"

5

சமண சாக்கிய சமயங்களின் தாக்கம் அன்றைய தமிழகம் முழுவதும் நிறைந்திருந்தது. அவர்களது கொள்கைகளில் சிலவற்றை அக்கால மக்களி்ல் எல்லாத் தரப்பினருமே ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்பது தெரிகிறது. அம்மையாரும் அதற்கு விதிவிலக்கு அல்ல. ஆனால் அவரது கால்கள் வேதத்தில் நிலைபெற்றிருந்தன. அதனால் சமணக் கருத்துகளைச் சைவத்திற்கு ஏற்றபடி மாற்றி அமைத்துக் கொள்கிறார்.

பிறவியை ஒரு பிணி எனக் கூறிய சமணம், காமத்தைப் பெரும் பகையாகக் கருதியது. சிவன் தன் மனைவியைப் பிரியாமல் இருப்பது புறச்சமயத்தாரின் விமரிசனத்துக்கு இலக்கான பின் அதை முறியடிப்பதற்காகச் சிவன் காமனை எரித்தவர் என்ற ஒரு கருத்துரு ஏற்பட்டிருப்பதைக் காண்கிறோம். இது அம்மையார் காலத்தில் அல்லது அவருக்கு முன்பே ஏற்பட்டிருக்கக் கூடும்.  இத்தகைய எதிர்வினை வைணவத்தில் ஏற்படாததையும், சமணத்தை முறியடிக்கும் பணியைச் சைவம் மட்டுமே மேற்கொண்டது என்பதையும் நோக்குக.

சமண சாக்கியங்கள் வலியுறுத்திய கர்மாக் கொள்கையும் மறுபிறவிக் கொள்கையும் வேதத்தில் இல்லாதவை. அதை ஏற்றுக் கொண்ட அம்மையார் முற்பிறவியில் செய்த வினையின் பயனாகத் தான், தான் மண்ணில் பிறக்க நேர்ந்தது என்று கருதிப் பல முறை வினை என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார். “சிவனை வணங்குபவரை வினை நெருங்காது, அவனது அடியாரின் நிழலைக் கண்டாலே ஓடிவிடும்” என்று கூறுகிறார் அவர்.

 

கழற்கொண்டசேவடிகாணலுற்

றார்தம்மைப் பேணலுற்றார்

நிழற்கண்டபோழ்தத்தும்நில்லா

வினைநிகர் ஏதுமின்றித்

தழற்கொண்டசோதிச்செம்மேனியெம்

மானைக்கைம் மாமலர்தூய்த்

தொழக்கண்டு நிற்கிற்கு மோதுன்னி

நம்அடுந் தொல்வினையே.         (தி-11)

 

சாக்கிய சமணர்கள் கூறும் அறவழிகளையும் அவர் புறக்கணிக்கவில்லை. தலையாய கொள்கைகளான பஞ்சசீலத்தைக் கடைப்பிடிப்பதோடு தலையாய அண்டத்தானாகிய ஆதிரையான் செம்பொற் கழலடியில் தாழ்ந்து பணிவோரே உண்மையை உணர்ந்தவர் என்கிறார். அம்மானுக்கு ஆட்பட்ட அன்பின் காரணமாகத் தன்னிடம் புண்ணியங்களும் ஐந்து அறநெறிகளும் பொருந்தியதாகக் கூறுகிறார் அவர்.

 

தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து

தலையா யினவுணர்ந்தோர் காண்பர் தலையாய

அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட

கண்டத்தான் செற்பொற் கழல்.         (தி-10)

 

புண்ணியங்கள்செய்தனவும்பொய்ந்நெறிக்கட்சாராமே

எண்ணியோ ரைந்தும் இசைந்தனவால் திண்ணிய

கைம்மாவின் ஈருரிவை மூவுருவும் போர்த்துகந்த

அம்மானுக் காட்பட்ட அன்பு.       (தி-16)

 

இறைவனிடம் அவர் வைக்கும் ஒரே வேண்டுகோள், ‘இடர் தீர்ப்பாயாக’ என்பது தான். என்ன இடர்? அது செல்வமின்மையோ, உடல் நலமின்மையோ அல்ல, பிறவிப் பிணி தான். சமண சாக்கியர்கள் அறநெறி மூலம் பிறவிப் பிணியை நீக்க முடியும் என்று போதித்தனர். அம்மையாரோ இறைவன் ஒருவன் தான் அதைச் செய்ய முடியும் என்று நம்பியதால் அவர் அதை இறைவனிடம் வேண்டுகிறார்.

