணாம இருங்கண்ணேன்னு சொல்வாரு. கடைசி வரைக்கும் எனக்கும் அவருக்கும் அந்த நட்பு இடைவெளியில்லாமல் இருந்தது.

யான் பெற்ற பேறு பெறுக இவ்வையகம் என்று பெருமக்கள் கூறினார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு இரண்டு கண்ணும்போக வேண்டும் என்று நினைப்பவர் பலர் உண்டு. ஆனால் பெருந்தலைவர் தனக்கு கிடைக்காத கல்வி எனும்பேறு இந்த உலகத்தில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்த உயர்ந்த உள்ளம் படைத்தவர் என்பதை ஏ.என்.சிவராமனது பேட்டி மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.