96
1967 தமிழகத்தின் அரசியலில் முக்கிய பங்கு வகித்தது. தொடர்ந்து ஆட்சியிலிருந்த காங்கிரசிடமிருந்து தமிழக ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியது. தேர்தலின்போது தமிழகத்தின் முன்னேற்றத்திற்குத் தன்னலமில்லாது இரவு பகலாக உழைத்த பெருந்தலைவரை விருதுநகர் மக்கள் தோற்கடித்து விட்டனர். தோற்றவுடன்பெருந்தலைவரைப் பேட்டி கண்டபோது தோல்வியைப் பற்றிய அபிப்பிராயம் கேட்டபோது இதுதான் ஜனநாயகம், மக்களின் தீர்ப்பை மதிக்கிறேன் என்றார். காமராஜர் யார் மீதும் குறை கூறாமல் தன் பெருந்தன்மையைக் காட்டி ஜனநாயகத்தின் பெருமையை உயர்த்தினார்.
அதன்பின் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் தொகுதியில் தேர்தல் நடந்தது. அந்த பாராளுமன்றத் தேர்தலில் உள்ளூர் முக்கிய பிரமுகரை எதிர்த்து பெருந்தலைவர் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் பெருந்தலைவரை வெற்றி பெறச்செய்து கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தங்கள் பெருமையினை உயர்த்திக் கொண்டனர்.
திருமதி இந்திராகாந்தி அவர்களை இந்தியாவின் பிரதமர் பதவிக்குக் கொண்டு வந்த பெருமை பெருந்தலைவருக்குண்டு. பிற்காலத்தில் காலத்தின் கோலத்தால் பிரதமருக்கும், பெருந்தலைவருக்கும் அபிப்பிராய வித்தியாசம் ஏற்பட்டது.
நாகர்கோவில் தொகுதியில் வெற்றி பெற்ற பின் முதல்முறையாக பாராளுமன்ற அங்கத்தினர் என்ற முறையில் பாராளுமன்றத்தில் நுழைந்தார் காமராஜ். பெருந்தலைவரைப் பார்த்தவுடன் அனைத்துப் பாராளுமன்ற அங்கத்தினர்களும் எழுந்து வணக்கம் தெரிவித்து தங்கள் மரியாதையைத் தெரிவித்தனர். திருமதி இந்திராகாந்தி அவர்களும் தன் அபிப்பிராய பேதத்தையும் மறந்து தன் இருக்கையிலிருந்து எழுந்து வணக்கம் தெரிவித்தார். ஒரு பாராளுமன்ற அங்கத்தினருக்கு அனைவரும் எழுந்து மரியாதை செய்தது இதுவே முதல் முறை. அத்தகைய பெருமைக்குரிய அங்கத்தினரைத் தேர்வு செய்தது கன்னியாகுமரி மாவட்டத்திற்கே பெருமை. நாடாளுமன்றத்தில் காமராஜரின் புகழும், கன்னியாகுமரி மாவட்டத்தின் மதிப்பும் உயர்ந்து நின்றது.
இந்நிகழ்ச்சியை அந்நேரத்தில் எல்லா நாளிதழ்களும்மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன.