"

7

 

எல்லா நாடுகளிலும் எல்லாக் காலங்களிலும் எல்லாச் சமயங்களிலும் பேய் என்னும் கருத்துரு உண்டு. ஆனால் இது இடத்துக்கு இடம் காலத்துக்குக் காலம் மாறுபடுகிறது.

ஆசை நிறைவேறாமல் அற்ப ஆயுளில் இறந்தவர்களும் தற்கொலை, விபத்து இவற்றால் இறந்தவர்களும் பேயாக மாறி உலவுகின்றனர் என்பதும், இப் பேய்கள் உருவம் இல்லாதவை என்பதும், இவை பெண்களையும் பலவீனமானவர்களையும் பிடித்துத் துன்புறுத்துகின்றன என்பதும் இன்றைய தமிழ்நாட்டு நம்பிக்கை. ஆனால் அம்மையார் கூறும் பேய்கள் வேறு வகையானவை. அவரது மூத்த திருப்பதிகம் பேய்களைப் பற்றிக் கூறும் விவரங்களைப் பார்ப்போம்.

இறந்தவர்கள் பேயாவதில்லை. மாறாக, பேய்கள் என்பவை மனிதர் போன்ற உருவமும் அழகற்ற தோற்றமும் உடைய தனி உயிரினம். வற்றிய கொங்கை, புடைத்த நரம்பு, ஆழமான கண், வெண் பல், ஒட்டிய வயிறு, சிவந்த தலை மயிர், இரு கோரைப் பற்கள், உயரமான புறங்கால், நீண்ட கணுக்கால் கொண்டவை பேய்கள். இவற்றில் சில வாயி்ல் தீயும், சில கண்ணில் தீயும் கொண்டவை. இவற்றில் கூளி என்ற ஒரு வகை உண்டு. இவை மற்றப் பேய்களிலிருந்து எவ்வாறு மாறுபட்டவை என்பது தெரியவில்லை.

இவை சுடுகாட்டில் வாழ்கின்றன. அங்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றன. அவற்றிற்குப் பெயரும் இடுகின்றன. மனிதர்களைப் போலவே தாய்ப் பாசம் உள்ளவை இவை. குழந்தைக்குத் தாய்ப்பாலும் நிணமும் ஊட்டிப் பேணி வளர்க்கின்றன. குழந்தையின் முகத்தில் உள்ள புழுதியைத் துடைக்கின்றன. அது தூங்கும்போது சிறிது நேரம் தாய்ப் பேய் வெளியில் செல்கிறது. விழித்து எழுந்த குழந்தை தாயைக் காணாது அழுதுவிட்டுப் பின் உறங்குகிறது. பிள்ளைப் பேய்களை இருட் காலத்தில் அன்புடன் தடவிக் கொடுக்கின்றன தாய்ப் பேய்கள். அவை குறும்பு செய்யாமல் இருப்பதற்காக அவற்றை அச்சுறுத்தி “கொள்” என்று இசை பாடுகின்றன.

 

விழுது நிணத்தை விழுங்கி யிட்டு

வெண்தலை மாலை விரவப் பூட்டிக்

கழுதுதன்பிள்ளையைக்காளியென்று

பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப்

புழதிதுடைத்துமுலைகொடுத்துப்

போயின தாயை வரவு காணா

தழுதுறங்கும்புறங்காட்டில்ஆடும்

அப்ப னிடம்திரு ஆலங் கா டே (பதிகம் 1-5)

 

குண்டை வயிற்றுக் குறிய

சிறிய நெடிய பிறங்கற்பேய்

இண்டு படர்ந்த இருள்சூழ்

மயானத் தெரிவாய் எயிற்றுப்பேய்

கொண்டுகுழவிதடவி

வெருட்டிக் கொள்ளென் றிசைபாட

மிண்டி மிளிர்ந்த சடைகள்

தாழ விமலன் ஆடுமே      (பதிகம்  2-10)

 

நம்முடைய கண்ணோட்டத்தில் தான் பேய்கள் அழகற்றவை. அவை தாம் அழகாக இருப்பதாகத் தான் கருதுகின்றன போலும். அவை மனிதப் பெண்களைப் போலவே தம்மை ஒப்பனை செய்து கொள்வதில் நாட்டம் கொண்டவை. கூந்தலைக் காய வைக்கிறது ஒரு பேய். மற்றொன்று கள்ளி மரத்தின் கிளைகளிடையே காலை நீட்டிக் கொண்டு ஒய்யாரமாகப் படுத்திருக்கிறது. எரிந்து அணைந்த கொள்ளிக் கட்டையை மசிய அரைத்து உண்டாக்கிய மையைக் கண்ணில் பளிச்சென்று தெரியும்படியாக தீட்டிக் கொள்கிறது அது.

