"

13

ஆடற்பெருமான் வழிபாடும் பக்தி இயக்கமும் அம்மையாரின் இறை அன்பு நெறியின் நேரடி விளைவுகள். அவர் வேறு சில மறைமுக விளைவுகளுக்கும் காரணமாக இருந்தார் என்பதை இனிக் காண்போம்.

தமிழ்நாட்டின் பிற பகுதிகள் போல் சோழநாட்டிலும் சமண சாக்கிய சமயங்கள் பெருகி வளர்ந்தன. புகழ் பெற்ற புத்த விகாரங்கள் இருந்த நாகப்பட்டினம், பூதமங்கலம் ஆகியனவும், காரைக்காலுக்கு மிக அருகாமையில் கொல்லார்புரம், புத்தர்குடி என வழங்கும் ஊர்ப் பெயர்களும், சம்பந்தர் திருநள்ளாறிலிருந்து திருத்தெளிச்சேரி வருமுன் அவரை வாதுக்கு அழைத்த சாக்கியர்கள் மீது இடி விழுமாறு செய்தார் என்ற பெரிய புராணக் குறிப்பும் சோழநாட்டு மக்களிடையே புறச்சமயங்கள் செல்வாக்குப் பெற்றிருந்ததைக் காட்டும்.

ஆனால் சோழநாட்டு மன்னர் எவரும் சமணத்தையோ சாக்கியத்தையோ தழுவினதாகச் சான்றுகள் இல்லை. சோழநாட்டை ஆண்ட களப்பிர மன்னன் கூற்றுவன் கூடச் சிறந்த சைவனாகவே விளங்கினான். கூன் பாண்டியனும் மகேந்திர பல்லவனும் சமணத்தைத் தழுவியிருந்து சைவர்களுக்கு இன்னல் விளைத்த பெரிய புராணச் செய்தியையும், சேர நாட்டு இளவரசன் இளங்கோ சமணத் துறவியானது குறித்துச் சிலம்பு தரும் செய்தியையும் இதனோடு ஒப்பிடுக.     

சைவ சமய எழுச்சிக்குச் சோழநாடு தொட்டிலாக விளங்கியது. இதற்குக் காரணமான அம்மையார், சம்பந்தர், திருமூலர் ஆகியோர் இங்கு தான் தோன்றினர். சைவத்தின் தலைநகரான தில்லையும் சோழநாட்டில் தான் உள்ளது. சைவத்தின் மிகப் பெரிய மாற்றங்கள் இக்காலத்தில் சோழ நாட்டில் ஏற்பட்டதற்குக் காரணம் என்ன?

வேதநெறி ஒன்றே நாத்திகத்தை வேரறுத்துச் சைவத்தை நிலை நாட்டும் என்பதை, அம்மையார் சிவனை வேதநாயகனாகப் போற்றியதிலிருந்து சோழ மன்னர்கள் உணர்ந்திருக்க வேண்டும். எனவே வேதநெறி பரப்புவதற்காக வடக்கிலிருந்து அந்தணர்களை வரவழைத்தனர்.

அம்மையார் காலத்துக்கும் அப்பர் காலத்துக்கும் இடையில் வடக்கிலிருந்து அந்தணர்கள் வந்தார்கள் என்பதை எப்படி அறிகிறோம்?

அம்மையார் காலம் வரை இல்லாத கணபதி வழிபாடும் திருநீறு பூசும் வழக்கமும் அப்பர் காலத்தில் காணப்படுகின்றன. அம்மையார் இறைவன் சுடலை நீறு பூசிய மேனியனாகக் காட்சி தருவதாகக் கூறுகிறாரே அன்றித் தான் நீறு பூசியிருப்பதாகவோ மற்ற இறை அன்பர்கள் பூசியிருப்பதாகவோ சொல்லவில்லை. திருநீறு தந்து சம்பந்தர் பாண்டியனின் நோய் தீர்த்ததையும், திலகவதியார் அப்பரின் சூலை நோயைப் போக்கியதையும் பார்க்கும் போது அவர்கள் காலத்தில் சிவனடியார்கள் திருநீறு பூசும் வழக்கம் ஏற்பட்டுவிட்டதை அறிகிறோம். இது பசுஞ்சாணத்திலிருந்து தயாரிக்கப்பட்டது என்பதைக் கவனிக்க. மகாராஷ்டிர அந்தணர்கள்  ஹோமம் செய்த பின் அந்தச் சாம்பலை நீரால் குளிர்வித்துப் பூசும் வழக்கம் இருந்தது. இன்றும் அது அங்கும் இங்கும் தொடர்கிறது.

