"

23

அரசியல் – ஆயுதம் ஏந்தாத யுத்தம்

22. காசு, பணம், மணி, துட்டு

ஐந்து விதமான நிலங்களில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பது பழைய வரலாற்றுச் செய்தி. ஆனால் தற்போது தமிழர்கள் எங்கே வாழ்ந்தாலும் மூன்று வித மனோநிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

எந்த மதம்? எந்தச் சாதி? எந்தக் கட்சி?

இந்த மூன்றில் ஏதோவொன்று தினந்தோறும் தாக்கிக் கொண்டேதானிருக்கும். மத வெறி மனிதத்தைக் கொன்றது. ஆனால் சாதி வெறியே சகலத்தையும் கொன்று விட்டது. இந்த இரண்டையும் இன்று வரையிலும் அழியாமல் காத்துக் கொண்டிருப்பது கட்சியே.

இது குறித்து நான் எழுதும் போது உருவாகும் உணர்ச்சிகளை விட ஒவ்வொரு இடத்திலும் நான் படிக்கும் கட்டுரைகளை அதற்கு வரும் விமர்சனங்கள் தான் ஆச்சரியமாகப் பயமுறுத்துவதாக உள்ளது.

இவர்கள் படித்தவர்கள், எல்லாவற்றையும் அறிந்தவர்கள் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது.

நடிக்கின்றார்களா? அல்லது நயவஞ்சகத்தனம் என்பதை இயல்பான குணமாகவே மாற்றிக் கொண்டு விட்டார்களா? என்று யோசிக்கத் தோன்றுகின்றது.

விலங்குகளைப் பலிகொடுத்தது மாறி தற்போது மனிதர்களைப் பலிகொடுக்கும் அளவிற்கு நாம் வளர்ந்துள்ளோம். திரைப்படங்களில் வெட்டப்படும் தலையும், பீச்சியெடிக்கும் ரத்தத் துளிகளும் அகன்ற திரை முழுக்கப் பரவும் போது மயங்கி விழுந்தவர்கள் அந்தக்காலம். ஆனால் இப்போது சரியா போட்டான்டா……… என்று கைதட்டி ஆராவாரம் செய்ய அடுத்து ஐந்து படங்களுக்கும் அறுவாளே கதாநாயகனாக வருகின்றது.

கடந்த ஐந்தாண்டுகளில் வந்த வெற்றி பெற்ற படங்களை எடுத்துக் கொண்டால் ஒவ்வொன்றிலும் ஒரு சாதியின் பெருமை பேசப்பட்டு இறுதியில் அருவாள் பேசியிருக்கும்.

சங்கை அறுத்துருவேன் என்று வசனமாகப் பேசியது மாறி இன்று மனித குரல்வளையை நறுக்குவது தான் வெற்றிக்கு அச்சாரமாக இருப்பதால் அம்மாக்கள் கூடக் காய்கறி போலச் சங்கை அறுத்து மகனை காப்பாற்றுகின்றார்கள்.

மக்கள் ரசிக்கின்றார்கள் என்பதை விட இந்த ரசனையை ஊடகங்கள் வளர்த்தது. இயக்குநர்கள் நாட்டில் நடப்பதைதான் எடுக்கின்றோம் என்று இந்தக் கலையை வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இது போன்ற செய்திகளும், படங்களும் வெற்றியடைந்த காரணத்தால் அதன் நீட்சியில் இன்று வலைபதிவுகள், முகநூல் எங்கும் ரத்தக்கவுச்சியே பிரதானமாக உள்ளது. சாதிப் பிரச்சனை அமுங்கும் போது மதப்பிரச்சனை எழுந்து விடுகின்றது.

இரண்டுக்கும் பின்னால் எப்போதும் இருப்பதும் கட்சியே.

என்ன நடந்தது? ஏன் நடந்தது? என்று யோசித்து முடிப்பதற்குள் அப்பாவியின் உயிர் அய்யோ…. என்ற கதறலுடன் காற்றில் கரைந்து போனாலும் அடுத்தவரும் சாதிக்காக மதத்திற்காகச் சாகத் தயாராகவே இருக்கின்றார் என்பது தான் இன்றைய சமூகம் தரும் ஆச்சரிய செய்தி. .

