"

2

சைவத்தைப் பொறுத்தவரை, ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியாக அவதரித்தவர் காரைக்கால் அம்மையார். அவரது பெருமையை உள்ளபடி உணர, அவருக்கு முன்பு ஆயிரம் ஆண்டுகள் சைவம் எப்படி ஓய்ந்து கிடந்தது என்பதை அறிய வேண்டும். அம்மையாரின் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு எனக் கொள்ளப்படுகிறது. அதற்கு ஆயிரம் ஆண்டுகள் முன்பு, அதாவது, புத்தர் மகாவீரர் இருவரும் தோன்றிய கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முன் இருந்த இந்தியாவின், குறிப்பாகத் தமிழகத்தின் சமய, சமூக நிலையைப் பார்ப்போம்.

சமயம் அல்ல,  வாழ்க்கை முறை

அப்பொழுது பாரதத்தில் இந்து சமயம் மட்டுமே இருந்தது. ஆனால் அதற்கு இந்து சமயம் என்ற பெயரும் இல்லை, வேறு எந்தப் பெயரும் இல்லை. அதற்குப் பெயரிடவேண்டிய அவசியமே இல்லை. வேறு ஒன்று இருந்தால் தானே அதிலிருந்து இதை வேறுபடுத்துவதற்குப் பெயர் அவசியம். அது சமயம் என்று கூட அழைக்கப்படவில்லை. தெய்வ நம்பிக்கையுடன் கூடிய வாழ்க்கை முறை மட்டுமே இருந்தது. இடத்துக்கு இடம் வணங்கப்படும் தெய்வங்கள் வேறுபட்டிருப்பினும், மனித சக்தியை விட மேம்பட்ட சக்தி ஒன்று உண்டு என்ற நம்பிக்கை அனைவருக்கும் பொதுவாக இருந்தது. இந்த வாழ்க்கை முறை தனி ஒரு மனிதரால் ஏற்படுத்தப்படவில்லை. காலம் காலமாக இந்திய சமுதாயம் சிந்தித்ததன் விளைவாக ஏற்பட்ட அனுபவ அறிவின் அடிப்படையில் அமைந்தது அது. காலம் செல்லச் செல்ல, சமுதாயத்தின் அனுபவம் முதிர முதிர,  வாழ்க்கை முறையும் மாறிக் கொண்டு வந்தது.

சமுதாய நலனுக்காக வர்ணப் பிரிவுகள்

கி.மு. ஆறாம் நூற்றாண்டு வரை சமுதாயம் நான்கு பிரிவுகளாகப் பிரிந்து இருந்தது. சமுதாயம் முழுமைக்குமாக மழை, நோயின்மை, நீண்ட ஆயுள் முதலானவற்றைக் கோரித் தெய்வங்களை வேண்டுவதற்காக ஒரு கூட்டம் இருந்தது. அவர்கள் அந்தணர் எனப்பட்டனர். அவர்கள் தோத்திரங்கள் இசைத்தும், வேள்வி இயற்றியும் மனித சமுதாய நலனுக்காகவும், பிற உயிரினங்களின் நலனுக்காகவும் இறைவனை வேண்டினர். “மித்திரனும், வருணனும் எங்களுக்கு நல்லவர்களாக இருக்கட்டும், இரண்டு கால் பிராணிகளுக்கும் நான்கு கால் பிராணிகளுக்கும் நலம் உண்டாகட்டும், எங்களுடைய பசுக்களையும் குழந்தைகளையும் காப்பாற்று, எங்களுக்குச் செல்வம் கொடு, எங்களுக்கு மழை பொழிவி” என்று சமுதாய நலனை வேண்டுபவையாக இருந்தன அவர்கள் பயன்படுத்திய வேத மந்திரங்கள். அதனால் தான் வள்ளுவர் அவர்களை எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுபவர்களாகக் குறிப்பிடுகிறார்.

அதே போல, சமூகம் முழுமைக்கும் வெளிப் படையெடுப்புகள் மற்றும் உள்நாட்டுக் கலகம் முதலியவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் அரசக் கூட்டத்தவர் இருந்தனர். வைசியர்கள் எனப்படுவோர் விவசாயம், வாணிகம், கைத்தொழில் இவற்றில் ஈடுபட்டுச் சமுதாயம் முழுமைக்குமான நுகர் பொருட்களை உற்பத்தி செய்துவந்தனர். நான்காம் வருணத்தவர் சமுதாயம் முழுமைக்குமான குற்றேவற் பணிகளைச் செய்து வந்தனர்.