 

……………………………….சுடலையுள்

ஒயும்உருவில்உலறு

கூந்தல் அலறு பகுவாய

பேய்கள்            (பதிகம்  2-8)

 

கள்ளிக்கவட்டிடைக்காலைநீட்டிக்

கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை

விள்ள எழுதி ……………………………

(பதிகம் 1-2)

 

அவற்றிற்கும் நம்மைப் போலவே கோபம், பயம், மகிழ்ச்சி முதலான உணர்ச்சிகள் உண்டு. மரத்தில் உட்கார்ந்திருக்கும் ஒரு பேய் திடீரென்று ஏதோ சத்தம் கேட்டதும் பயந்து குதிக்கிறது. அங்கு பிணஞ்சுடு தீச் சுட்டுவிடவே, கோபித்து புழுதியை அள்ளி தன்னைச் சுட்ட தீயை அவிக்கிறது என்பதையும் மேற்கண்ட பாடலின் மூலம் அறிகிறோம்.

பேய்களுக்கும் துன்பம், வறுமை எல்லாம் உண்டு. ஊரில் யாரும் இறக்காத நாளில் அவை, பாவம், பட்டினி் தான். கிடைத்த நாட்களிலும் அவை நரி, கழுகு முதலானவற்றுடன் போட்டி போட வேண்டி இருக்கிறது. இறுதிக் கடன் செய்து மனிதர் விட்டுப் போன சோற்றை நரி தின்னும்போது இதை முன்பே பார்க்கவில்லையே, பார்த்திருந்தால் நரிகளை வெருட்டித் தின்றிருக்கலாமே என்று கோபத்துடன் பேய்கள் கையைத் தட்டிக் கொண்டு வட்டமாகச் சென்று ஆடி, இசை கூட்டுகின்றன. துணங்கைக் கூத்தினை ஆடுகின்றன. வலிய பேய்கள் ஒன்றை ஒன்று அடித்து ஒரு சேரக் கூச்சலிடுகின்றன.

 

குண்டில்ஓமக்குழிச்சோற்றைவாங்கிக்

குறுநரி தின்ன அதனை முன்னே

கண்டிலோம்என்றுகனன்றுபேய்கள்

கையடித் தொ டிடு காட ரங்கா

மண்டலம் நின்றங் குளாளம் இட்டு,

வாதித்து,             (பதிகம் 1-4)

 

நொந்திக்கிடந்தசுடலை

தடவி நுகரும் புழுக்கின்றிச்

சிந்தித் திருந்தங் குறங்குஞ்

சிறுபேய் சிரமப் படுகாட்டின்       (பதிகம் 2-7)

 

ஒப்பினையில்லவன்பேய்கள்கூடி

ஒன்றினை ஒன்றடித் தொக்க லித்து

பப்பினை யிட்டுப் பகண்டை பாட      (பதிகம்   1-11)

 

பிணங்களை உண்டு களிக்கும் அவை உயிருள்ள மனிதர்களை ஒன்றும் செய்வதில்லை. உண்மையில் அவை மனிதர்களிடம் அஞ்சுகின்றன. ஒரு பிணத்தை உயிருள்ள மனிதன் என்று தவறாக நினைத்த ஒரு பேய் பயந்து போய் ஊரைக் கூட்டிய செய்தியை அம்மையார் நகைச்சுவையோடு விவரிப்பதைக் காண்கிறோம்.

 

செத்தபிணத்தைத்தெளியா

தொருபேய் சென்று விரல்சுட்டிக்

கத்திஉறுமிக்கனல்விட்

டெறிந்து கடக்கப் பாய்ந்துபோய்ப்

பத்தல்வயிற்றைப்பதைக்க

மோதிப் பலபேய் இரிந்தோடப்     (பதிகம்   2-4)

 

பேய்கள் பற்றி அம்மையார் கூறியவற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது மனித மாமிசம் தின்னும் வழக்கம் உடைய மனிதர்களைத் தான் அக்காலத்து மக்கள் பேய் எனக் கருதினார்கள் எனத் தோன்றுகிறது. அம்மையார் காலத்தில் உண்மையில் அத்தகைய மனிதர்கள் இருந்தார்களா? இருந்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது. காரணங்களை ஆராய்வோம்.

