"

8

கணவனாலும் உறவினர்களாலும் கைவிடப்பட்ட அம்மையார் பாண்டிய நாட்டிலிருந்து கைலைக்குச் சென்றதாகவும் பின் அங்கிருந்து திருவாலங்காடு வந்து முத்தி அடைந்ததாகவும் சேக்கிழார் கூறுகிறார். அவர் கைலைக்குச் சென்றதாகக் கூறுவது ஒரு உபசார வழக்காக இருக்கக் கூடும். ஏனெனில் அம்மையார் கைலையை இறைவனின் இருப்பிடமாகக் கூறவும் இல்லை, கைலையைக் காண வேண்டும் என்று அவர் விரும்பியதற்கான அடையாளங்களும் அவரது பாடல்களில் இல்லை. பாண்டிய நாட்டிலிருந்து புறப்பட்டு வடக்கு முகமாகச் சென்றதைத் தான், கைலை நோக்கிச் சென்றதாகச் சேக்கிழார் கூறியதாகக் கொள்ள வேண்டும்.

அவர் கால் போன போக்கில் அலைந்து, செல்லும் இடங்களில் எல்லாம் இறைவன் புகழை வாய் ஓயாது உரைத்திருப்பார் என்பதை ஊகிக்கலாம். பலர் அவரைப் பேய் எனக் கருதி அஞ்சி ஓடினாலும் அவரைப் போற்றி ஆதரித்தோரும் இருந்திருக்க வேண்டும். அவர்கள் மூலமாகத் தான் அவரது பாடல்கள் இன்று நமக்குக் கிடைத்துள்ளன.

இறைவன் ஆலமரங்களிடையே நடனமாடுகிறான் என்ற அவரது கருத்து மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்றுப் பரவியதால் பல ஊர்கள் ஆலங்காடு என்று பெயரிடப்பட்டன. அத்தகைய இடங்களில் அவர் அதிக நாட்கள் தங்கி இறை வழிபாடு செய்திருப்பார். அங்கு அவரால் தாக்கம் பெற்றுச் சமணம் துறந்து சைவ நெறியை மேற்கொண்டோர் தொகை மிகுதியாக இருக்க வேண்டும். அவ்வகையில் இந்த ஆலங்காடுகள் சைவத்தின் நாற்றங்காலாகப் போற்றத் தக்கன.

இந்தக் கருதுகோளுக்கான ஆதாரம், தலை ஆலங்காடு என்ற ஊர்ப் பெயர் தான். இவ்வூர் திருவாரூருக்கு அருகில் உள்ளது. இது அப்பர் தேவாரம் பெற்ற தலம். இங்கு இறைவன் நடனபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தமிழ்ப் பெயர்களை ஸம்ஸ்கிருதத்தில் மாற்றும்போது நேருக்கு நேராகத் தான் மொழிபெயர்ப்பது வழக்கம். அவ்வகையில் இரு திருவாலங்காடுகளும் வடாரண்யம் என்று கூறப்படுகின்றன. (வட- ஆல், அரண்யம்- காடு) ஆனால் தலையாலங்காடு நர்த்தனபுரி என்று கூறப்படுகிறது. எனவே தலை ஆலங்காடு என்று பெயரிடப்பட்டது இறைவனின் ஆடற்கோலத்தை நினைவு கொண்டே என்ற முடிவுக்கு வருவது தவிர்க்க முடியாதது. தலை என்ற அடைமொழி இது அம்மையாரின் பாடலை ஒட்டிப் பெயர் பெற்ற முதல் ஊராக இருக்கக் கூடும் என்பதைத் தெரிவிக்கிறது. மற்ற ஆலங்காடுகளிலிருந்து வேறுபடுத்துவதற்காக இது தலை ஆலங்காடு என்று பெயரிடப் பட்டிருக்கலாம்.