அது போலக் கணபதி வழிபாடும் மராட்டியப் பகுதியில் மட்டும் தான் உண்டு. எனவே இவை அங்கிருந்து அக்காலத்தில் இங்கு வந்து குடியேறிய ஒரு கூட்டத்தினரால் அறிமுகப்படுத்தப் பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

அவர்கள் அந்தணர்கள் என்பதை எப்படி அறிகிறோம்?

மராட்டியக் கொங்கணக் கடற்கரைப் பகுதியின் சித்பாவன் பிராமணர்களின் உடல் அமைப்பு தமிழ் நாட்டில் சில பிராமணரிடம் காணப்படுகிறது என்று வரலாற்று ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரி கூறுவதிலிருந்து வந்தவர்கள் அந்தணர்கள் என்று தெரிகிறது. மேலும், தமிழ்நாட்டு ஸ்மார்த்தப் பிராமணர்கள் தினசரி சந்தியா வந்தனத்தில் நர்மதை நதிக்கு வணக்கம் செலுத்துகின்றனர். எனவே வந்தவர்கள் கொங்கணக் கடற்கரையில் நர்மதை நதி முகத்துவாரமாகிய புரோச் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிகிறது.

இந்தக் குடியேற்றத்துக்குக் காரணம் என்ன? பஞ்சம் காரணமாகப் பிழைக்க வந்தார்கள் எனச் சொல்ல முடியாது. அவ்வாறு இருந்தால் அந்தணர்கள் மட்டும் வந்திருக்க முடியாது. பிற சாதியினர் வந்ததற்கான சான்றுகள் இல்லை. அரச அழைப்பின் பேரில் தான் வந்திருக்க வேண்டும்.

அழைத்தவர்கள் சோழ அரசர்கள் என்பதை எப்படி அறிகிறோம்? சோழ நாட்டில் தான் அந்தணர்களுக்கு மிகுதியான நிலங்கள் இறையிலியாகக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் அண்மைக் காலம் வரையிலும் இங்கு தான் அந்தணர்கள் மிகுதியாக வாழ்ந்தனர். 

ஏன் நர்மதை நதிக்கரையிலிருந்து வரவழைத்தனர்? குஜராத்தில் லகுலீசர் என்பார் வேத ருத்திரனைப் பசுபதி என்ற பெயரில் வழிபடும் வழக்கத்துக்கு அடிகோலினார். பாசுபத சைவம் எனப்பட்ட இச்சமயம் அருகில் உள்ள நர்மதை நதிக்கரையில் பரவி இருந்திருக்க வேண்டும்.  மேலும் அக்காலத்தில் நர்மதை நதிக்கரை வேத நூற்கல்விக்கு ஒரு நிலைக்களனாக விளங்கி இருக்க வேண்டும் என்பது மேற்கல்வி கற்க விரும்பிய சங்கரர் அங்கு சென்றதிலிருந்து அறியப்படுகிறது. எனவே வேதநெறி சார்ந்த சைவத்தை வளர்க்க விரும்பிய சோழ அரசர்கள் இப்பகுதியிலிருந்து அந்தணர்களை வரவழைத்திருக்க வேண்டும்.