பரிணாம வளர்ச்சிப் படிகளில் கீழ்நிலையில் உள்ள மீன் போன்ற சில தவிர, ஏனைய உயிரினம் எதுவும் தன் இனத்தாரின் புலாலை உண்பதில்லை. கொடிய புலி கூட மற்றொரு புலியைத் தின்பதில்லை. வளர்ச்சி நிலையில் மேல் படியில் உள்ள மனிதனுக்கு தன் இனத்தாரின் மாமிசம் இயல்பான உணவு அல்ல. வக்கிர புத்தி உடைய சிலர் எப்பொழுதேனும் அவ்வாறு உண்டிருக்கலாம். மற்ற மனிதர்களுக்கு இது அதிர்ச்சியும் ஆச்சரியமும் பயமும் தரும் செய்தியாக இருக்கும். எனவே அவர்கள் இதைப் பற்றித் திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருப்பர். செவி வழிச் செய்தியாக இது பரவும்போது சொல்பவரின் கற்பனையும் அதில் கலந்து பரவும். அதனால் இது பற்றிய கதைகள் இடத்துக்கு இடம் மாறுபடுகின்றன.

டேனியல் டேபோ எழுதிய ராபின்சன் குரூசோ என்னும் புகழ் பெற்ற கதையில் கன்னிபல் எனப்படும் காட்டுமிராண்டி ஆண்கள் தங்களில் ஒருவனை அவ்வப்பொழுது கொன்று தின்பதாகக் கூறுகிறார். இது கதை எழுதியவரின் நாட்டில் அக்காலத்தில் நிலவிய நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது எனக் கொள்ளலாம்.

பிணம் தின்பதால் அதீதமான வலிமை பெற்ற மந்திரவாதிகள் பற்றிய கதைகள் பல நாடுகளில் காணப்படுகின்றன. அவர்கள் பெண்களாகவே இருக்கக் காண்கிறோம்.

சங்கத் தமிழ் இலக்கியங்களில் பேய் மகளிர் பிணம் தின்பதாகப் பல குறிப்புகள் உள்ளன. இங்கு ஆண் பேய்கள் கிடையாது. இந்தப் பேய் மகளிர் அஞ்சுவதற்குரியவராக வர்ணிக்கப்பட்டாலும் அவர்கள் ஊருக்குள் புகுந்து மனிதரைத் தூக்கிச் சென்று கொன்று தின்பதாகச் சொல்லப்படவில்லை. சுடுகாட்டில் கொண்டு வைக்கப்படும் பிணங்களை மட்டுமே அவர்கள் தின்பராம். துணங்கை என்னும் கூத்தினை ஆடி மகிழ்வராம்.

அம்மையார் தான் முதன் முதலில் பேய்களின் செயல்களை எல்லாம் விவரமாக வர்ணித்தவர். பிற்காலத்தில் பேய்களைக் கதா பாத்திரங்களாக்கிப் புனையப்பட்ட பரணி என்னும் சிற்றிலக்கிய வகைக்கு வழிகாட்டியவர் அம்மையாரே.

அம்மையார் கூறும் பேய்களும் பெண்களே. ஒரு ஆண் பேய் கூடக் குறிக்கப் படவில்லை. குழந்தைப் பேய் என்னும் ஒரு புதிய வகையை உருவாக்கிய அம்மையார், சங்க காலத்திலிருந்து தொடர்ந்து வந்த பிணம் தின்னும் பேய் மகளிர் என்னும் கருத்துருவுக்குத் தன் கற்பனை மூலம் தாய்ப் பாசம், பயம் ஆகிய உணர்ச்சிகளைப் படைத்து விரிவுபடுத்தினார் என்பது பெறப்படுகிறது. அம்மையாரைப் பின்பற்றியே பிற்காலத்தில் வந்த ஜயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியில் குழந்தைப் பேய்களை அறிமுகப்படுத்துகிறார்.

 

119

கொல்வா யோரி முழவாகக் கொள்ளி வாய்ப்பேய் குழவிக்கு

நல்வாய்ச் செய்ய தசைதேடி நரிவாய்த் தசையைப் பறிக்குமால்.