அம்மையார் தன் முதல் பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் திருவாலங்காடு என்னும் இடத்தைக் குறிப்பிடுகிறார். தேவார ஆசிரியர்களும் பிறரும் ஒரு ஊரை வர்ணிக்கும் போது அந்த ஊரின் சிறப்பு அம்சமாக- அருகிலுள்ள ஆற்றின் பெயர், மலை, கடல், சோலைகள், மாட மாளிகைகள், அந்தணர்கள் மிகுதியாக வாழ்வது- இப்படி ஏதேனும் ஒன்றைக் குறிப்பிடுவது வழக்கம். சுடுகாட்டுச் சூழலை வர்ணித்து விட்டு இத்தகைய திருவாலங்காட்டில் எங்கள் அப்பன் ஆடுகிறான் என்று அம்மையார் காட்டும் காட்சிகள் எல்லா ஊர்ச் சுடலைகளுக்கும் பொருந்துவதாக உள்ளன. அவர் எந்தச் சுடலைக்கும் சென்றதில்லை என்பதும் மக்கள் பேசிக் கொள்வதை வைத்துத் தான் அவர் அதை விவரிக்கிறார் என்பதும், ‘நீ இரவில் தீயாடும் இடத்தை எனக்கு ஒரு நாள் காட்டுதியோ’ என்று கேட்பதிலிருந்து அறியலாம்.

மாங்காடு, மாங்குடி, புளியங்குடி, வேலங்குடி, ஆலங்குடி என்று அந்தந்த ஊரில் மிகுதியாக உள்ள மர வகையின் அடிப்படையில் ஊருக்குப் பெயரிடுவது வழக்கம் தான் என்றாலும் ஆலங்காடு எனப் பெயரிடப்பட்ட ஊர்கள் அமைந்திருக்கும் வரிசை அமைப்பைப் பார்த்தால் அவை மரத்தின் காரணமாகப் பெயரிடப்பட்டிராமல் அம்மையாருடன் தொடர்பு கொண்டமையால் அப்பெயர் பெற்றிருக்கலாம் என்று நினைக்க இடம் ஏற்படுகிறது. நான் அறிந்தவரை தமிழ்நாட்டில் ஆலங்காடு என்று பெயர் பெற்ற ஊர்கள் 7 உள்ளன. அவையாவன-

ஆலங்காடு 1- அதிராம்பட்டினத்திற்கு மேற்கில் 30 கி.மீ. தொலைவில் புதுக்கோட்டை சாலை அருகில் உள்ளது. இவ்வூரில் சிவன் கோவில் இல்லை. 5 கி.மீ. தொலைவில் ஆலங்குடி என்னுமிடத்தில் உள்ளது. இது முன்னாட்களில் பாண்டிய நாட்டின் பகுதியாக இருந்திருக்கலாம்.

ஆலங்காடு 2- முத்துப்பேட்டை- திருத்துறைப்பூண்டி சாலையில் கடற்கரையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு அண்மைக் காலத்திய சிவன் கோவில்கள் இரண்டு உள்ளன.

ஆலங்காடு 3- தலையாலங்காடு. நாகப் பட்டினத்திலிருந்து 30 கி.மீ. மேற்கில் திருவாரூர்- கும்பகோணம் சாலையில் உள்ளது. அப்பர் பாடல் பெற்றது.

ஆலங்காடு 4-  தரங்கம்பாடியிலிருந்து 30கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் உள்ளது. கோவில் மூன்றாம் குலோத்துங்கன் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. முன்னர் அரச ஆதரவு பெற்றிருந்ததாலும், தற்போது திருவாவடுதுறை ஆதீனத்தால் பராமரிக்கப்படுவதாலும் நல்ல நிலையில், அளவிலும் பெரியதாக உள்ள இக்கோவில் திரு என்ற அடைமொழியுடன் கூடியதாக உள்ளது.

