25
கடந்த சில மாதங்களில் பல முறை ஊர்ப்பக்கம் சென்று வந்த போது இந்த வருட மாறுதல்களை உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. அதில் சிலவற்றை இங்கே எழுதி வைத்து விடுகின்றேன்.
தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்து என்பது முற்றிலும் சீர்குலைந்து போயுள்ளது. பேரூந்து நிலையத்திலிருந்து வண்டி கிளம்பும் வரைக்கும் ஓட்டுநரும், நடத்துநரும் கூவிக்கூவி அலைத்தாலும் மக்கள் கட்டணம் அதிகமென்றாலும் தனியார் பேரூந்துகளில் பயணம் செய்வதைத் தான் விரும்புகின்றார்கள்.
திருப்பூர் முதல் திருச்சி வரைக்கும் செல்லும் வண்டிகளில் பாதித் தூரம் கடந்த பின்பு தனியார் பேரூந்துகள் நிறுத்தாத இடங்களில் நிற்கும் மக்கள் மூலம் அரசு வண்டிகளில் மக்கள் கூட்டம் சேர்கின்றது. கடந்த இருபது ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த ஒவ்வொரு போக்குவரத்துத் துறை அமைச்சர்களும் தற்போது தொழில் அதிபர்களாக மாறியுள்ளனர்.
தற்போது பயன்பாட்டில் உள்ள பொதுப் போக்குவரத்துத் துறை பேரூந்துகளைக் காயலான் கடையில் விற்றால் கூட ஐம்பதாயிரம் கூடத் தரமாட்டார்கள். பாதிக்கும் மேற்பட்ட வாகனங்கள் டயர் பழுதுபட்டு நின்று விடுகின்றது. வாகனங்களில் இருக்க வேண்டிய ஸ்டெப்னி, புது டயர்கள் இது போன்ற வசதிகள் எதுவும் இல்லை. பயணித்தவர்களை அடுத்து வரும் வண்டிகளில் ஏற்றி அனுப்பி விடுகின்றார்கள். மழை பெய்யும் போது பேரூந்தின் உள் பகுதி முழுக்க ஓழுக ஒட்டுநர் பகுதி மட்டும் கொஞ்சம் நனையாமல் இருக்கின்றது.
திருச்சி முதல் காரைக்குடி வரை செல்லும் சாலைகள் அனைத்தும் புதுப்பெண் போல மினுமினுப்பாய் அழகாய் இருக்கின்றது. தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் மூலம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. மக்கள் பயணிக்கும் பொதுப் போக்குவரத்துதுறை வாகனங்கள் மட்டும் மணிக்கு நாற்பது கிலோமீட்டர் வேகத்தில் செல்கின்றது. நாம் பார்க்கும் மற்ற வாகனங்கள் குறைந்தபட்சம் மணிக்கு என்பது கிலோமீட்டர்க்குக் குறைவில்லாமல் வேகத்தில் நம்மைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றது.
ஒரு நகர்புறத்தில் தொடகும் உள்ளடங்கிய கிராமங்கள் பலவற்றுக்கும் சாலை வசதிகள் சிறப்பாகப் போடப்பட்டுள்ளது. இன்னும் சில வருடங்களில் தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் பயணித்தாலும் சுங்கவரி கட்டணம் இல்லாமல் பயணிக்க முடியாது. கையில் காசிருந்தால் மட்டுமே இனி தனி நபர்கள் வைத்திருக்கும் வாகனங்களில் பயணிப்பது சாத்தியமாக இருக்கும்.
மரங்களே தேவையில்லாத தமிழ்நாடாக மாறியுள்ளது.தேசிய நெடுஞ்சாலை வசதிகளின் உபயத்தால் பயன்படாமல் கிடந்த நிலங்களின் விலைகளும் தாறுமாறாக ஏறியுள்ளது. விற்பவர்களைவிட இடைத்தரகர்கள் கடந்த சில வருடங்களில் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர்.
கர்நாடகாவில் மழை பெய்து உபரி நீராக அவர்களுக்குத் தேவையற்றதாக மாறும் போது மட்டும் திருச்சி பகுதிகளில் பல இடங்களில் தண்ணீரைப் பார்க்க முடிகின்றது. குளித்தலை பகுதிகளில் வாங்கும் வாழைப்பழத்தின் அளவு மிக மிகச் சிறியதாக மாறியுள்ளது.
பயணித்த பாதையில் சாலையின் இருபுறத்திலும் பல இடங்களில் கட்டப்பட்டுள்ள தனியார் பொறியியல், தொழில் நுட்பக்கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கைகள் அதிகமாக இருந்தாலும் கடந்த சில வருடங்களில் கூட்டம் சேராத காரணத்தால் பணிபுரியும் ஆசிரியர்களை “ஆள்பிடிக்கும்” வேலைக்குப் பள்ளி நிர்வாகத்தின் மூலம் கட்டாயப்படுத்தப்படுகின்றார்கள்.
“நூறு நாள் வேலைத்திட்டம்” சமூகத்தில் வேறொரு புதிய தாக்கத்தை உருவாக்கியுள்ளது.