 

அம்மையார் கொண்ட பேய்வடிவம் சுடலைப் பேய்களுக்கு உண்டான அருவருக்கத்தக்க தோற்றமும் செயல்களும் உள்ளதல்ல. மாறாக, வனப்பு நின்ற தசைப் பொதி கழிந்து, எற்பு உடம்பே ஆன, எல்லோரும் வணங்கும் பெருமை சேர் வடிவமாக இருந்தது. இறைவனின் அருகாமையை விரும்புவதில் மட்டும் தான் இவர் பேயுடன் ஒன்றுகிறார். ஈசன் பேய்களுடன் நடனமாடுகிறார் என 24 முறை கூறும் இவர் தன்னைப் பேய் என 4 முறை கூறிக் கொள்கிறார்.

அவர் தம்மைப் பேய் எனச் சொல்லிக் கொள்ள வேண்டிய நிலை எப்படி ஏற்பட்டது?

பரமதத்தன் சமணச் செல்வாக்குக்கு உட்பட்ட நாத்திகனாக இருந்திருக்கக் கூடும். கடற் பயணத்தில் இடையூறு வந்து விட்டால் என்ன செய்வது என்று அஞ்சி, புறப்படும்போது கடல் தெய்வத்தை வணங்குகிறான். அவன் வேறு வழிபாடு எதுவும் செய்ததாகச் சேக்கிழார் குறிப்பிடவில்லை. அச்சமே கீழ்களது ஆசாரம் என்றபடி இவனுக்கு எதெது அச்சம் தருமோ அதை மட்டுமே வணங்கும் வழக்கம் உடையவன் என அறிகிறோம். அம்மையார் செய்த அதிசயச் செயலைப் பார்த்த பின் இவனுக்கு அவர் பால் அச்சம் ஏற்படுகிறது. இவர் வேறு ஒரு அணங்கு என அவன் கருதியதாகச் சேக்கிழார் குறிப்பிடுகிறார். அணங்கு என்ற சொல்லுக்குப் பெண் என்றும், தீண்டி வருத்தும் தெய்வம் என்றும் பொருள் உண்டு. வேறு ஒரு அணங்கு என்றதால், இரண்டாவது பொருளில், அதாவது மந்திர சக்தி உள்ள பேய் மகள் என்ற கருத்தில் தான் பயன்படுத்தி இருக்கிறான் என்பது தெரிகிறது. பேய் மகள் பற்றிய கதைகள் பன்னெடுங்காலமாகச் சமுதாயத்தில் உலவி வந்த போதிலும் எவரும் நேரில் பார்த்ததில்லை. இப்பொழுது இவன் நேரில் பார்த்து விட்டான். அதனால் தான் அவன் உடனே அவரை விட்டு நீங்கும் கருத்து உடையவனாக அவருடன் தொடர்பு இல்லாமல் சிறிது காலம் வாழ்ந்தான். விட்டு நீங்கும் எண்ணம் அவனுக்கு உடனே தோன்றி விட்ட போதிலும் மற்றவர்க்குச் சொல்லாமல் தருணத்தை எதிர்நோக்கி இருந்தான்.

இவன் கடவுள் ஒருவர் உண்டு என்றும் அவர் எல்லாம் வல்லவர் என்றும் நம்பிக்கை கொண்டவனாக இருந்திருந்தால் அம்மையார் மூலம் இறைவன் இயற்றிய அந்த அதிசயச் செயல் பற்றி மற்றவரிடம் வியந்து கூறி இருப்பான்.

பாண்டி நாட்டில் அவனைத் தேடி உறவினர் புடை சூழ அவர் வந்த பின், அவன் ‘இவர் தாம் மானுடம் அல்லர்’ என்கிறான். அவரிடம் அச்சம் கொண்டு, அவரால் துன்பம் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் அவரது பெயரைத் தன் மகளுக்கு வைக்கிறான், அவர் காலடியில் வீழ்ந்து வணங்குகிறான். (அணங்கினால் துன்பம் வராமல் இருக்க அணங்கின் படத்தை வீட்டு வாசலில் எழுதி வைக்கும் வழக்கம் இருந்ததாகச் சங்க இலக்கியங்களில் காணப்படும் செய்தியை ஒப்பிடுக.) அப்பொழுது தான் அம்மையாருக்கும் உறவினர்களுக்கும் பரமதத்தன் விட்டு நீங்கியதன் உண்மையான காரணம் புலப்படுகிறது. எனவே புனிதவதியாரை முதன் முதலாகப் பேய் எனக் கருதியது அவரது கணவன் தான் என்பது தெரிகிறது.