தொழிலைத் தேர்ந்தெடுக்கச் சுதந்திரம்

அதற்கு முந்திய காலங்களில் எந்தத் தொழிலில் யாருக்கு நாட்டம் உள்ளதோ அவர் அந்தத் தொழிலைச் செய்யலாம் என்று இருந்தது. வர்ணம் தொழிலால் தீர்மானிக்கப்பட்டதே அன்றிப் பிறப்பால் நிர்ணயிக்கப் படவில்லை. ஆனால் நாம் பார்க்கும் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இந்த முறை கைவிடப்பட்டுப் பரம்பரை முறை வழக்கத்திற்கு வந்து விட்டிருந்தது. இதனால் சிலர் பரம்பரைத் தொழிலுக்குத் தகுதி இல்லாவிடினும், அதில் நாட்டம் இல்லாவிடினும் அவ்வத் தொழில்களில் திணிக்கப்பட்டிருப்பர் என ஊகிக்கலாம். இதனால் மற்றத் தொழில்களில் அதிகம் பாதிப்பு ஏற்படாமல் இருக்கலாம். ஆனால் அந்தணத் தொழிலை ஆன்மிக நாட்டமும், சுயநலமின்மையும் இல்லாதார் செய்ய நேரிடின் ஏற்பட்டிருக்கக் கூடிய இழப்பு அதிகமாகவே இருந்திருக்கும்.

பொருள் நாட்டம் உடையார் வைசியத் தொழிலுக்கே பொருத்தமானவர். அத்தகையோர் அந்தணர் குலத்தில் பிறந்து விட்ட காரணத்தால் அந்தணத் தொழிலைச் செய்ய வேண்டுமென்று நிர்ப்பந்திக்கப் படும்போது வேள்வி முதலானவற்றைப் பொருளீட்டும் வழியாகக் கொள்ளத் தொடங்குவர். ஒவ்வொரு ஊரிலும் இத்தகையோரின் எண்ணிக்கை, குறிப்பிடக் கூடிய அளவுக்குப் பெருகின் மக்களுக்கு அவர்கள் செய்யும் வேள்விகளிலும், அதற்கு ஆதாரமான வேதங்களிலும் நம்பிக்கை குறைவது இயல்பே.

புத்தரும் மகாவீரரும்

இத்தகைய ஒரு காலத்தில் தான் மகாவீரரும் புத்தரும் தோன்றினர். இருவரும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆன்மிகத் துறையில் அந்தணர்கள் வழிகாட்டத் தவறிவிட்டதால் இப்பொழுது அதில் அரசர்களும் பங்கு கொள்ளத் தொடங்கினர் என்பதை இது காட்டுகிறது.

புத்தரின் வரலாறு (கி.மு.563- 483) நாம் எல்லோரும் அறிந்ததே. துன்பம் என்னவென்றே அறியாமல் சுகபோகமாக வாழ்ந்து வந்தவருக்கு 30வது வயதில் தான் வாழ்க்கையின் துன்பங்கள் கண்ணில் பட்டன. மனித வாழ்வின் துயரங்களாகிய பிணி, மூப்பு, சாக்காடு என்பவற்றிலிருந்து விடுபட, வேள்வி அல்லாத வழி காண முனைந்தார் அவர். பல அறிஞர்களிடமும் இது பற்றிக் கேட்டார். வாழ்வு என்றால் துன்பம் தவிர்க்க முடியாதது என்றும் கடவுளை வேண்டுவது தான் அதிலிருந்து விடுபடும் வழி என்றும் அவர்கள் கூறியது அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை. வேறு வழி ஒன்று இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் அவர் சிந்திக்கத் தொடங்கினார்.

அவருக்குக் காலத்தால் சற்றே முந்தியவரான மகாவீரர் வாழ்க்கையும் (கி.மு.599- 527) இதே போலத் தான். அவரும் மனித குலத் துயர் தீர்க்கும் வழி தேடி 30ஆம் வயதில் வீட்டை விட்டு வெளியேறித் தவம் செய்யத் தொடங்கினார்.

கர்மாக் கொள்கையும் மறுபிறவிக் கொள்கையும்

மகாவீரர், புத்தர் இருவரது கொள்கைகளின் அடிப்படையும் ஒன்று தான். “ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் இருந்தே ஆக வேண்டும். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு. உலகம் முழுவதும் இவ்வாறு காரண காரியத் தொடர்பால் பிணைக்கப்பட்டு உள்ளது” என்ற அறிவியல் கோட்பாடே அது. நாம் இன்று அனுபவிக்கும் இன்பத்துக்கும் துன்பத்துக்கும் காரணம் நாம் முன்பு செய்த நல் வினை தீவினைகளே என்று கூறும் இதுவே சமயத் துறையில் கர்மாக் கோட்பாடு எனப் பெயர் பெற்றது.

