13
12.கடற்கரைச் சாலை – பயணக்குறிப்புகள் 2
சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்வதற்குப் பயன்படும் கடற்கரைச் சாலையைப் பற்றித் தெரிந்த அளவுக்குச் செங்கல்பட்டிலிருந்து இராமநாதபுரம் செல்ல பயன்படும் கடற்கரைச் சாலையைப் பற்றி எனக்கு தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் இருந்தது. அந்தக் குறை இந்தப் பயணத்தின் வாயிலாக நீங்கியது. கீழக்கரை, சாயல்குடி, ஏர்வாடி, போன்ற ஊர்கள் பக்கம் பயணித்தது இதுவே முதல் முறை.
இதில் ஒரு மகத்தான் ஆச்சரியம் என்னவென்றால் இந்தச் சாலையில் எந்த இடத்திலும் சுங்கவரி தொந்தரவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு மேலாக மூச்சு முட்டும் போக்குவரத்து நெரிசலும் இல்லை. நகரமயமாக்கலின் விளைவாக இரண்டு பக்கமும் உருவாகிக் கொண்டிருக்கும் வளர்ச்சி என்ற பெயரில் உள்ள திடீர் நகர்ப்புற வீக்கங்களும் இல்லை. சுகமான பயணம் என்று சொல்வதை இந்தச் சாலையில் பயணித்த போது உணர்ந்து கொண்டேன்.
கடற்கரை ஓரமாக நம் வசதிக்காக உருவாக்கியுள்ள இந்தச் சாலைகளைப் பற்றிப் பேசும் போது நாம் சிலவற்றைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நமக்கு ஓரளவுக்கேனும் தெளிவாகத் தெரிந்த இரண்டாயிரம் ஆண்டுக் காலத் தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளில் மாறாத ஒரே இனம் மீனவ இனம். பரதவர் என்றழைக்கப்படும் இந்த மக்களின் வாழ்க்கையும், பண்பாடு கலாச்சாரமும் முழுக்க முழுக்கக் கடலில் தொடங்கிக் கடற்கரையோடு முடிந்து போய் விடுகின்றது. காலம் காலமாக அதைத்தாண்டுவதே இல்லை.
மீனவனாகப் பிறந்து கடைசி வரையிலும் மீனவனாகவே வாழ்ந்து முடிவதோடு அவனது தலைமுறையும் இதே தொழிலிலே நுழைந்து விடுவதால் வெளியுலக வாழ்க்கைக்கும் அவர்களும் பல காத தூரம். ஆனால் காலமாற்றத்தை உள்வாங்கிக் கொள்ளாமல், மாறிப்போன நவீன வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளாமல் தங்களின் பராம்பரிய பழக்கவழக்கங்கள், தொழில் முறைகள் என்று வளர்ந்த மீனவர்களின் வாழ்க்கை கடந்த முப்பது ஆண்டுகளில் மிகப் பெரிய சிக்கலில் மாட்டி விழி பிதுங்கிப் போய் உள்ளனர்.
ஒரு பக்கம் “எல்லை தாண்டாதே” என்கிறார்கள். மறுபுறம் “இந்தப் பகுதியில் சாலைகள் வருகின்றது காலி செய்து கொடுத்து விடு” என்று துரத்தி அடிக்கப்படுகின்றார்கள். இரண்டு பக்கமும் சிக்கி எலிப்பொறிக்குள் மாட்டியவர்கள் போல அன்றாட வாழ்க்கையைக் கூட வாழ முடியாத அளவுக்கு உள்நாட்டுக்குள் அகதி போலவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
மீனவர்களின் கையில் இருந்த கடல் சார்ந்த தொழில்கள் இன்றைய சூழ்நிலையில் காசிருப்பவர்களின் கைக்கு மாறிக் கொண்டேயிருக்கின்றது. இன்று மீன்பிடி தொழிலில் என்பது சர்வதேச நிறுவனங்களின் கைப்பிடிக்குள் அடக்கமான வலை போல மாறியுள்ள காரணத்தால் ஒவ்வொரு மீனவ குடும்பமும் வறுமை என்ற வலைக்குள் சிக்கிக் கொண்டு தவிக்கின்றனர். இந்தச் சாலையில் பயணிக்கும் போது இது சம்மந்தபட்ட பல மாறுதல்களை உள்வாங்கிக் கொள்ள முடிந்தது.
சென்னை முதல் கன்னியாகுமரி வரைக்கும் உள்ள மீனவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அவர்களின் பலம் நமக்கு ஆச்சரியத்தை அளிக்கும். ஆனால் இந்த மீனவர்களிடம் உள்ள பிரிவினைகளை யோசித்துப் பார்த்தால் எப்படி இவர்களுக்கு அவஸ்த்தைகள் உருவாகின்றது என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
இதன் காரணமாகவே இன்று வரையிலும் இந்த இன மக்களில் இருந்து ஒரு தலைமைப்பண்பு உள்ள எவரும் உருவாகவே இல்லை. இதுவே ஒவ்வொரு சமயத்திலும் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைபிடித்துக் கொண்டு வரும் தமிழ்நாட்டின் இரண்டு கழகக் கட்சிகளுக்கும் மத்தி மீன் சுவையைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. அறிக்கை வாயிலாக லாவணிக் கச்சேரி நடத்த வசதியாகவும் உள்ளது.
பாம்பன் பாலம்
பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியிலிருந்து இராமேஸ்வரத்திற்குச் சுற்றுலா என்ற பெயரில் அழைத்துக் கொண்டு வந்தனர். அப்போது (1984) தற்போதுள்ள பாம்பன் பாலத்தின் தொடக்க வேலைகள் நடந்து கொண்டிருந்தது. கடலுக்குள் படிப்படியாக ஒவ்வொரு தூண்களுக்குக் கீழே உள்ள (பீம்களும்) அமைப்புகளின் வேலைகளும் நடந்து கொண்டிருந்தது. இயற்பியல் ஆசிரியர் நாராயணன் படகில் வைத்து அழைத்துக் கொண்டு அந்தத் தூண்கள் கட்டப்பட்டுக் கொண்டிருந்த பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
அந்தப் பீம் பகுதியில் ஏறி அது எப்படிக் கட்டப்படுகின்றது என்பதை விளக்கினார். இயற்பியல் விதி, கடல் அரிப்பு, தாங்கும் திறன், எதிர்காலப் பயன்பாடுகள் என்று என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார்.
ஆனால் எனக்கோ எங்கே மீன் சுட்டு விற்கின்றார்கள்? என்பதே ஒரே தேடுதலாக இருந்தது. பக்கதில் இருப்பவனிடம் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டே இருந்தேன். அவன் ஓரளவுக்கு மேல் தாங்க முடியாமல் “சார் இவனுக்கு மீன் பொறிக்கும் இடம் தெரியனுமாம்? அப்படியே ப்ரெஷ்ஷா கிடைக்குமாம். அதை முதலில் போய்ப் பார்த்து விடலாம்” என்று சொல்ல இருவருக்கும் அடுத்தடுத்து பளார் பளார் என்று அறை விழுந்தது.
அப்படி அடிவாங்கிய ஏதோவொரு பீம் பகுதியுடன் இணைக்கப்பட்ட அந்தப் பாலத்தின் மேல் 30 வருடங்களுக்குப் பிறகு இப்போது நின்று கொண்டிருக்கின்றேன்.