அதுவரையில் அம்மையாருக்கு வாழ்வைத் துறக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை. கணவனோடு சேர்ந்து இல்லறம் நடத்த விரும்பித் தான் அவர் அவனை நாடிப் பாண்டி நாட்டுக்குச் செல்கிறார். இப்பொழுது அவன் கருத்துத் தெரிந்தவுடன் உறவினர்களும் கணவன் பேச்சைக் கேட்டு ‘இது என் கொல்’ என்று வியந்தார்களே அன்றி இவரை வாழ்விக்க முயற்சி செய்யவில்லை என்ற நிலையில் பேயாகவே ஆகிவிடுவோமே என்று விரும்புகிறார் அவர். தொலைவில் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார்  என்று சேக்கிழார் கூறுவதிலிருந்து அவருடைய உறவினர்களும் அம்மையாரின் பெருமையையும், அவருக்குச் சிவபெருமான் செய்துள்ள அருளையும் உள்ளவாறு உணரவில்லை என்பதை அறிகிறோம். தனித்து விடப்பட்ட அவர் செல்லும் வழியில் அவரைக் கண்டவர்களும் வியப்புற்று அஞ்சி அகன்று ஓட, ‘அண்ட நாயகனார் என்னை அறிந்தவராக இருக்கும்போது, வாய்மை அறியாத மற்ற மக்களுக்கு யான் எவ்வுருவானால் என்ன’ என்று கருதுகிறார் அவர். அவரைக் கண்டு அஞ்சி ஓடாதவர்களும் இருந்தனர். அத்தகையோர் மூலமாகத் தான் அவரது பாடல்கள் மற்றவரிடையே பரவின.

தன்னை அவர்கள் பேய்மகள் எனக் கருதுகிறார்கள் என்பதை இவர் ஒரு அவமதிப்பாகக் கருதாமல் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டார். தன்னைச் சங்கரனின் பேய்க் கணங்களில் ஒன்றாகக் கருதிக் கொண்டார். தன் அந்தாதி, இரு பதிகங்கள் ஆகிய மூன்றின் கடைக்காப்பிலும் புனிதவதி என்ற தன் இயற் பெயரைக் கூறாமல் காரைக்கால் பேய் என்றே கூறிக் கொள்கிறார்.

அப்பரும் சம்பந்தரும் அம்மையாரைப் பற்றி எந்தக் குறிப்பும் தரவில்லை. தமக்கு முன்னும் தங்கள் காலத்திலும் வாழ்ந்த பல சிவனடியார்களைக் குறிப்பிட்ட அவர்கள் காரைக்காலுக்கு மிக அருகில் உள்ள திருத்தெளிச்சேரி, திருநள்ளாறு ஆகிய தலங்களில் பாடப்பட்ட பாடல்களில் கூட அம்மையாரைக் குறிப்பிடவில்லை. அம்மையார் முத்தியடைந்த இடம் என்பதால், திருவாலங்காட்டில் சம்பந்தர் நடக்கவே தயங்கினாராம். அந்த ஊரில் பதிகம் பாடுகையில் பழையனூர் நீலியின் கதையைச் சொல்கிறாரே அன்றி அம்மையாரைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை. இது ஆய்வுக்குரிய செய்தியாகும். அக்காலம் வரை பெரும்பாலான மக்கள் அம்மையாரின் சிறப்பை உணராமல் அவரைப் பேய் மகள் என்று கருதி ஒதுக்கி வைத்திருந்தனர் என்று தான் கருத வேண்டி உள்ளது.

சுந்தரமூர்த்தி நாயனார் தான் முதன் முதலாக அவரைச் சிவனடியாராக ஏற்றுக் கொண்டவர். அவரும் தன் திருத்தொண்டத் தொகையில் இவரைப் பேயார் என்றே குறிப்பிடுகிறார். காலம் செல்லச் செல்ல, அம்மையாரின் சிறப்புக்குப் பரமதத்தன் கொடுத்த இந்த இழிபெயர் தகாது என்ற கருத்து வளர்ந்தது என்பதைப் பிற்கால நூல்களில் இவர் பேயார் என்று கூறப்படாததிலிருந்து அறிகிறோம். நம்பியாண்டார் நம்பி தன் திருத்தொண்டர் திருவந்தாதியில் இவரைக் காரைக்கால் மேய குலதனம் என்று கூறுகிறார். சேக்கிழார், அம்மையார் என்று மட்டும் சொல்கிறார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காரைக்கால் அம்மையார்- ஒரு ஆய்வு Copyright © 2014 by jayend16 and சு.கோதண்டராமன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.