94
“பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்“
என்றார் வள்ளுவப் பெருந்தகை. இத்தகைய இங்கிதம் எல்லோருக்கும் வராது.
விருந்துக்கு அழைக்கும் சிலர் கூட மனப்பூர்வமாக அழைக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. உள்ளத்தில் வன்மத்தை வைத்துக்கொண்டு, உதடுகளால் உபசரிப்பார்கள்.
கடைத்தெருவில் எதிரில் வருபவரைப் பார்த்து, “வாங்க, வணக்கம்! உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. நம்ம வீடு பக்கத்திலேதான். வந்து ஒருவாய் சாப்பிட்டுவிட்டுப் போலாமே” என்றார் ஒருவர். கூப்பிட்டவர் ஒரு மாதிரியான ஆள் என்பதைத் தெரிந்து வைத்திருந்த அவர், “பரவாயிலலைங்க உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்” என்று கூறி தப்பிக்கப் பார்த்தார். கூப்பிட்ட ஆள் விடவில்லை. “ஒண்ணும் சிரமம் இல்லீங்க. எந்ததெந்த நாயெல்லாமோ நம்ம வீட்டுக்கு வந்து சாப்பிட்டு போகுது. நீங்க வர்றதுக்கு என்ன?” என்றார். அப்புறம் அந்த ஆள் போவானா?
எதிரி வீட்டு விருந்தைக் கூட ஏற்றுக்கொண்டவர் பெருந்தலைவர். விருதுநகர் ஒரு காலத்தில் ஜஸ்டிஸ் கட்சிக் கோட்டையாக இருந்தது. ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களால் காங்கிரஸ்காரர்கள் பட்ட துன்பங்கள் பல. முதலமைச்சராக பெருந்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும், விருதுநகரில் ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர் ஒருவர் பெருந்தலைவருக்கு விருந்து வைக்க விரும்பினார். அதைப்பெருந்தலைவர் ஏற்றுக் கொண்டார்.
விருந்துக்கு முதல் நாள் தான் காங்கிரஸ் நண்பர்களுக்கு விருந்து பற்றித் தெரிய வந்தது. இந்த விருந்துக்கு மகன் செல்வது பெருந்தலைவரின் தாயாருக்குப் பிடிக்கவில்லை. விருந்துக்குப் போக வேண்டாம் என்று உறவுக்காரர் ஒருவர் மூலம் தாயார் சிவகாமி அம்மாள் பெருந்தலைவருக்குச் சொல்லி அனுப்பினார்.
அந்தப் பிரமுகர் கட்சிக்குச்செய்த தீமைகளைக் காங்கிரஸ் நண்பர்களும் பெருந்தலைவரிடம் எடுத்துக்கூறி விருந்துக்குப்போக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள். ஆனால் பெருந்தலைவர், “ஒப்புக்கொண்டாகிவிட்டது. போய்த்தான் ஆக வேண்டும்” என்றார். அப்படியே விருந்துக்குப் போய் வந்தார்.
பெருந்தலைவரிடம் உள்ள பெருங்குணம் எதிரிகள் செய்யும் கேடுகளை மறந்து விடுவார். நண்பர்கள் செய்யும் நல்லவைகளை மறக்க மாட்டார்.