வயது வந்த மனிதன் துன்பப்படுகிறான் என்றால் அவன் செய்த எந்தத் தவறான செயலால் இது வந்தது என்று ஆராய்ந்து கண்டுபிடிக்கலாம். பிறக்கும்போதே சில குழந்தைகள் குறையுடன் பிறப்பதற்கும், சில வறுமையான குடும்பத்தில் தோன்றி வாடுவதற்கும், சில வசதியான பெற்றோர்களின் வாரிசாக வளர்வதற்கும் என்ன காரணம் சொல்ல முடியும்? முந்தைய பிறவியில் செய்த செயல்களின் விளைவே இது என்ற முடிவுக்கு வருவதைத் தவிர வேறு வழி தெரிவதில்லை. எனவே கர்மாக் கொள்கையின் தொடர்ச்சியாகத் தோன்றியது மறு பிறவிக் கோட்பாடு.

இவை மகாவீரருக்கும் புத்தருக்கும் திடீரென்று தோன்றியது அல்ல. வாழ்க்கை என்னும் புதிர் பற்றி மனித சமுதாயம் தொடர்ந்து செய்து வரும் ஆராய்ச்சியின் விளைவே அது. அந்தக் கால கட்டத்தில் மக்கள் மத்தியில் படிப்படியாக வளர்ந்து வந்த கருத்துக்கு அவர்கள் உருவம் கொடுத்தனர்.

துன்பம் நீங்க வழி

“முற்பிறவியில் செய்த வினைகளே துன்பத்துக்குக் காரணம். பிறந்து விட்டவர் துன்பங்களை அனுபவித்துத் தான் தீர வேண்டும். வேண்டுமானால் அடுத்த பிறவியில் துன்பம் இல்லாமல் வாழ வழி உண்டு. இப்பிறவியில் அறநெறி வாழ்வைக் கடைப்பிடிப்பதன் மூலம் மீண்டும் பிறவாமல் இருக்கலாம்” என்று மகாவீரர் கூறினார்.

உடலை வருத்திக் கொள்வதன் மூலம் முன் வினைப் பயனை அனுபவித்து விட்டால் அது விரைவில் தீர்ந்துவிடும் என்று போதித்தார் மகாவீரர். அந்த வழியைச் சில காலம் கடைப்பிடித்துப் பார்த்த புத்தர், அது நடைமுறைக்குச் சாத்தியமில்லை என்று உணர்ந்து, இன்பங்களில் திளைப்பது, தன்னைத் துன்புறுத்திக் கொள்வது இரண்டுக்கும் இடைப்பட்ட நடுவழியைப் பின்பற்றலானார். மற்றபடி மகாவீரர் கொள்கைகளுக்கும் புத்தரின் போதனைகளுக்கும் அதிக வேறுபாடு இல்லை.

புத்தரின் போதனை என்ன? “வாழ்க்கை துன்பமயமானது. ஆசையே துன்பத்துக்குக் காரணம். நிறைவேறாத ஆசை மறுபிறவிக்குக் காரணமாகிறது. ஆசையை ஒழித்து அறநெறிப்படி வாழ்ந்தால் மறு பிறவியிலிருந்து தப்பலாம்” என்பது தான்.

கடவுட் கோட்பாடு

“நம் செயல்கள் தாம் நம் பிறப்பு, இறப்பு, இன்ப, துன்பங்களைத் தீர்மானிக்கின்றனவே தவிர உலகைப் படைத்துக் காத்து அழிக்கும் இறைவன் என்று ஒருவர் இல்லை. வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து முடிந்தவர்கள் தெய்வமாகப் போற்றப்படுகிறார்கள்” என்றார் மகாவீரர்.

புத்தரும் கடவுள் இருப்பதை ஒப்புக் கொள்ளவில்லை. “கடவுள் உண்டா இல்லையா என்ற பிரச்சினையில் புத்தியையும் நேரத்தையும் வீணாக்காமல் பிறவா நிலை அடைவதில் செலுத்துக” என்றார் அவர்.

சமுதாய நலனா, தனிமனித முத்தியா ?

பிணி, மூப்பு, சாக்காட்டை ஒழிப்பதில் வெற்றி பெறமுடியாது என்பதை உணர்ந்தபின் இலக்கை மாற்றிக் கொண்டனர் மகாவீரரும் புத்தரும். ஒவ்வொரு மனிதனும் பிறவா நிலையாகிய முத்தி நிலை அடைய வேண்டும் என்பதையே குறிக்கோளாகப் பிரசாரம் செய்தனர். இதனால் அவரவரது முத்திக்கு அவரவரே முயல வேண்டும் என்னும் கொள்கையும், வேள்வி என்பது செய்பவருக்கு மட்டும் தான் பலன் தரும், மற்றவருக்கு நன்மை இல்லை என்ற தவறான கருத்தும் பரவின. வேள்வி மந்திரங்கள் பிறவா நிலை அடைவதைக் குறிக்கோளாகக் கொள்ளவில்லை என்பதும், அவை சமுதாயம் முழுமைக்குமான உலகாயத நலன்களையே வேண்டின என்பதும் முன்னர்க் குறிப்பிடப்பட்டது.

