14
பெய்யெனச் சொன்னாய் நீயும் பழமழை பெய்ததங்கே
பொய்யென அழகைத் தள்ளிப் பேயுடல் வேண்டிப் பெற்றாய்
ஈயென ஈசன் நின்றான் உன் கையால் உணவு வேண்டி
தாயெனச் சிவனே போற்றும் அம்மையே வாழி வாழி
நடமிடும் நாதன் அமர்ந்த மலையில் நடத்தல் பாவம் என
உடல் மிக வருந்தித் தலையால் நடந்து உம்பரும் தொழ நின்றாய்
எந்தைக்குணவு நீ ஈந்த இடமோ இதனினும் புனிதமென
செந்தமிழ் விரகன் உன் பதி மிதியா வலமாச் சென்றாரே
பெற்ற தாய் இராமையினால் பெருந்தாழ்வு வந்ததென
உற்ற தாய் ஆயினைநீ உம்பர்கோன் சிவனுக்கு
அம்மையே என்றவனும் அழைத்து மகிழ்ந்திடவே
இம்மையே சென்றிட்டாய் இமயத்தை நாடியே
அம்மையே என அழுது அருள் மணிவாசகரும்
செம்மையே ஆன சிவபதமும் பெற்றார்
அம்மையே என்றழைத்தரனும் அமரும் நிலை தந்து
தம்மையே தந்திட்டார் தனயனாய் நின் மடியில்
ஆலமுண்ட சிவனார் கபாலம் கையிலேந்தி
ஞாலமெங்கும்பலியைத்தேடித்தேடித்திரிந்தார்
செம்மை மாறன் சோறும் தொண்டர் கறியும் தள்ளி
அம்மை ஊட்டும் கனியே அமுதமாக உண்டார்
-பாரதி அடிப்பொடி