அம்மையார் வணங்கிய பெம்மான் வேதத்தில் நிலை பெற்றவன். அவனை வேதியன் என்றும், வேதப் பொருளான் என்றும், வேதத்திற்கு ஆதியன் என்றும் நாவாரப் புகழ்கிறார் அவர். வேதத்தில் ஆதிரை நட்சத்திரத்தை ருத்திரனுக்கு உரியதாகச் சொல்லப்பட்டிருப்பதை நினைவு கூர்க. அதை மறவாமல் குறிப்பிடுகிறார் அம்மையார்.

 

வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்

காதியனை ஆதிரைநன் னாளானைச் சோதிப்பான்

வல்லேன மாய்ப்புக்கு மாலவனும் மாட்டாது

கில்லேன மாஎன்றான் கீழ்.        (தி-8)

 

அவர் வேதத்தைப் புறக்கணிக்கவில்லை. அதற்குப் பூர்வ மீமாம்சகரும் வேதாந்திகளும் கொடுத்த விளக்கத்தைத் தான் மறுக்கிறார். வேதத்தை நம்புவதன் மூலமே இறை நம்பிக்கையை ஊட்டமுடியும் என்பதால் அதற்குப் பெருமதிப்புக் கொடுக்கிறார். அந்தணர்களும், அரசர்களும் வேதநெறியைச் சிக்கலாக்கி, சாமானிய மக்களுக்கு அப்பாற்பட்டதாகச் செய்து விட்ட நிலையில், வைசியரான அவர் காட்டிக் கொடுத்த பக்தி வழி அவர்களுக்கு ஆறுதல் தந்தது. பிறவா நிலை அடைவதற்கு ஒரு எளிய வழி கிடைத்துவிட்டது.

களப்பிரர் காலத்தில் இவ்வுலக வாழ்வைச் சுமை எனக் கருதும் சமண சாக்கிய இயக்கத்துக்கு எதிர் வினை அதே காலத்தவரான அம்மையாரின் பாடல்களில் காண முடிகிறது. அம்மையாரின் பாடல்கள் வானோர் பிரானின் புகழை மட்டும் பாடவில்லை, அக்கால சமண சாக்கியக் கொள்கைகளின் மறுப்பாகவும் அவை விளங்கின. உண்மையில், சம்பந்தர் பாடல்கள் சமண சாக்கியர்களின் ஆடையின்றி இருத்தல், பாயினைக் கையில் ஏந்தித் திரிதல், கையில் உணவு பெற்று நின்ற நிலையில் உண்ணல், தலையை மழித்தல், துவராடை உடுத்தல் ஆகிய புறவொழுக்கங்களைச் சாடுகின்றனவே அன்றி கொள்கைகளைப் பற்றி எதுவும் குறை கூறவில்லை. அம்மையார் ஒருவர் தான் கொள்கை ரீதியாக அவர்களை எதிர்த்தார்.

அம்மையார், சம்பந்தர் போல, சமணர்களுடன் வாதம் செய்யவில்லை. ஆனால் அவர்களது இறை மறுப்புக் கொள்கையை மறைமுகமாகச் சுட்டி அதை மறுக்கிறார். இறை அன்புச் சுவையை உணரமாட்டாத புறச் சமயத்தவர் இறைவனை இகழ்ந்ததைக் கண்ட அவர், அவனை இகழாது ஏத்தினால் மறுபிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவர், இதை அறியாத அவர்கள், உணர்ந்து கொண்ட எம்மைப் புறன் உரைப்பதில் நேரத்தை வறிதே செலவிடுகின்றனரே” என்று இரங்குகிறார்.