லகுலீசரின் பிறந்த ஊராகிய காரவான் என்பதன் அடிப்படையில் இச்சமயம் காயாரோகண சைவம் எனப்பட்டது. தமிழ்நாட்டில் குடந்தை, நாகை, திருவொற்றியூர் ஆகிய மூன்று ஊர்களும் காயாரோகணத் தலங்கள் என அழைக்கப்படுவதிலிருந்து வந்தவர்கள் இம்மூன்று இடங்களில் முதன் முதலில் குடியேறி இருக்கவேண்டும் எனத் தெரிகிறது. இவற்றில் முதல் இரண்டு இடங்கள் சோழ நாட்டில் உள்ளவை. மூன்றாவதும் சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருக்க வேண்டும். இதற்குப் பிற்காலத்தில் தான் அப்பகுதிகள்  பல்லவ நாடாகப் பெயர் பெற்றன.

தமிழ் நாட்டில், குறிப்பாகச் சோழ நாட்டில் அதற்கு முன் அந்தணர்கள் இல்லையா? இருந்தனர். ஆனால் அக்காலத் தமிழ் அந்தணரிடையே சிலர் மட்டுமே சைவத்தைச் சார்ந்து இருந்தனர் என்பது, தில்லை மூவாயிரவர், ஆவுடையார்கோவில் முந்நூற்றுவர், திருவீழிமிழலை ஐநூற்றுவர் என்று சைவ அந்தணர்களது எண்ணிக்கை மட்டும் சுட்டப்பட்டிருப்பதால் அறியலாம். பெரும்பான்மையான மற்றவர்கள் திருமால் வழிபாடே தமிழ் மண்ணின் பழமையான நெறி என்ற கொள்கையில் நிலைத்திருக்கக் கூடும். திந்நாகர் போன்ற சில பௌத்தர்கள் பிராமண குலத்தவர் என்று கூறப்படுவதிலிருந்து சிலர் சமண சாக்கியத்தைச் சார்ந்து இருந்ததும் பெறப்படுகிறது.

இந்த அந்தணர்கள் செய்தது என்ன?

அம்மையாரால் துவக்கப்பட்ட சைவ மறுமலர்ச்சி இயக்கத்தை இந்த வடபுலத்து அந்தணர்கள் மேலும் கொண்டு செலுத்தினர். இவர்களால் தமிழகத்தில் வேதக் கருத்துகளும் பரவின, கணபதி வழிபாடு, திருநீறு அணிதல் ஆகிய வழக்கங்களும் பரவின.

 வேதத்தைப் பரப்பினர்

அம்மையார் காலத்தில் இல்லாத சிவன் என்ற பெயரும் நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரமும் திருமூலர், அப்பர், சம்பந்தர் காலத்தில் மிகுதியாக வழக்கில் இருப்பதிலிருந்து இக்காலத்தில் தமிழ்நாட்டில் யஜுர் வேதத்தின் ருத்ரம் என்ற பகுதியும் அதனுடன் இணைந்த சமகம் என்பதும் முதன்மைப் படுத்தப்பட்டன என்பதை அறிகிறோம்.

இப்பகுதிகளின் முக்கியத்துவம் என்ன?

நமசிவாய என்ற மந்திரம் ருத்ரம் என்ற வேதப் பகுதியில் காணப்படுகிறது. இறைவனின் பல தோற்றங்களை விவரித்து, வணக்கம் தெரிவித்துக் கொண்டு வரும் 273 போற்றிகளில் 226வது மற்றும் 227வதாக நம சிவாய, சிவதராய என்று வருகிறது. மங்கலமானவருக்கு வணக்கம், மிக அதிகமான மங்கலமுடையாருக்கு வணக்கம் என்று இவை பொருள்படும்.

எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்ற மையக் கருத்து உடையது ருத்ரம். அரசனுக்கு ஆலோசனை கூறும் அறிஞர் சபையின் தலைவர் முதல் தன் யஜமானின் வயலில் கதிர்களைத் திருடும் கடைக்கோடி மனிதன் ஈறாகப் பல வகை நிலை மனிதர் வடிவிலும் விளங்குபவராக வர்ணிக்கப்படுகிறார் ருத்திரன். இது செய்தொழில் வேறுபாட்டால் எவரும் தெய்வத் தன்மை இழப்பதில்லை என்பதை உணர்த்திச் சாமானிய மக்களும் சைவத்தில் பங்கு கொள்வதை ஊக்குவித்தது.