ஆலங்காடு 5- காரைக்கால்- சீர்காழி சாலையில் கருவிழந்தநாதபுரம் அருகில் உள்ளது. அங்கு ஒரு சிவன் கோவில் இருந்தது. இன்று அது பற்றி ஊர் மக்களில் எவரும் அறியவில்லை. ஓய்வு பெற்ற ஆசிரியர் ரத்தினசாமி என்ற முதியவர் மட்டுமே இவ்வூர் இங்குள்ள சிவன் கோவிலை ஒட்டியே ஆலங்காடு எனப் பெயரிடப்பட்டது என்பதை அறிவித்தார். அவரது உறவினராகிய வேல்முருகன் என்ற இளைஞருக்குச் சொந்தமான கருப்பங் கொல்லையின் நடுவில் ஒரு சிவலிங்க பாணம் மட்டும் உள்ளது. அங்கு கோவில் இருந்ததற்கான அடையாளங்கள் புதையுண்டு இருப்பதாகக் கூறுகிறார்.

ஆலங்காடு 6- சீர்காழி– பழையார் பாதையில் உமையாள் பதிக்கு அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள கோயிலில் இறைவன் பெயர் அவுட்டீஸ்வரர் எனச் சொல்லப்படுகிறது. ஆலங்காட்டீஸ்வரர் என்பதன் மருவாக இருக்கலாம்.

ஆலங்காடு 7- சென்னைக்கு மேற்கில் 60 கி.மீ. தொலைவில் அரக்கோணம் சாலையில் உள்ளது. இதுவும் திரு என்னும் அடைமொழி பெற்றது. அம்மையார் இந்தத் தலத்தில் முத்தி அடைந்ததாகச் சேக்கிழார் கூறுகிறார். பாண்டிய நாட்டிலிருந்து புறப்பட்ட அம்மையார் மேற்கண்ட வரிசைப்படியான தலங்கள் வழியாகப் பயணம் செய்து இறுதியாக இங்கு வந்து சேர்ந்ததாகக் கருதலாம்.

மேற்கண்ட ஏழு ஊர்களில் ஐந்தாவது ஆறாவது நீங்கலாக மற்ற ஐந்தும் வரைபடத்தில் கிட்டத்தட்ட ஒரு நேர்கோட்டில் அமைந்திருப்பதைப் பார்க்கும்போது இது அம்மையார் கடந்து வந்த பாதையாக இருக்கலாம் என்ற எண்ணம் வலுப்படுத்துகிறது. அந்த இரண்டு மட்டும் ஏன் ஒதுங்கி உள்ளன என்பது தெரியவில்லை.

அம்மையாரின் பயணப் பாதையாக இதைக் கருதுவதில் மேலும் ஒரு தடை உள்ளது. இவற்றில் முதல் ஆறு தலங்களும் சோழ மண்டலக் கடற்கரை அருகில் அமைந்துள்ளன. அவை ஒன்றுக்கொன்று அருகாமையில்- ஓரிரு நாள் நடைப் பயணத்துக்கு உட்பட்டதாக- உள்ளன. ஆறாவதாகச் சொல்லப்பட்ட ஆலங்காட்டிற்கும் ஏழாவதாகச் சொல்லப்பட்ட திருவாலங்காட்டிற்கும் இடையே சுமார் 200 கி.மீ. உள்ளது. சோழ மண்டலத்து மக்கள் அம்மையாரை வரவேற்று உபசரித்துத் தங்கள் ஊர்களுக்கு ஆலங்காடு எனப் பெயரிட்டுக் கொண்ட அளவுக்கு வடக்கே உள்ள மக்கள் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை.

இதற்கு ஒரு காரணம் சொல்லலாம். இவ்விடங்கள் பல்லவர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருக்கக் கூடும். பல்லவர்கள் அப்பரால் போதிக்கப்படு முன் சமணர்களாகவே இருந்தனர் என்பது அறிந்த விஷயம். இங்கெல்லாம் சமணம் மிக அதிகமாக வேரூன்றி இருக்கக் கூடும்.

இந்தச் சோழநாட்டுத் திருவாலங்காட்டுக்கும் பல்லவ நாட்டு திருவாலங்காட்டுக்கும் இடையில் அமைந்துள்ள தில்லை தான் ஆடற்பெருமானின் தலைநகரமாக அம்மையாருக்குப் பின் விளங்கியது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காரைக்கால் அம்மையார்- ஒரு ஆய்வு Copyright © 2014 by jayend16 and சு.கோதண்டராமன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.