இன்று எவருடன் பேசினாலும் மேலே சொன்ன மூன்றுக்குள் நின்றே பேச வேண்டியுள்ளது. பொதுவாகப் பேசினாலும் சந்தேகப் பார்வையை வைத்துக் கொண்டு தான் பேசுகின்றார்கள். நம் சாதியை உறுதிப்படுத்திக் கொண்டு விடுகின்றார்கள். விமர்சனப் பார்வையாகப் பேச நல்லா நடிக்கிறானப்பா? என்றொரு அம்போடு சாதி வெறி பிடித்தவன் என்ற வார்த்தைகளும் தொடர்ந்து வந்து தாக்குகின்றது.

என்ன இருந்தாலும் அவன் மதம் அப்படித் தான் பேச வைக்கும் என்றொரு நக்கலும் விடாமல் தாக்க தப்பித்தோம் பிழைத்தோம் என்றே ஓட வேண்டியுள்ளது.

விஷத்தை உள்ளே வைத்துக் கொண்டு கக்குவதில் சூரனப்பா என்று சொல்ல எந்தப் பக்கம் நகர்வது என்று தெரியாமலேயே ஒவ்வொரு நாளும் கழிகின்றது.

நீங்கள் எங்களுக்கு ஆதரவாக இல்லாவிட்டால் நீங்கள் எதிரியின் பக்கம் இருப்பதாக அர்த்தம்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஈராக் போரின் போது முழங்கினாரே அதைப்போலத்தான் நாம் ஏதோவொரு பக்கம் நின்றே ஆக வேண்டிய சூழ்நிலையை இங்கே ஒவ்வொருவரும் உருவாக்கிக் கொண்டே இருக்கின்றார்கள்.

மதங்களைத் தாண்டி வந்து விட்டேன். சாதிப் பார்வையை விட்டொழித்து விட்டேன். கட்சி அரசியலை விடக் கொள்கை அரசியலே இனி தேவை என்று சொல்லும் போது திட்டுவதும் வசதிக்கு தகுந்தபடி வார்த்தைகளைக் கொண்டு சிலம்பாட்டம் நடத்துவதையும் சமீப காலமாக அதிகம் பார்க்கின்றேன்.

சாதி, மதம் இது இரண்டையும் தவிர்த்து சமூக அவலத்தைச் சுட்டிக்காட்ட ஆண்ட ஆண்டுக் கொண்டிருப்பவர்களைப் பற்றிப் பேசத் தொடங்கினால் தனி மனித தாக்குதல் என அத்தனையும் அணிவகுத்து வந்து விடுகின்றது. இங்கு இந்த மூன்றுக்கும் தனித்தனியே ஆதரவாளர்கள்.

ஆனால் சாதி, மத ஆதரவாளர்கள் கடைசியில் ஏதோவொரு கட்சிக்குள் அடைக்கலமாகி இருப்பதைக் கவனமாகப் பார்த்தால் தெரியும்.

கட்சி வளர்க்க மதம் சாதி என்ற உரம் தேவை என்பதைத் தலைவர்கள் உணர்ந்திருப்பதை விடத் தொண்டர்களும் அப்படி இருப்பதைத்தான் விரும்புகின்றார்கள்.

ஏனிந்த மாற்றம்?

19 ஆம் நூற்றாண்டில் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியில் உருவானவன் தான் மனிதன் என்று டார்வின் சொன்னதற்குப்பிறகு இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்து வந்துள்ளோம்.

இப்போது மாற்றங்கள் என்பது வருடத்திற்கொருமுறை என்பது மாறி மாதம் ஒரு முறை மாற்றம் என்கிற நிலைமைக்கு உயர்ந்துள்ளோம். மொத்த சமூகத்தையும் புரட்டிப் போட்டு விட்டு சென்று கொண்டேயிருகின்றது. இதுவும் கடந்து நாள் கணக்கு மாற்றங்கள் என வரத் தொடங்கியுள்ளது.

