"

11

இவ்வுலக இன்பங்களை வெறுத்து ஒதுக்கிய சமண சாக்கியங்கள் இசை, நடனம் ஆகிய கலைகளில் ஈடுபடுவது மறு உலக வாழ்வுக்குத் தடையாக இருக்கும் எனப் போதித்தன. ஆனால் அம்மையார் அவற்றையே பயன்படுத்தி இறை நெறியைப் போற்றுகிறார். இறைவனை ஆடும் தெய்வமாக உருவகப்படுத்தி, அவருக்கு உறுதுணையாக இசை முழங்குவதையும் குறிப்பிட்டு இக்கலைகளைத் தெய்வத் தன்மை கொண்டதாக ஆக்குகிறார்.

துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை ஆகிய ஏழு சுரங்களைப் பட்டியல் இடுகிறார் அவர். தமிழ் இலக்கியத்தில் இவற்றைக் கூறும் முதல் நூலே இவருடையது தான். மற்றப் பண்டைய நூல்களினின்றும் இவருடைய சுர வரிசை சற்றே மாறுபடுகின்றது. மற்ற நூல்களில் குரல் எனக் காணப்படும் சுரத்துக்குப் பதிலாக அம்மையார் ஓசை என்று கூறுகிறார். மேலும் மற்ற நூல்களில் இந்த ஓசை (குரல்) முதலாவதாக வருகிறது. அம்மையார் கடைசியாக வைக்கிறார். இந்த ஏழு சுரங்களின் கூட்டுறவால் பண் வகைகள் உண்டாகின்றன என்று அவர் கூறுகிறார்.

இனி அம்மையார் கூறும் வாத்தியங்களைப் பார்ப்போம். சச்சரி, கொக்கரை, தக்கை, தகுணிதம், துந்துபி, வீணை முதலான சுர வாத்தியங்களையும் தாளம், மத்தளம், கரடிகை, வன்கை, மென்தோல், தமருகம், குடமுழா, மொந்தை ஆகிய தாள வாத்தியங்களையும் அவர் குறிப்பிடுகிறார்.

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காரைக்கால் அம்மையார்- ஒரு ஆய்வு Copyright © 2014 by jayend16 and சு.கோதண்டராமன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.