பூர்வ மீமாம்சகர்

கர்மாக் கோட்பாடும், மறுபிறவித் தத்துவமும், இறை மறுப்புக் கொள்கையும் அக்கால கட்டத்தின் மனித சமுதாயச் சிந்தனை வளர்ச்சியின் விளைவு என்று பார்த்தோம். இக்கொள்கைகள் வேதத்தின் மேல் நம்பிக்கை இழந்த மகாவீரரையும் புத்தரையும் சிந்திக்கச் செய்து புதுச் சமயங்களைத் தோற்றுவித்தன என்றும் அறிந்தோம்.

வேதத்தின் மேல் நம்பிக்கையைக் கைவிடாத மக்களையும் இக்கொள்கைகள் பாதித்தன. கர்மாக் கொள்கை எல்லோராலும் ஒப்புக் கொள்ளக் கூடியதாக இருந்தது. நிரூபிக்கப்பட முடியாவிட்டாலும் கூட, மனித வாழ்வின் துன்பங்களுக்கு வேறு விளக்கங்கள் இல்லாத நிலையில், இது ஒரு பொருத்தமான விளக்கம் அளித்தது. எனவே அது வைதிகச் சமயத்தவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனால் பல மாற்றங்கள் ஏற்பட்டன.

வைதிகச் சமயத்தில் பூர்வ மீமாம்சகர்கள் என்ற சில சிந்தனையாளர்கள் தோன்றினர். அவர்கள் வேதத்தை நம்பி அதில் கூறப்பட்ட வேள்விகளையும் செய்தார்கள். மேலே கூறிய புரட்சிக் கருத்துகளையும் நம்பினார்கள். ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றும் இவ்விரண்டு துருவத்தையும் அவர்கள் எவ்வாறு இணைத்தார்கள்?

“ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு எனில், நாம் செய்யும் இந்த வேள்விக்கும் ஒரு விளைவு ஏற்பட்டே தீரவேண்டும். இந்திரனைக் குறித்துச் செய்யப்பட்ட வேள்வியின் விளைவாக மழை பொழியும் என்று வேதம் சொல்லி விட்டால் அதுவே சத்தியம். அவ்வாறே பிற சடங்குகளும் தத்தமக்கு உரிய பலன்களைக் கொடுத்தாக வேண்டும். கர்மாக்களே பலன் தரும் எனின் இறைவன் என்று ஒருவர் எதற்கு? அடுத்த ஜன்மத்தில் நாம் நல்ல பிறவி அடைந்து மகிழ்வதும் கெட்ட பிறவி அடைந்து துன்புறுவதும் இன்று நாம் செய்யும் வைதிகக் கர்மாக்களைப் பொறுத்தே உள்ளன. வேள்விகள் மூலம் மீண்டும் பிறவாத மோட்சமும் அடையலாம்” என்று அவர்கள் சிந்தித்தனர். அதற்காகப் புதிய வேள்வி முறைகளை உருவாக்கினர்.

மோட்சம் என்பதே சமண சாக்கிய மதங்களின் கண்டுபிடிப்புத் தான். வேத ஸம்ஹிதைகள் மோட்ச நிலை பற்றி எதுவும் கூறவி்ல்லை என்று பார்த்தோம். ஆனால் அதையும் அக்கால வைதிக சமயம் ஏற்றுக் கொண்டது. ஸம்ஹிதைக்குப் பின்னர் ஏற்பட்ட வேத இலக்கியத்தி்ல் இக்கொள்கைகள் இடம் பெற்றன. (ஸம்ஹிதை என்ற பகுதி தான் மிகப் பழமையானது. பிராமணம், ஆரணியகம், உபநிடதம் என்ற வேதப் பகுதிகள் காலத்தால் பிற்பட்டவை.)

வேதாந்திகள்

பூர்வ மீமாம்சகர்களைத் தொடர்ந்து வைதிக சமயம் மேலும் சிந்தித்தது. ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் இருந்தே தீரவேண்டும் எனில் இந்தப் பிரபஞ்சத்துக் காரணம் என்ன என்ற கேள்விக்கு விடை காண முயன்றனர் அவர்கள். பானை என்று ஒரு பொருள் இருந்தால் அதைச் செய்த குயவர் ஒருவர் இருக்க வேண்டும் அல்லவா? அது போல இந்தப் பிரபஞ்சத்துக்கும் படைப்போன் ஒருவன் இருக்க வேண்டுமே? இறைவன் படைத்ததாக வைத்துக் கொண்டால் இறைவன் எதைக் கொண்டு படைத்தான்? குயவருக்கு மண் உபாதான காரணமாக (துணைக் காரணமாக) இருப்பது போன்று உலகைப் படைப்பதில் இறைவனுக்கு உபாதான காரணமாக இருப்பது எது? இந்தக் கேள்விக்கு விடை சொன்னால் அந்தப் பொருளைப் படைத்தது யார் என்ற கேள்வி தொடர்ந்து கொண்டே இருக்கும். எனவே அவர்கள் இறைவன் வேறு ஒரு பொருளின் துணையை நாடாமல் தானே உலகாக மாறி நின்றான் எனக் கூறினர். இவர்கள் உத்தர மீமாம்சகர்கள் அல்லது வேதாந்திகள் எனப்பட்டனர். இவர்களது நூல்கள் உபநிடதம் எனப்பட்டன. இந்த உபநிடதங்கள் பெரும்பாலும் அரச குலத்தவர் போதித்ததாகவே காணப்படுகின்றன.