உதாரணத்துக்கு ருத்ரத்திலிருந்து இடையிடையே சில வரிகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

நமோ மந்த்ரிணே வாணிஜாய கக்ஷாணாம் பதயே நம

அமைச்சருக்கு, வணிகருக்கு, அடர்ந்தபுதர்களின்தலைவருக்குவணக்கம்.

உச்சைர் கோஷாய க்ரந்தயதே பத்தீனாம் பதயே நம

உரக்கக் கத்துபவருக்கு, பகைவரை அழவைப்பவருக்கு, காலாள் படை வீரர்களின் தலைவருக்கு வணக்கம்.
நமோ நிஷங்கிணே இஷுதிமதே தஸ்கராணாம் பதயே நம
அம்பு ஏந்தியவருக்கு, அம்பறாத் தூணியைத் தாங்கியவருக்கு, கொள்ளைக்காரர்களின்  தலைவருக்கு வணக்கம்.

நமோ வஞ்சதே பரிவஞ்சதே ஸ்தாயூனாம் பதயே நம
ஏமாற்றுபருக்கு, திட்டமிட்டுஏமாற்றுபவருக்கு, நயவஞ்சனையால்திருடுபவர்களின்தலைவருக்குவணக்கம்.

நம ஸ்ருகாவிப்யோ ஜிகாம் ஸத்ப்யோ முஷ்ணதாம் பதயே நம
கவசம் அணிந்து காத்துக் கொள்பவருக்கு, மற்றவரைக் கொல்ல விரும்புபவருக்கு, வயல்களில் யஜமானரின் தானியங்களைத் திருடுபவர்களின் தலைவருக்கு வணக்கம்.

நம உஷ்ணீஷிணே கிரிசராய குலுஞ்சானாம் பதயே நம
முண்டாசு அணிந்தவருக்கு, மலைகளில் சஞ்சரிப்பவருக்கு, வயல்களிலும் வீடுகளிலும் திருடுபவர்களின் தலைவருக்கு வணக்கம்
நம ஆஸீனேப்யச் சயானேப்யச்ச வோ நம
உட்கார்ந்திருப்பவர்களும் படுத்திருப்பவர்களும் ஆகிய உங்களுக்கு வணக்கம்
நம ஸ்வபத்ப்யோ ஜாக்ரத்ப்யச்ச வோ நம
தூங்கிக் கொண்டிருப்பவர்களும் உட்கார்ந்திருப்பவர்களும் ஆகிய உங்களுக்கு வணக்கம்
நமஸ் திஷ்டத்ப்யோ தாவத்ப்யச்ச வோ நம
நிற்கிறவர்களும் ஓடுகிறவர்களும் ஆகிய உங்களுக்கு வணக்கம்

நமஸ் ஸபாப்யஸ் ஸபாபதிப்யச்ச வோ நம
அறிஞர் சபையின் உறுப்பினர்களும் சபைத் தலைவர்களும் ஆகிய உங்களுக்கு வணக்கம்
நமோ அச்வேப்யோ அச்வபதிப்பயச்ச வோ நம

குதிரைகளும் குதிரைகளின் தலைவர்களும் ஆகிய உங்களுக்கு வணக்கம்

நமோ மஹத்ப்ய க்ஷுல்லகேப்யச்ச வோ நம
பெரியவர்களும் சிறியவர்களும் ஆகிய உங்களுக்கு வணக்கம்
நமோ ரதிப்யோ அரதேப்யச்ச வோ நம
ரதத்தில் செல்கிறவர்களும் ரதமில்லாமல் கால்நடையாகச் செல்கிறவர்களும் ஆகிய உங்களுக்கு வணக்கம்

நம குலாலேப்ய கர்மாரேப்யச்ச வோ நம
குயவர்களும் கருமார்களும் ஆகிய உங்களுக்கு வணக்கம்
நம புஞ்சிஷ்டேப்யோ நிஷாதேப்யச்ச வோ நம
வலையினால் பறவைகளைப் பிடிப்பவர்களும் மீன் பிடிப்பவர்களும் ஆகிய உங்களுக்கு வணக்கம்

நம கபர்தினே ச வ்யுப்த கேசாய ச
சடைத் தலையருக்கும் மொட்டைத் தலையருக்கும் வணக்கம்

வேதத்தில் நம (வணக்கம்) என்று தொடர்ந்து பல முறை வரும் பாடல் இது ஒன்றே. இது, ‘நாமாலை சூடியும் நம்மீசன் பொன்னடிக்கே பூமாலை கொண்டு புனைந்து அன்பால் ஏத்த வேண்டும்’ என்று அடியார்களுக்கு அம்மையார் உணர்த்தியபடி நாமாலைக்கு ஏற்றதாக அமைந்திருக்கிறது. (அ-87) வேதம் ஓத முடியாதவர்களும் சொல்லக் கூடியதாக நமசிவாய மந்திரம் அமைந்து, பாமர மக்களுக்கும் பிறவிப் பிணி அறுக்க எளிய வழி கிடைத்ததால் சைவம் மக்கள் இயக்கமாக வளர்ந்தது.

பிரபலப்படுத்தப்பட்ட இரண்டாவது வேதப்பாடலான சமகம் இவ்வுலக வாழ்வுத் தேவைகளைக் கோருவது ஆகும். உணவு, புகழ், கேள்வித் திறமை, சத்துருக்களை வெல்லும் திறன், ஆயுள், நல்ல உடல், புத்திர பௌத்திரர்கள், வித்தை, நன்னம்பிக்கை, வசீகரண சக்தி, ஆடல் பாடல், செல்வம், இவ்வுலக இன்பம், சொர்க்கம், நல்ல வீடு, நோயின்மை, பயமின்மை, பலவகை தானியங்கள், மலைகள், மரங்கள் என்று இப்படியாகச் சுமார் 343 பொருட்கள் எனக்கு உரியனவாக ஆகட்டும் என்று வேண்டும் இது, அக்னியையும் விஷ்ணுவையும் குறித்ததாகத் துவங்கி, என்னைத் தேவர்கள் காப்பாற்றட்டும், பிதிரர்கள் அதை ஆமோதிக்கட்டும் என்று முடிவடைகிறது.

சிவன் பெயரோ, ருத்ரன் பெயரோ வராவிடினும் இப்பாடல் சிவனுக்கு உரியதாக ஆக்கப்பட்டது. இது பிரசாரம் செய்யப்பட்டதால் மறுவுலகிலேயே பார்வையைப் பதிய வைத்துக் கொண்டு இவ்வுலக வாழ்வைப் புறக்கணிக்கும் சமண சாக்கியப் போக்கு மாற்றப் பட்டது. சமணத்தை எதிர்த்து வைணவம் போரிட்டதாகச் சான்றுகள் இல்லை.

சிவன் என்னும் நாமம் ஏற்பட்டது எப்படி?

கறைமிடற்று அண்ணல் சிவந்த மேனி உடையவர் என்ற கருத்து சங்க நூல்களிலும் அம்மையார் பாடல்களிலும் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இறைவன் சிவன் என்ற பெயரால் சுட்டப்படவில்லை. எனவே சிவந்த நிறம் மட்டுமன்றி, வேறு ஒரு காரணமும் சேர்ந்து கொண்டதால் தான் அப்பெயர் வழங்கலாயிற்று என ஊகிக்கலாம்.

சிவகதி அருள்பவர் சிவன்

முத்தி நிலையைக் குறிப்பிடச் சமணர்கள் சிவகதி என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளனர் என்று, காரைக்கால் அம்மையார் பாடல்களுக்குத் தான் எழுதிய உரையில் திரு.வி.கலியாணசுந்தரனார் கூறுகிறார். இந்த வடசொல் மங்கலகரமான, நல்ல நிலைமை என்று பொருள் தருவது. கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட சமணர்களைப் பொறுத்தவரை, சிவகதி என்பது இறைவன் என்ற ஒருவர் இல்லாமலேயே மகாவீரர் கொள்கைகளின் மீது நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல் இவற்றால் விளைவது.

அம்மையார் முதல் மூத்த திருப்பதிகத்தின் கடைக்காப்பில் ‘காரைக்காற் பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்தின்பம் எய்துவாரே’ என்கிறார். அவர் குறிப்பிடுவது முத்தி நிலையையே.

சங்க காலத்தில் காய் கடவுள் என வழங்கப்பட்டு அஞ்சுதலுக்கு உரியவராகக் கருதப்பட்ட கண்ணுதற் கடவுள் அம்மையார் காலத்தில் ஒரு மாற்றம் பெற்றிருப்பதைக் காண்கிறோம். இப்பொழுதும் அவரது தோற்றம் அச்சம் தருவதாகத் தான் இருக்கிறது. ஆனால் அவர் அடியார்களிடம் அன்பு மிகுந்தவராகச் சித்தரிக்கப்படுகிறார். அவருடைய தோற்றத்துக்காக அவரை இகழாது போற்றினால் அவர் அடியார்களுக்கு எல்லாம் கொடுப்பார், நம்மை அவர் எந்த உயர்நிலையிலும் வைப்பார், எந்த உயர் உலகமும் தருவார் என்று அவருடைய எளிவந்த கருணையைப் போற்றுகிறார் அம்மையார். (அ-29, 78)

இறைவன் காமனையும், காலனையும், முப்புரத்தையும் எரித்தவன் மட்டுமல்ல, விசயனுக்கு வில் அளித்த கருணையாளனும் கூட. ராவணனின் முரணை அழித்தானே அன்றி அவனையே அழிக்கவில்லை. அத்தகைய ஈசனை அன்பென்னும் போர்வையினுள் சுருட்டி நெஞ்சத்துக்குள் மறைத்து வைத்துவிட்டோம் என்று பெருமிதப்படுகிறார் அம்மையார். (அ-96)

இறைவனை அஞ்சுதற்குரியவன் என்ற தொலைவிலிருந்து அன்புக்குரியவன் என்ற அண்மைக்குக் கொண்டுவந்த அவர் இன்னும் சற்று நெருங்கி அவனைக் கிண்டல் செய்யவும் துணிகிறார் என்பதை முன்னர்க் கண்டோம்.

இவ்வாறு இறைவனின் நன்மை தரும் கோலத்தை முதன்மைப்படுத்தி அம்மையார் ஏற்படுத்திய பக்தி அலை இந்தத் தன்மையை வெளிப்படுத்தும் ஒரு அடைமொழியால் இறைவனை அழைக்கலாமே என்று மக்களைச் சிந்திக்கத் தூண்டியிருக்க வேண்டும்.

சிவ என்ற சொல் தமிழில் சிவப்பு நிறத்தையும் ஸம்ஸ்கிருதத்தில் நலம் செய்பவர் என்ற பொருளையும் குறிப்பதாகும். இரு வகையிலும் அது இறைவனின் வெவ்வேறு பண்புகளைக் குறிப்பதாலும், இரு மொழியாளர்களுக்கும் உடன்பாடான சொல்லாக இருந்ததாலும் அது தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம். வேதத்தில் ஆளப்பட்ட சொல்லாகவும் அது அமைந்தது, அதற்குப் பெருமையையும் ஏற்றுக் கொள்ளப்படும் தன்மையையும் சேர்த்திருக்கும்.

