90
ஒரு சிப்பாய்தான் ஒரு சண்டையில் எதிரியின் காலை வெட்டியதாகப்பெருமை பேசினான். இதைக்கேட்ட ஒருவர், “எதிரியின் தலையை வெட்டாமல் காலைப்போய் வெட்டியிருக்கும் காரணம் என்ன?” என்றார்.
அதற்கு அந்தச் சிப்பாய் “நான் என்ன செய்வேன்? எதிரியுடைய தலைமை வேறொருத்தன் எனக்கு முன்னமே வெட்டி விட்டானே” என்றான்.
ஆனால் நமது வீரர்கள்இப்படிப்பட்டவர் அல்லர். தேச பக்தியும் அபரிமிதமான ஆற்றலும் கொண்டு எதிரியை நேருக்கு நேர் நின்று போரிட்டு விரட்டி அடிப்பார்கள்.
1965இல் இந்தியா–பாகிஸ்தான்போர் மூண்ட போது பஞ்சாபில் போர் முனையில் காமராசர் சூறாவளிச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். நூற்றுக்கணக்கான வீரர்களை சந்தித்துப்பேசி உற்சாகமூட்டினார். அவரின் பேச்சை வீரர்கள் உற்சாகத்தோடும், ஆர்வத்தோடும் கேட்டனர்.
ஒரு வீரர் தூய தமிழில் வணக்கம் என்று காமராசரின் கைகளைக் குலுக்கினார். உடனே விழி விரிய அந்த வீரரிடம ஊர், உறவினர்கள் முகவரி எல்லாம் கேட்டுக்கொண்டார். வேறு பல வீரர்களின் தமிழக முகவரிகளையும் குறிததுக் கொண்டு, நான் அந்தப் பக்கம் போகும்போது அவர்களைச் சந்திக்கிறேன் என்று கூறினார். வீரர்கள் மகிழ்ச்சிக் கூத்தாடி காமராசரை எங்கள் அண்ணன் என்று கூறினார்கள்.
1965இல் லால் பகதூர் சாஸ்திரி சென்னைக்கு வந்தார். யுத்த நிதியை தமிழக மக்கள் அவரிடம் கொடுத்தனர். சென்னையில் இறுதி நிகழ்ச்சியாக அன்று மாளிகையில் காங்கிரஸ் ஊழியர் கூட்டம் நடந்தது. அங்கு சாஸ்திரி பேசிய பேச்சு கேட்பவர்கள் மனதை நெகிழச் செய்தது. காமராஜ் ஜீ, காமராஜ் ஜீ என்ற அவர் குறிப்பிட்ட போதெல்லாம் கரகோஷம் எழுந்தது.
“யுத்த களத்தில் நம் வீரர்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குப் பிரதானமாக உதவியவை காமராஜ் ஜியின் யோசனைகளே. காமராஜ் ஜீ உடன் பிறவாச் சகோதரர். அவர் எனக்கு வழி காட்டியாக விளங்கி என் மூலம் நாட்டை நடத்திச்செல்கிறார். பகை முடிக்க அவர் கூறிய யோசனைகள் மிகப்பெரிய அளவில் உதவின” என்று லால்பகதூர் சாஸ்திரி குறிப்பிட்டபோது எழுந்த கரவொலிஅடங்க நீண்ட நேரம் பிடித்தது.