இறைவனே பிரபஞ்சமாக வியாபித்து நின்றான் ஆயின் இறைவன் இல்லாத இடம் இல்லை. எங்கும் நிறைந்த பொருள் ஆயின் அதற்கு அசைவு இருக்க முடியாது. அதற்கு ஒரு திட்டமான உருவமும் இருக்க முடியாது. ஒன்றுக் கொன்று பகையாகத் தோன்றும் பொருள்களும் அதுவே என்றால் அதற்கு விருப்பு வெறுப்பு இருக்க முடியாது. அதற்கு இன்ப துன்பங்களும் இல்லை. இறைவன் ஆணுமல்ல, பெண்ணுமல்ல. அவருக்குப் பெயரும் கிடையாது. எனினும் அதைக் குறிப்பிட ஒரு சொல் வேண்டுமே என்பதற்காக ‘பிரம்மம்’ என்றும் ‘அது’ என்றும் குறிப்பிட்டனர். அது எல்லாமாக வியாபித்து நிற்பது என்றால் “நானும் அதுவே, நீயும் அதுவே” என்று முடிவு கட்டினர்.

நானும் பிரம்மம், சூழ்ந்தது யாவும் பிரம்மம் என்று உணர்ந்து விட்டால் உலகில் பிறர் மேல் கோபம், பகைமை, பயம், கவலை ஏற்படாது. துன்பமும் இன்பமும் ஒன்றாகவே தோன்றும் அல்லவா? அந்த மனநிலையைத் தான் அவர்கள் முத்தி (உலகத் துன்பத்திலிருந்து விடுதலை) என்று குறிப்பிட்டனர்.

எனவே, “முத்தி அடைய இறக்கும் வரை காத்திருக்கத் தேவை இல்லை. இப்பொழுதே இங்கேயே அடைந்து விடலாம். வேள்வி முதலானவை செய்யத் தேவை இல்லை. அறிவினால் சிந்தித்தால் போதும்” என்றனர்.

இவ்வாறு கடவுளை நம்ப அவசியம் இல்லாமல் வேள்வி மூலம் எதையும் சாதிக்கலாம் என்று ஒரு கூட்டமும், (இவர்கள் பெரும்பாலும் அந்தணர்கள்) வேள்விகள் செய்யாமல் தியானத்தின் மூலம் இங்கேயே முத்தி அடையலாம் என்று ஒரு கூட்டமுமாகப் (இவர்கள் பெரும்பாலும் அரச குலத்தினர்) பிரிந்தது வைதிகச் சமயம். இரண்டுமே தங்கள் கருத்துகளுக்கு வேதத்தையே ஆதாரமாகக் காட்டின.

சமண சாக்கியங்களின் வளர்ச்சி

மூன்றாம், நான்காம் வர்ணத்தைச் சேர்ந்த மக்களுக்கு மட்டுமன்றி முதல் இரு வர்ணத்தைச் சேர்ந்த பலருக்கும் கூட இந்த இரண்டுமே சாத்தியம் இல்லை. மோட்சம் பற்றிய கருத்துகள் உருவாவதற்கு முன்பு, தமக்கு வேண்டிய உலகியல் நலன்களைத் தெய்வத்திடம் வேள்வி மூலம் கோரிப் பெறும் கடமையை வேதியரிடம் ஒப்படைத்து விட்டுத் தத்தம் கடமைகளைச் செய்து கொண்டிருந்த மக்களுக்கு, முத்தி என்றொரு புதிய குறிக்கோள் ஏற்படுத்தப்பட்டதும், அவரவர் முத்திக்கு அவரவரே முயல வேண்டும் என்பதும் பெரும் சுமையாக இருந்தது. எல்லோரும் வேள்வி செய்வதற்குரிய வசதியோ, வாய்ப்போ பெற்றிருக்கவில்லை என்பது தான் காரணம். வேள்வி இல்லாமல் முத்தி அடையும் உபநிடத வழியும் அவர்களுக்குப் புரியவில்லை. நானும் பிரம்மம், நீயும் பிரம்மம் என்ற கருத்து அவர்களால் புரிந்து ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. இதனால் சமண சாக்கிய சமயங்களின் வழி எளிதாக இருக்கவே பெரும்பாலான மக்கள் அதனைப் பின்பற்றத் தொடங்கினர். அவர்களில் அந்தணரும் உண்டு, அரசரும் உண்டு. ஆனால் நடுத்தர மக்களாகிய வணிகர்களே மிகுதி. கீழ்த்தட்டு மக்களோ இந்தத் தத்துவச் சிக்கல்களைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் தங்கள் தொல்பழம் தெய்வங்களை வணங்கி வந்தனர்.

சமண சாக்கிய சமயங்கள் ஏற்பட்ட காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டின் இறுதி அல்லது ஐந்தாம் நூற்றாண்டின் துவக்கம். அப்பொழுதிலிருந்தே இச்சமயங்கள் சிறிது சிறிதாகத் தமிழகத்தில் நுழைந்திருக்க வேண்டும். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய அசோகன் காலத்தில் இவை நிச்சயமாகத் தமிழகத்தில் மிகுதியாகப் பரவி இருக்கும். ஆனால் இவை உச்ச கட்டத்தை அடைந்தது கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கும் ஆறாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தான்.

தமிழ்நாட்டில் களப்பிரர் காலம்

கி.பி.250க்கும் 575க்கும் இடைப்பட்ட மூன்று நூற்றாண்டு காலத்தைத் தமிழகத்தின் இருண்ட காலம் என்று சொல்கிறார்கள். இக்கால கட்டத்தில் கருநாடகத்தைச் சேர்ந்த களப்பிரர் என்னும் கூட்டத்தார் சேர சோழ பாண்டியர்களை வென்று தமிழ்நாடு முழுவதும் ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் சமண சாக்கிய சமயங்களைச் சார்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இருண்ட காலம் என்று சொல்லப்படுவதற்குக் காரணம், இக்காலம் பற்றி அறியப் போதுமான வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்பது தான். தமிழகத்தைப் பொறுத்தவரை இலக்கியங்களும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் தான் பெரும் வரலாற்றுச் சான்றுகளாக இருந்து வந்துள்ளன. களப்பிரர் காலத்தில் ஏற்பட்டிருந்த இலக்கியங்கள் அனைத்தும் மறு உலக வாழ்வைப் பற்றிய சிந்தனைகளாகவும் அறவுரைகளாகவும் உள்ளனவே தவிர மக்களின் அன்றாட வாழ்வையோ, அக்கால முக்கிய நிகழ்ச்சிகளையோ பிரதிபலிப்பனவாக இல்லை.

கல்வெட்டுகள் ஏன் ஏற்படவில்லை? பொதுவாகக் கல்வெட்டுகள் அரசரின் கொடை, வீரம் இவற்றை வெளிப்படுத்தும் நோக்கத்துடனே பொறிக்கப்பட்டு வந்துள்ளன. சமண சாக்கிய சமயத்தைச் சார்ந்த அவர்கள் பிற்கால அரசர்கள் போல பிராமணர்களுக்கும், சிவாலயங்களுக்கும், விண்ணகரங்களுக்கும் கொடைகள் அளிக்காதிருக்கலாம். விகாரங்களுக்கும் பள்ளிகளுக்கும் பள்ளிச் சந்தங்கள் அளித்திருக்கக் கூடுமே, அது பற்றி அவர்கள் ஏன் கல்லில் வெட்டவில்லை?

சங்க காலம் வரை சேர சோழ பாண்டியர்கள் வலிமை மிக்கவர்களாக விளங்கினர். பிற்காலத்தில் இவர்களுடன் பல்லவர்களும் வலிமை பெற்றனர். தங்களுக்குள்ளே இடைவிடாமல் போர் செய்து கொண்டிருந்த இந்தத் தமிழ் வேந்தர்கள் பத்துத் தலைமுறை எப்படி அடங்கி இருக்க முடிந்தது? இவர்கள் அனைவரையும் அடக்கி வைக்கக் கூடிய அளவு வலிமை பெற்றவரா களப்பிரர்? அப்படி ஆயின் அத்தகைய வலிமையை ஏன் அவர்கள் மெய்க்கீர்த்திகள் மூலம் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை? அவர்களைப் புகழ்ந்து புலவர் எவரும் பாடவில்லையே, ஏன்?

களப்பிரர் காலத்தில் சேர சோழ பாண்டியர்கள் முற்றிலும் அழிந்து விடவில்லை. இக்கால கட்டத்தில் பாண்டியன் ஒருவன் இலங்கையில் ஆட்சி நிலை நாட்டியதையும்,சோழர்கள் இரேணாட்டில் (ஆந்திரத்தின் கடப்பை, கர்நூல் பகுதிகள்) சிறப்பாக ஆட்சி செய்ததையும் நோக்குக.

மறு உலக நாட்டம்

உண்மையில் இந்த மூன்று நூற்றாண்டுகளில் தமிழகத்தைக் களப்பிரர்கள் ஆண்டார்கள் என்று சொல்வதை விட, இவ்வுலக வாழ்வில் உற்சாகம் இல்லாமல் மறு உலக வாழ்வில் நாட்டம் செலுத்தும் மனப்போக்கு ஆண்டது என்று சொல்வதே பொருந்தும்.

‘பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும் பேரின்பம்’ என்ற கொள்கை உடைய சமண சாக்கிய சமயங்கள் தாம் இந்தப் போக்குக்கு முக்கிய காரணம். “அறநெறியை வலியுறுத்திப் பிறவா நிலையான மறு உலக வாழ்வுக்கு ஆயத்தம் செய்வதே இவ்வுலக வாழ்வின் நோக்கம்” என்றும் “இவ்வுலக இன்பங்கள் மறு உலகப் பயணத்தைத் தடை செய்யுமாதலால் இவற்றை மறுத்து வாழ வேண்டும்” என்றும் அவை கூறின.

அறம், பொருள், இன்பம் என்ற மூன்றை மட்டும் வாழ்வின் குறிக்கோளாகக் காட்டியது வைதிகச் சமயம். பின்னர், சமணத்தின் தாக்கத்தால் வீடுபேறு அடைதலை நான்காவதாக ஏற்றுக் கொண்டது. அறம், வீடு இரண்டை மட்டும் வலியுறுத்தி இடைப்பட்ட இரண்டையும் கைவிட்டன புறச் சமயங்கள். மனித வாழ்வு நிலைகளிலும் இல்வாழ் பருவம், காடுவாழ் பருவம் இரண்டையும் நீக்கி மாணவப் பருவத்திலிருந்து நேரடியாகத் துறவு பூணுவதை ஊக்குவித்ததும் அவையே.

சங்க நூல்கள் உணவிலும், காதலிலும், போரிலும் காட்டும் உற்சாகம் எங்கே? வாழ்க்கையைச் சுமையாகக் கருதும் தேக்க நிலை எங்கே?

சமண சாக்கியங்கள் மதிப்பிழந்தன

                 சமணம் சாக்கியம் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிக் கொள்கை உடையவை, பௌத்தத்தை விடச் சமணம் இவற்றை அளவு கடந்து வலியுறுத்தியது என்பது தான் அவற்றிற்கு இடையேயுள்ள வேறுபாடு என்பதை முதலில் கண்டோம். எனவே தமிழகத்தைப் பொறுத்தவரை அவை இரண்டும் சேர்த்தே பேசப்படுகின்றன.

ஆரம்பத்தில் இச்சமயங்கள் தமது எளிமை காரணமாக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்க வேண்டும். நாளடைவில் மக்கள் சிந்திக்கத் தொடங்கினர். இன்று நம் கண் முன் உள்ள பிரச்சினைகளுக்கு வழி சொல்லாமல், எங்கோ எப்பொழுதோ அடையப் போகிற வீட்டுலகிற்கு வழி சொல்கின்றனவே இச்சமயங்கள் என்று நினைத்திருக்கக் கூடும் அவர்கள்.

மகாவீரரும் புத்தரும் அறிவு சார்ந்த தர்க்க வாதத்தின் மூலம் ஆராய்ந்து கடவுள் இல்லை என்று கூறிவிட்டதால், மக்களிடையே நாத்திகம் வேரூன்றி இருந்தது. புதிய சிந்தனை தோன்றிய காலத்தில் இந்த அறநெறிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் மோட்சம் அடைவோம் என்பதை மட்டும் எப்படிப் பகுத்தறிவின் மூலம் நிரூபிக்க முடியும் என்று அவர்களுக்கு ஐயம் ஏற்பட்டிருக்கக் கூடும்.

எனவே அற நெறியில் மக்களுக்கு நாட்டம் குறைந்தது. மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய துறவிகளே ஒழுக்கம் தவறி வாழத் தலைப்பட்டனர். உழைக்காமல் வாழ விரும்பிய சோம்பேறிகளுக்கும் மனம் போல வாக்கில் வாழ விரும்பிய தூர்த்தர்களுக்கும் புகலிடமாயின சமண, சாக்கியப் பள்ளிகள். இதைச் சம்பந்தரின் தேவாரம் விரிவாகக் கூறுகிறது. அதனால் புறச்சமயத்தவர் பொது மக்களின் வெறுப்புக்கு ஆளானார்கள். நல்லொழுக்கம் உள்ளவர்களும் நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறியவர்களாக இருந்தனர். அவர்கள் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்த அளவுக்கு உணர்ச்சிக்கு இடம் கொடுக்கவில்லை. மனித வாழ்வு என்பது அறிவு உணர்ச்சி இரண்டின் கலவை அன்றோ? உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் வறட்டுத்தனமான தர்க்க ரீதியாக வாழ்க்கைப் பிரச்சினைகளை அணுகிய அவர்களது போக்கினால் அலுப்படைந்தனர் மக்கள்.

