91
18 மாதங்கள், பாராட்டுமளவிற்குத் திறமையாக நிர்வாகத்தை நடத்தி வந்தார் லால் பகதூர் சாஸ்திரி. ரஷ்யாவில் தாஷ்கண்ட் என்ற இடத்தில் இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்த சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டு அங்கே அகால மரணம் அடைந்தார். இது மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சியை அளித்தது. இரண்டு ஆண்டு கூட முடியவில்லை. அதற்குள் மீண்டும ஒரு புதிய பிரதமரைத தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டது.
“காமராசர் கைகளில் இந்தியா பத்திரமாக இருக்கிறது – இனியும் இருக்கும். சாஸ்திரிக்குப் பின் யார் என்பதற்கு அவர் விடை காண்பார்” என்று உலகமே காமராசர் மீது பார்வை பதித்தது.
1965 ஜனவரி 14ஆம்தேதி அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கூட்டம கூட்டப்பட்டது. பாராளுமன்ற காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுக்க விவாதிக்கப்பட்டது. காரியக் கமிட்டி புதுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைக் காமராசருக்கு வழங்கியது.
பெருந்தலைவர் இந்திய அரசியலில் புதுமைக்கு ஒரு சின்னமாகச் செயல்பட்டார். அழைத்தவர்களில் மாறுபட்ட கருத்துக்கொண்டவர்களையும் தன்பேச்சை ஒப்புக் கொள்ள வைத்தார். அவரது அறிவுத் திறனை டெல்லியில் கூடிய எம்.பி.க்கள் நாளெல்லாம் சொல்லிப் பாராட்டினர்.
அப்போது அதுல்யாகோஷ் காமராசரே பிரதமராக வரவேண்டும என்ற கருத்தை வெளியிட்டார். “என்னுடைய பெயரை இதில் இழுக்காதீர்கள்” என்று கூறி நேருக்கு நேர் கூறி மறுத்து விட்டார். மக்கள் அவரை மகரிஷி காமராஜ் என்று அழைத்தனர்.
இந்திரா காந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்துள்ளார். இதனால் நாட்டு மக்களுக்கு அவரை நன்றாகத் தெரியும். ஒரு பெண் பிரதமராக வருவதை எல்லோரும் விரும்புவார்கள் என்பதால் இந்திரா காந்தியை பிரதமராக்க பெருந்தலைவர் முடிவு செய்தார்.
மாநில முதல் மந்திரிகள் இந்திராகாந்திக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தனர். 1966 ஜனவரி 16ஆம்தேதி 16 முதல்வர்களில் 14 பேர் இந்திரா காந்தியை ஆதரிப்பதாக பகிரங்கமாக அறிவித்தார்கள்.
மொரார்ஜி தேசாயும் அவரது ஆதரவாளர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஜனவரி 18ஆம்தேதி பெருந்தலைவர் மொரார்ஜி தேசாய் வீட்டுக்குச் சென்று பேச்சு வார்த்தை நடத்தினார். இந்திரா காந்திக்கு மெஜாரிட்டி இருக்கிறது. ஏகமனதாக பிரதமரைத் தேர்ந்தெடுக்க வழி விடுங்கள் என்றார். ஆனால் தேசாய் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ஓட்டுப்பெட்டி உண்மை பேசும் என்று கூறினார். பெருந்தலைவர் பொறுமையுடன் வெளியேறினார்.
1966 ஜனவரி 19ஆம் தேதி புதுத்தலைவரை தேர்ந்தெடுக்க பாராளுமன்றத்தில் கூட்டம் கூடினார்கள். சுதந்திரம் அடைந்த பிறகு பிரதமர் பதவிக்குப் போட்டி என்ற ஒன்று அன்றுதான் முதன்முறையாக நடந்தது.
இந்திரா காந்தியின் பெயரை நந்தா முன்மொழிய, சஞ்சீவரெட்டி வழி மொழிந்தார். மொராஜி தேசாயின்பெயரை கே.அனுமந்தையா முன்மொழிய டி.ஆர்.பாலிவால் வழி மொழிந்தார். ரகசிய ஓட்டெடுப்பு 2 மணி நேரம் நடந்தது. ஓட்டுப் பெட்டி பேசியது; 355 ஓட்டுகள் பெற்று இந்திரா காந்தி வென்றார். 169 ஓட்டுகள் பெற்று மொரார்ஜி தேசாய் தோல்வி அடைந்தார்.
காமராசரின் வலிமை என்பது அவரது சிறந்த பண்பிலும், அரசியல் அறிவுக் கூர்மையிலும் இருந்ததை இந்தத் தேர்வு மீண்டும் நிரூபித்தது.