 

இவரைப் பொருளுணர மாட்டாதார் எல்லாம்

இவரை இகழ்வதே கண்டீர்- இவர்தமது

பூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த

பேய்க்கோலங் கண்டார் பிறர்.      (அ- 29)

 

மதியா அடலவுணர் மாமதில்மூன் றட்ட

மதியார் வளர்சடையி னானை- மதியாலே

என்பாக்கை யாலிகழா தேத்துவரேல் இவ்வுலகில்

என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு.    (அ-37)

 

திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய்

உரைமருவி யாமுணர்ந்தோங் கண்டீர்- தெரிமினோ

இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே

எம்மைப் புறனுரைப்ப தென்           (அ-91)

 

நூலறிவைப் பயன்படுத்தித் தர்க்க வாதம் செய்து கடவுள் இல்லை என்று கூறி வந்தவர்க்கும், அறிவினால் ஆராய்ந்து நீயே பிரம்மம் என்று உணர்க என்று கூறியவர்க்கும் அம்மையார் அறிவினால் மட்டும் பிரச்சினைகளைத் தீர்த்து விடமுடியாது என்றும் இறை நம்பிக்கை ஒன்றே மனிதனைத் துன்பங்களிலிருந்து கரையேற்றும் என்றும் பதில் அளிக்கிறார். ‘நூலறிவு பேசி நுழைவிலாதார் திரிக’ என்று பூர்வ மீமாம்சகர், வேதாந்திகள், சமணர்கள், சாக்கியர்கள் அனைவரையும் விரட்டுகிறார்.

நியாயம், வைசேஷிகம், சாங்கியம், யோகம், பூர்வ மீமாம்சம், வேதாந்தம் என்று பல வகையாக வேதத்திற்கு விளக்கம் அளித்தனர் அறிவு ஜீவிகள். இவை ஒன்றுக்கொன்று முரண்படுவதிலிருந்தே அவை எதுவுமே முழு உண்மை அல்ல என்பதை அவர் உணருகிறார். பின் வேதத்தின் உண்மையான கருத்து தான் என்ன? ‘ஒன்று உளது மெய்ப்பொருள், பலரும் பலவிதமாய் ஓதுவர்’ என்ற வேதக் கருத்து அவரை மிகவும் கவர்ந்திருக்க வேண்டும்.

“எவர் எவரோ எப்படி எல்லாமோ பேசுவார்கள். அவை புரியவில்லையே என்று கவலைப்படாதீர்கள். இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை நம்புங்கள். அறிவினால் அவனை அறிய முடியாது. அவனிடத்தில் பக்தி கொள்வதன் மூலம் அவனது அருளுக்கு ஆளாகிச் சிவகதி என்னும் பிறப்பிலா நிலை அடைய முடியும். நீங்கள் எந்தக் கோலத்தில் எந்த உருவத்தில் வழிபட்டாலும் இறைவன் உங்களுக்கு அந்தக் கோலத்தில் அந்த வடிவத்திலேயே காட்சி கொடு்த்து ஆட்கொள்வான்” என்கிறார் அவர்.

 

வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்

தானத்தான் என்பாரும் தாமென்க- ஞானத்தான்

முன்நஞ்சத் தாலிருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்

என்நெஞ்சத் தானென்பன் யான்.         (அ-6)

 

நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக

நீல மணிமிடற்றான் நீர்மையே- மேலுலந்த

தெக்கோலத் தெவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்

அக்கோலத் தவ்வுருவே ஆம்.            (அ-33)

 

அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன்

அருளே பிறப்பறுப்ப தானால்- அருளாலே

மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்

எப்பொருளும் ஆவ தெனக்கு.            (அ-9)

 

நாத்திகம் பேசுபவர்களை வாதத்தின் மூலம் ஆத்திகராக்க முடியாது. இறைவன் இருப்பதை உள்ளத்தால் தான் உணர முடியும். நீ வணங்கும் இறைவன் எத்தகைய உருவினன் என்று நாத்திகர்கள் கேட்பதற்கு விடை இறுப்பது போல அம்மையார் கூறுகிறார், “பிறந்து மொழி பயின்ற போதே எனக்கு இறைவன் மேல் காதல் ஏற்பட்டுவிட்டது. நான் கண்ணால் பார்த்து அவனிடம் ஆட்படவில்லை. இன்று வரை பார்த்ததும் இல்லை. நான் எப்படி உங்களுக்குக் கூற முடியும்? பிரானவனை எங்குற்றான் என்பீர்கள். என்போல்வார் சிந்தையிலும் இங்குற்றான். காண்பார்க்கு எளிது. உள்முகமாகப் பார்வையைச் செலுத்துபவருக்கு சிந்தையுள் சோதியாய்த் தோன்றுபவன் அவன். அவன் வானத்தானா, தானத்தானா என்று வாதம் செய்யாமல், நெஞ்சத்தான் என்பதை உணருங்கள்” என்கிறார்.

 

பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்

சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்-  (அ-1)

 

அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன்

இன்றுந் திருவுருவங் காண்கிலேன்- என்றுந்தான்

எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன்

எவ்வுருவோ நின்னுருவம் ஏது      (அ-61)

 

…………………………………………………………………..பிரானவனை

எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையினும்

இங்குற்றான் காண்பார்க் கெளிது.    (அ-45)

 

……………………………………………….காதலாற்- காண்பார்க்குச்

சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்

காதியாய் நின்ற அரன்.             (அ-17)

 

பிறவாமை ஒன்றையே வாழ்வின் குறிக்கோளாகக் கருதிய சமணத்திலிருந்து மாறுபட்டு, “பிறவாமை விரும்பத் தக்கது தான். ஆனால் மீண்டும் பிறப்புளதேல் இறைவனை மறவாமை வேண்டும்” என்று கோரும் அம்மையார் “இறைவனுக்கே எழுபிறப்பும் ஆளாவோம், அவன் தாளைச் சரணடைந்து விட்டதாலேயே மீளாப் பிறவிக் கனைகடலை நீந்தினோம்” என்று பாடுகிறார். அதாவது இறைவனைப் போற்றிப் பாடும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றால் அது இவ்வுலக வாழ்வைச் சுமை ஆக்காது என்கிறார்.

 

அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம்  (அ-3)

 

இனியோ நாம்உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்

இனியோர் இடரில்லோம் நெஞ்சே- இனியோர்

வினைக்கடலை ஆக்குவிக்கும் மீளாப் பிறவிக்

கனைக்கடலை நீந்தினோம் காண்.     (அ-16)

 

அரன் எதற்காகக் கபாலம் ஏந்திப் பலி திரிகிறான், எதற்காக ஈமவனத்தில் ஆடுகிறான் என்று மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலாகக் கூறுகிறார், பிறர் அறியலாகாப் பெருமையனான அவனைப் புரிந்து கொள்ள நம்மனோர்க்கு இயலாது. முதலில் அவனை அடையும் வழியைப் பாருங்கள், நேரில் பார்க்கும்போது இந்தக் கேள்விகளை எல்லாம் அவனிடம் கேட்டுக் கொள்ளலாம்.

 

இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே

எங்கும்பலிதிரியும்எத்திறமும்- பொங்கிரவில்

ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம்

நாமவனைக் காணலுற்ற ஞான்று       (அ-25)

 

வேத சமயம் அஞ்சத் தகுந்த பொருள்களையும் அஞ்சாமல் வியந்து பாராட்டுவதை அடிப்படையாகக் கொண்டது. பாரதி கூறுகிறார், “புயற் காற்று அடித்தது, வேதரிஷிகள் அதன் முன்னே போய் நின்றார்கள். ஆயிர மின்னல்கள் வாள் போலே வீசின. உலகம் குலுங்கிற்று. அண்டங்கள் இடிவது போலே சத்தம் கேட்டது. மேற்படி ரிஷிகள் பயப்படவில்லை. மந்திரங்களைப் பாடினார்கள்.”

விவேகானந்தர் கூறுகிறார், “உலகிலேயே பயப்படாதே என்று திரும்பத் திரும்பக் கூறும் இலக்கியம் உபநிடதம் ஒன்று தான்.“

அம்மையார் போற்றும் ஈசன் அச்சம் தரும் தோற்றம் கொண்டவன் தான். அவனைச் சூழ்ந்துள்ள பொருள்களும் அச்சம் தருவனவே. ஆயினும் அம்மையார் அஞ்சவில்லை. ஆனந்தம் தான் அடைகிறார். அலைகடலும் அணங்கும் தனக்குத் துன்பம் தராமல் இருக்க வேண்டும் என்று அச்சத்தின் காரணமாக அவர்களை வணங்கும் பரமதத்தனின் இயல்போடு ஒப்பிடுக.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காரைக்கால் அம்மையார்- ஒரு ஆய்வு Copyright © 2014 by jayend16 and சு.கோதண்டராமன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.