அக்காலத்தில் சாமானிய மக்களுக்கு முன் நின்ற பிரச்சினை என்ன? முற்பிறப்பில் அறியாது செய்த வினைகளால் துன்புறுத்தப்படாமல் எல்லோரும் இன்பமாக வாழவேண்டும். இறந்த பின் மீண்டும் பிறவாமையாகிய முத்தி அடைய வேண்டும். இந்த இலக்குகளை அடைய வேள்வி, பிரம்மத் தியானம் போன்ற சிக்கலான வைதிக வழிகளோ, சமண சாக்கியம் கூறும் துறவு வழிகளோ அல்லாத எளிய வழி ஒன்று வேண்டும்.

இப்படியாகச் சமண சாக்கிய சமயங்கள் தம் உயர் நிலையினின்றும் வீழ்ந்து மக்கள் பிரச்சினைகளுக்கு விடை அளிக்க முடியாமல் போகவே, சமுதாயம் முழுமையும் செய்வதறியாது திகைத்து நின்ற காலத்தில் அம்மையார் தோன்றினார்.

அம்மையாரின் குடும்பம்

காரைக்கால் பல வணிகர்களும் நெருங்கி வாழும் பதி என்கிறார் சேக்கிழார். சமண சாக்கிய சமயங்களை வணிகர்கள் தாம் ஆதரித்து வந்தனர் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே காரைக்கால் வாழ் வணிகர்களும் சமணத்தைச் சார்ந்தவர்களாக இருக்கக் கூடும்.

தனதத்தன், நிதிபதி, பரமதத்தன், புனிதவதி என்ற வடமொழிப் பெயர்கள் இதற்கு மேலும் வலுச் சேர்க்கின்றன. ஸம்ஸ்கிருதம் தொல்காப்பியக் காலத்திலிருந்து தமிழ்நாட்டில் இருந்து வந்த போதிலும் பொதுமக்கள் வழக்கில் அம்மொழிச் சொற்கள் மிகுதியாகப் பயன்பட்டது சமணர் ஆதிக்கம் பெருகிய பின் தான். திருஞான சம்பந்தரின் பாடல்களை விட அப்பரின் பாடல்களில் வடசொற்கள் மிகுதியாக உள்ளதையும், மருள் நீக்கியார் என்ற தமிழ்ப் பெயர் தாங்கிய அப்பர், சமண சமயத்தில் சேர்ந்த பின் தருமசேனர் என்ற வடமொழிப் பெயர் பெற்றதையும், தருமபாலர், புத்தமித்திரர் போன்ற வடமொழிப் பெயர் தாங்கிய புறச் சமயத்தார் அனைவரும் பச்சைத் தமிழரே என்பதையும்  கவனிக்க வேண்டும்.

அம்மையார் பாடல்களில் சங்க காலத்தை விட மிகுதியான வடசொற்கள் (4 சதவீதம்) உள்ளன. சரணாரவிந்தம், அட்டமூர்த்தி, ஞானமயன், சிவகதி போன்ற கூட்டுச் சொற்கள் பயன்படுத்தப் படுவதிலிருந்தும், பிற்காலத்தில் ஆகாயம், தயை என்று தற்பவமாகப் பயன்பட்டது போல் அல்லாமல் ஆகாசம், தயா என்று தற்சமம் ஆளப் பட்டதிலிருந்தும் அவர் வடமொழியை மிகுதியாகப் பயன்படுத்திய சமணக் குடும்பத்தில் பிறந்தவர் என ஊகிக்கலாம்.

இவரது கணவன் முழுமுதற் கடவுள் ஒருவர் உண்டு என்ற நம்பிக்கை இல்லாதவன் என்பது, அம்மையார் மாங்கனி வரவழைத்த போது அவன், ஈசன் அருள் எனக் கேட்டும் அது தெளியாது இருந்ததாலும், தணிவரும் பயம் மேற்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி அவரை வேறு ஓர் அணங்கு  எனக் கருதி அச்சமடைந்ததிலிருந்தும் அறிகிறோம். தொலைவில் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார் என்று சேக்கிழார் கூறுவதிலிருந்து அவருடைய உறவினர்கள் அனைவருமே இந்தப் புதுமை கண்டு அஞ்சினார்களே அன்றி, இது ஈசன் அருள் என உணராத நாத்திகர்களாகத் தான் இருந்தனர் எனத் தெரிகிறது.

சேற்றில் செந்தாமரை முளைத்தது போல இத்தகைய சமணக் குடும்பத்தில் தோன்றிய அம்மையாரைக் கொண்டு சைவத்தைத் தழைக்கச் செய்ய வேண்டும் என்பது ஈசனின் திருவுள்ளம் போலும்.

அண்மைக் காலத்தில், வேதக் கல்வி வழக்கொழிந்து போன வங்காளத்தில் அந்தணரல்லாத குடும்பத்தில் தோன்றிய விவேகானந்தர் மூலமாக வேதத்தின் பெருமை உலகளாவப் பரவியதை ஒப்பிடுக.

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காரைக்கால் அம்மையார்- ஒரு ஆய்வு Copyright © 2014 by jayend16 and சு.கோதண்டராமன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.