மாறிப்போன உலகில் எல்லாமே பழசாகிப் போய்விடத் தமிழர்கள் மனதில் உள்ள இருட்டு மட்டும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேயிருக்கின்றது. விடாது துரத்தும் கருப்பு என்பது சமீப காலமாகப் பூதாகாரமாக மாறிக் கொண்டே வருகின்றது.

இருட்டுக்குள் வேண்டுமானாலும் இருப்பேனே தவிர என் மதம் என் சாதி என் கட்சியை விட மாட்டேன் என்பவர்களை எப்படி அழைப்பீர்கள்?

எந்த விமர்சனத்தையும் இங்கே எழுப்பக்கூடாது.?

எழுதத் தொடங்கினால் எதிர்ப்புகள் உருவாகின்றதை விட எழுதுபவன் அடுத்து எழுதாதபடி செய்யக்கூடிய அத்தனை விசயங்களையும் ஆதரவாளர்கள் செய்யத் தயாராக இருப்பதால் பயம் மனதில் இயல்பாக உருவாகிவிடுகின்றது. நமக்கு எதுக்கு வம்பு? என்ற ஆதங்கம் தற்போதும் உனக்கேன் இந்த வேண்டாத வேலை என்ற அறிவுரையாக மாறியுள்ளது

பொதுவாக யோசித்துப் பார்த்தால் இந்த மதத்தில் பிறந்தேன் என்பதையும் இந்தச் சாதியில் தான் வளர்ந்தேன் என்பதையும் நாம் தீர்மானிக்க முடியாது. இயல்பிலேயே உருவான ஒன்று. ஆனால் இந்தக் கட்சியில் இருக்கின்றேன் என்பது நாம் ஏதோவொரு காரணத்தால் தீர்மானிக்கக் கூடியதாகவே உள்ளது.

கட்சித் தலைவரை பிடிக்கலாம். பல சமயம் அவர் சொன்ன கொள்கைகளைப் பிடித்திருக்கலாம். ஆனால் கட்சியின் தலைவரும், கொள்கைகளும் கடைசி வரைக்கும் இருப்பதில்லை.

மாற்றத்தின்படியே மாறிக்கொண்டே தான் வருகின்றது.

கட்சி வளர்கிறதோ இல்லையோ அவரும் அவர் குடும்பமும் கால மாற்றத்தில் நன்றாகவே வளர்ந்துவிடுகின்றார்கள். பணம், பதவி, அதிகாரம், அந்தஸ்து, செல்வாக்கு என அனைத்தும் அவருக்குக் கிடைத்து விட அவர் குடும்பத்திற்கு இயல்பாகவே மாறிவிடுகின்றது.

சொந்த வாழ்க்கையைப் பலிகொடுத்து தலைவரை நம்பிக் கொண்டே வாழும் தொண்டர்களைப் பார்க்கும் போது தான் இவன் நடிக்கின்றானா? இல்லை இவன் மனநோயின் தாக்கத்தில் இருக்கின்றானா? என்று யோசிக்கத் தோன்றுகின்றது.

சாதாரணத் தொண்டனுக்குக் கட்சியின் கட்டமைப்பு என்பது எப்படி இருக்கும் என்று தெரியுமா?

கட்சி உருவாக்கும் கொள்கைகள் ஆட்சியில் இருக்கும் போது எத்தனை சமரசங்களைத் தாண்டி வர வேண்டும் என்பதாவது புரியுமா?

தற்போது கட்சி என்றால் குடும்பம் என்று அர்த்தம்.

அதுவொரு திட்டமிட்ட பரிபூரண உணவு. எந்த இடத்தில் எவரவர் இருக்க வேண்டுமோ ஒவ்வொரு இடத்திலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கமும் இருந்து கொண்டேயிருக்கும். கட்சி அதிகாரத்தில் இருக்கும் போது அதன் செல்வாக்கு அதிகமாகவும் இல்லாத போதும் குறைவாகவும் இருக்கும். ஆட்சி மாறினாலும் தமிழ்நாட்டில் பல சமயம் காட்சிகள் மாறாமல் இருப்பதற்கு இதுவே முக்கியக் காரணம்.

