"

93

காமராசரின் குருநாதர் சத்தியமூர்த்தி. அவரது மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி காமராசரைப் பற்றி உருக்கமான தகவல்களைக் கூறியுள்ளார்.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு 1930ஆம் ஆண்டு நாங்கள் சென்னை திருவல்லிக்கேணியில் தேரடி வீதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தோம். அப்பா சத்தியமூர்த்தி சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார். அப்போது எனக்கு 5 வயது.

காமராசர் அப்பாவை பார்ப்பதற்காக அடிக்கடி வீட்டுக்கு வருவார். அவருக்கு 18 வயது இருக்கும். அவர் என்னிடம் அய்யா இருக்கிறாரா? என்று பணிவுடன் கேட்பார். அப்பாவை அவர் எப்போதும் அய்யா என்றுதான் அழைப்பார்.

நான் துள்ளிக் குதித்து வீட்டுக்குள் சென்று அப்பாவிடம் அப்பா, அப்பா காமராசர் உங்களை பார்க்க வந்துள்ளார்என்று கூறுவேன். அவர் உடனே என்னிடம் மரியாதையாக பேசு அம்மா என்பார். ஏன் என்றால் நான் சிறுபிள்ளைத்தனமாக துடுக்குடன் அவர்பெயரைச் சொன்னதை அப்பா மரியாதைக் குறைவாக நினைத்து விட்டார்.

காமராசரை அப்பா வீட்டுக்குள் அழைத்து பேசுவார். அவர்களது பேச்சு நாட்டைப் பற்றியும், நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்பதைப் பற்றியும் தான் இருக்கும். நான் சிறுமியாக இருந்ததால் அப்போதைய நாட்டின் அரசியல் நிலவரம் பற்றி அதிகம் தெரியாது. சிறிது நேரம் காமராசர் அப்பாவிடம் பேசி விட்டுச் சென்று விடுவார்.

அப்பாவை காமராசர் எப்படிக் கவர்ந்தார்? என்பதை நான் இங்கு சொல்லியாக வேண்டும். மதுரையில் அப்பா ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் 15 வயது ஒரு சிறுவன் துடிப்புடன் சுறுசுறுப்புடன் செயல்பட்டுக் கூட்டத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தான். அந்தச் சிறுவன் அப்பாவின் கவனத்தை மிகவும் கவர்ந்து விட்டான். அந்தச் சிறுவனை அப்பா கூட்ட மேடைக்கு அழைத்து உன் பெயர் என்ன? என்று கேட்டார். “என் பெயர் காமராசர் அய்யாஎன்று பணிவுடன் கூறினார். அப்பா நீ என்னை சென்னையில் வந்து பார்என்று கூறினார். இப்படித்தான் அப்பாவிடம் காமராசருக்கு நெருக்கம் ஏற்பட்டது.

காமராசர் அப்பாவை குருநாதராகவும், தன்னை சீடராகவும்தான் நினைத்துப் பழகி வந்தார். அவருடைய செயல்பாடுகள் அப்பாவுக்கு மிகவும் பிடித்தது. அப்பாவுக்கு நம்பிக்கை உரியவர் ஆனார்.

1940ஆம் ஆண்டு காங்கிரஸ் ராஜாஜி ஆதரவாளர்கள் என்றும் சத்தியமூர்த்தி ஆதரவாளர்கள் என்றும் இரு பிரிவினர்செயல்பட்டார்கள். மாநில காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ராஜாஜி தன்னுடைய ஆதரவாளரான கோவை சுப்பையாவை போட்டியிடச் செய்தார். அப்பா தன்னுடைய சீடரான காமராசரை நிறுத்த முடிவு செய்தார். இதை காமராசரிடம் சொன்ன போது அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. “உங்கள்தொண்டனான நான் தலைவராவதா? என்று காமராசர் உருக்கமாக அப்பாவிடம்கேட்டார். அப்பா அவரிடம் நாட்டின் நன்மையைக் கருதி நீங்கள் தலைவர் ஆக வேண்டும். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறினார்.

அப்பா கூறியதைத் தட்ட முடியாத காமராசர் போட்டியிட்டார். தேர்தல் தியாகராயர் நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் நடந்தது.அப்பா இந்தி பிரசார சபா வெளிவாசல் அருகில் நின்று கொண்டு ஓட்டு போட வந்தவர்களைக் கைகூப்பி வணங்கியபடி நாட்டின் நலனை கருத்தில் கொண்டு காமராசருக்கு ஓட்டுப்போடுங்கள்என்று கேட்டுக்கொண்டார்.

தலைவர் தேர்தலில் காமராசர் வெற்றி பெற்று மாநில காங்கிரஸ் தலைவர் ஆனார். அப்பா காங்கிரஸ் மாநிலச் செயலாளர் ஆனார்.

காமராசர்தன்னைப் பற்றியோ தனது வீட்டைப்பற்றியோ சிந்திப்பதே கிடையாது. இதற்கு ஒரு சம்பவத்தை என்னால் கூறமுடியும்.

காமராசர் முதல் அமைச்சர் ஆனபிறகு தியாகராயர் நகரில் இந்தி பிரசார சபா எதிரில் தணிகாசலம் சாலையில் தற்போது நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு அவர் அடிக்கடி வருவார். அவர் எங்களிடம் என்னைப் பார்க்க நீங்கள் வரவேண்டாம். நானே வருவேன்என்று கூறுவார்.

அவர் எங்கள் குடும்பம் மீது அளவு கடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தார். முதல் அமைச்சராக இருந்தபோது அவரும், நாங்களும் திருப்பதி கோவிலுக்குச் சென்றிருந்தோம். ஆந்திர முதல் மந்திரியாக இருந்த பிரமானந்த ரெட்டியும் கோவிலுக்கு வந்திருந்தார். திரும்பி காரில் வரும்போது ரேணிகுண்டாவில் புதைமணலில் காரின் டயர்கள் சிக்கிக் கொண்டது. கார் நகரவில்லை.

காரில் இருந்த காமராசர் கீழே இறங்கி காரைத் தள்ளினார். முதல் அமைச்சராக இருந்த அவர் எந்தவித கவுரவமும் பார்க்காமல் காரைத் தள்ளியது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

எங்கள் தந்தையை குருவாக மதித்து அந்த குருவுக்கு பெருமையும் புகழும் சேர்த்த முதன்மை சிஷ்யராகவே காமராசர் வாழ்ந்து மறைந்தார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.