“தமிழ்ச் சொல், வடசொல் எனுமிவ்விரண்டும் உணர்த்தும் அவனை உணரலுமாமே” என்று திருமூலர் கூறுவதன் பொருள் இதுவாகத்தான் இருக்க வேண்டும். (திருமந்திரம் 66 ஆகமச்சிறப்பு 10)

பெயரில்லாப் பெருமானைச் சுட்டும் எல்லாப் பெயர்களும் பண்புகளைக் குறிப்பிடும் அடைமொழிகளாகத் தான் பயன்படுத்தப் பட்டுள்ளன. அவ்வகையில் இது வரை பயன்படுத்தப் படாத சிவன் என்ற அடைமொழியும் சிவகதியையும் இவ்வுலக நல்வாழ்வையும் அருள வல்ல பெருமானின் நலம் செய்யும் தன்மையைக் குறிப்பிடுவதாகவே திருமூலர் பாடல்களிலும் தேவாரத்திலும் வந்துள்ளது.

ஐந்தெழுத்து

அம்மையாரின் பாடல்களில் சிவன் என்ற சொல் காணப்படாதது போல, அதை ஒட்டிப் பிறந்த நமசிவாய மந்திரமும் காணக் கிடைத்திலது. திருவிரட்டை மணிமாலையில் 10 மற்றும் 16 ஆவது பாடல்களில் வரும் ஐந்து என்ற சொல் நமசிவாய மந்திரத்தைக் குறிப்பதாகச் சிலர் பொருள் கொள்கின்றனர். கூர்ந்து நோக்கினால் உண்மையை உணரலாம்.

 

தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து

தலையா யினவுணர்ந்தோர் காண்பர் தலையாய

அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட

கண்டத்தான் செற்பொற் கழல்.       (தி-10)

 

புண்ணியங்கள்செய்தனவும்பொய்ந்நெறிக்கட்சாராமே

எண்ணியோ ரைந்தும் இசைந்தனவால் திண்ணிய

கைம்மாவின் ஈருரிவை மூவுருவும் போர்த்துகந்த

அம்மானுக் காட்பட்ட அன்பு.       (தி-16)

 

மேலான ஐந்தையும் சாதித்துப் பணிவுடன் மேலான தத்துவத்தை உணர்ந்தவர்கள் இறைவன் கழலைக் காண்பார்கள் என்பது முதல் பாடலின் பொருள். இறைவன் அருளால் நற்செயல்களும், தீநெறி சாராத ஐந்தும் தனக்கு வந்து சேர்ந்ததாக இரண்டாவது பாடலில் அம்மையார் கூறுகிறார்.

இரண்டு இடங்களிலும் ஐந்து என்பது நமசிவாய மந்திரத்தைக் குறிப்பதாகப் பொருள் படவில்லை. புத்தர் போதித்த பஞ்ச சீலம் என்னும் அறநெறிகளோ அல்லது வேறு ஏதேனும் ஐந்து நன்னெறிகளின் தொகுப்போ தான் குறிக்கப் படுவதாகத் தெரிகிறது.

திரு.வி.க. இது ஐந்தெழுத்தைத் தான் குறிப்பது என்று உறுதிபடக் கூறவில்லை. முதல் பாடலில் வரும் ஐந்து என்பது ஐந்தெழுத்தையும் குறிக்கலாம், கொல்லாமை, களவாடாமை, கள்ளாமை, வெஃகாமை, பொய்யாமை ஆகிய அறநெறிகளையும் குறிக்கலாம், பஞ்ச சுத்தி என்னும் சடங்கையும் குறிக்கலாம் என்கிறார். இரண்டாவது பாடலில் வரும் ஐந்து ஐம்புலன்களைக் குறிக்கும் என்று மட்டும் குறிப்பிடுகிறார்.

கண்ணுதல் கடவுளைக் குறிக்கும் சொற்களில் சிவன் என்ற பெயரும் சேர்த்துக் கொள்ளப்பட்டதன் விளைவாக நமசிவாய மந்திரம் பிரபலமாயிற்று என அறிகிறோம்.

**************

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காரைக்கால் அம்மையார்- ஒரு ஆய்வு Copyright © 2014 by jayend16 and சு.கோதண்டராமன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.