தலைவனின் குடும்பத்தினர் சுவைத்து எச்சமும் மிச்சமும் இருப்பது அடுத்தக் கட்டத்திற்கு நகர்கின்றது. அடுத்தக் கட்டத்தில் உறவுக்கூட்டம், உறவுக்கூட்டத்தின் தொடர்பு கூட்டங்கள், இதனைச் சார்ந்துள்ள அதிகாரவர்க்க கூட்டங்கள் என அனைத்தையும் தாண்டி வந்த பிறகே கட்சியில் உள்ள இரண்டாம் கட்ட தலைகளுக்குக் கொஞ்சம் கிடைக்கின்றது.

மூன்றாம் கட்டத்திற்கு வருவதற்குள் அரசு நிதிக்கு பேதியாகி விடத் திறக்கும் கல்வெட்டுக்கள் மட்டுமே இங்கே சாட்சியாக நிற்கின்றது. போட்ட சாலைகள் ஒரே மழையில் மல்லாந்து நிற்பதும் இதுவே காரணமாகும்.

ஆனால் இங்கே மற்றொரு வினோத முரண்பாடுகளைப் பார்க்க முடியும்.

நீ அந்தக் கட்சிகாரன் விசேடத்தில் கலந்து கொண்டால் உன் பதவி பறிபோய்விடும் என்ற அச்சத்தின் காரணமாகப் பெத்த ஆத்தாளுடன் வருடக்கணக்கில் பேசாத மகனும் உண்டு. நீங்கள் இருவரும் சம்மந்தி என்றாலும் வெவ்வேறு கட்சியென்பதை மனதில் வைத்து செயல்படு என்ற அறிவுரையினால் கட்டிக் கொடுத்த மகளை விடப் பதவி தரும் கட்சியே இங்கே பலருக்கும் தேவையாக உள்ளது.

ஆனாலும் மதம், சாதி, கட்சி என்ற மூன்றையும் அழித்து விளையாடுபவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தொழில் அதிபர்களாகவே இருக்கின்றார்கள். அவர்களுக்குப் பணம் என்பதைத் தவிர வேறு எந்த வேறுபாடுகளும் முக்கியமில்லை.

இவர்களுக்கு ஒரு பெரிய அங்கீகாரத்தை ஒவ்வொரு கட்சியும் கொடுத்தே ஆக வேண்டியுள்ளது. .

காரணம் தொண்டர்கள் கட்சிக்கு உழைக்கப் பிறந்தவர்கள். கட்சித்தலைவர்கள் தொழில் அதிபர்களிடம் அண்டிப் பிழைக்க வேண்டியவர்கள்.

அம்பானி காங்கிரஸ்க்கு கொடுப்பதைப் போலப் பாரதிய ஜனதா கட்சிக்கும் தான் நன்கொடை கொடுக்கின்றார். மல்லையா ஜெயலலிதாவின் ஆதரவாளர் என்று எல்லாருக்கும் தெரியும்? ஆனால் கலைஞர் அவர் வங்கிக்குக் கட்டாத பணம் குறித்துப் பேசி இருக்கின்றாரா?

தொழில் அதிபர்கள் என்பவர்கள் நாட்டின் தொழில் வளர்ச்சியைப் பெருக்குபவர்கள் மட்டுமல்ல. இரண்டு வெவ்வேறு கோடுகளில் பயணிக்கும் கட்சி அரசியலை தங்கள் கவட்டிக்குள் வைத்திருப்பவர்கள்.

அதனால் என்ன?

பணத்தாளில் கப்பெடுத்த வாடை வருகின்றது என்பதற்காக அதை வெறுப்பவர்கள் யாராவது இருக்கின்றார்களா என்ன?

பணம் வந்தால் பத்தும் பறந்து போய்விடும் என்பது பழமொழி

பணம் இருந்தால் எதையும் மாற்றலாம் என்பதே இன்றைய சமூகமொழி.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காரைக்குடி உணவகம் Copyright © 2015 by Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.