கிராமத்தில் வசதியுள்ளவர்களைத் தடுமாற வைத்துள்ளது. அதிக நிலம் வைத்திருப்பவர்களுக்கு ஆள் கிடைக்காமல் தடுமாறுகின்றார்கள். பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்தத் திட்டம் மிகப் பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. கையில் காசு புழங்கியதும் அவர்களின் சிந்தனைகளும் மாறியுள்ளது. தங்களுக்கான உரிமைகள் முதல் உணர்வுகள் வரைக்குமுண்டான அத்தனை விசயங்களிலும் கவனம் செலுத்தி பேசத் தொடங்கியுள்ளனர். ஆதிக்கம் செலுத்தி வந்தவர்கள் விழி பிதுங்கி நிற்கின்றார்கள்.
தற்பொழுது உணவு, உடை இரண்டுக்கும் எவரும் கஷ்டப்படவில்லை. உறைவிடம் என்பதற்கு மட்டுமே “தங்களுக்கென்று ஒரு வீடு” என்ற கனவில் பலரும் இருக்கின்றார்கள். பஞ்சம் என்ற வார்த்தையின் தன்மை அறியாத புதிய தலைமுறைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள். வெகு விரைவில் தண்ணீர்ப் பஞ்சம் மட்டுமே பல புதிய திருப்பங்களை இங்கே உருவாக்கக்கூடும்.
“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்ற பழமொழி பழங்கதையாகி விட்டது. தனித்த சிந்தனைகளில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்துகின்றார். தொழில் நுட்ப வசதிகளும், அலைபேசி, தொலைக்காட்சி வசதிகள் மிகப் பெரிய தாக்கத்தை மக்களிடம் உருவாக்கியுள்ளது.
உறவுகளில் சிதைவு என்பது இயல்பான ஒன்றாக மாறியுள்ளது.
மன அழுத்தமும், கவலைகளும் அதிகமானாலும் நுகர்வு கலாச்சாரத்தின் ஒரு அங்கத்தினராகவே ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
“தாங்கள் விரும்பியதை அடைய வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என்ற எண்ணம் மெதுமெதுவாக ஒவ்வொருவரின் மனதிலும் உருவாகிக் கொண்டிருக்கின்றது.
பணம் தவிர்த்து வேறு எதையும் பேசுவது யோசிப்பது தவறென்ற எண்ணம் நடுத்தரவர்க்கத்தின் தகுதியான குணமாக மாறியுள்ளது. விளம்பரங்கள் தான் ஒவ்வொரு சந்தையையும் தீர்மானிக்கின்றது. வாங்கும் பொருட்கள் தரமில்லையென்றாலும் அடுத்த விளம்பரத்தின் மூலம் வேறொரு பொருளின் மூலம் உருவாகும் நாட்டம் நட்டத்தை உருவாக்கினாலும் எவரும் அதனை யோசித்துப் பார்ப்பதில்லை.
அதற்கான நேரமும் இல்லை.
சிறிய நகர்ப்புற பகுதிகள், கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களால் “எம்.ஜி.ஆர் மேலிருக்கும் பாசத்தைத் தங்களால் மாற்றிக் கொள்ள முடியவில்லை” என்கிறார்கள். இரட்டை இலை சின்னம் என்பது அவர்களின் ஆழ்மனதில் நீக்கமுடியாத இடத்தில் உள்ளது. ஆனால் “ஜெயலலிதா தகுதியானவர் இல்லை” என்பதில் மட்டும் தெளிவாக இருந்தாலும் சின்னத்தின் தாக்கத்தால் அவர்களால் மாற்றுக்கட்சி குறித்து யோசிக்க முடியவில்லை.
அடித்தட்டு,கிராமப்புற மக்களிடம் இன்று வரையிலும் கலைஞரால் எந்த நல்ல அபிப்ராயத்தையும் உருவாக்க முடியவில்லை.
உள்ளடங்கிய கிராமங்களில் இன்னமும் அரசியலை வெட்டி அரட்டைக்காக விவாதிக்கின்றார்கள். இன்றைய உண்மையான நிலவரங்கள் எவருக்கும் தெரியவில்லை. தொலைக்காட்சி என்றால் சினிமாவுக்கு மட்டும் தான்.
சற்று விபரம் தெரிந்தவர்களும் அரசியல் குறித்துத் தங்களுக்கென்று ஒரு தனிப்பட்ட அபிப்ராயங்கள் வைத்துள்ளார்களே தவிர அரசின் ஊழல் குறித்தோ, அதிகப்படியான விபரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் துளிகூட இல்லை.
விலைவாசி உயர்வை கவலைப்பட்டு ஒவ்வொருவரும் பேசுகின்றார்கள். அதற்குப் பின்னால் உள்ள உண்மையான காரணங்கள் குறித்துக் கேட்டால் சொல்லத் தெரியவில்லை.
மேலே என்றால் காங்கிரஸ் தான் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. ஆனால் பீ சிதம்பரத்தைப் பற்றிப் பேசினால் கெட்ட வார்த்தைகளில் திட்டுகின்றார்கள்.
நரேந்திர மோடி குறித்து முழுமையாகக் கிராமம் அளவுக்கு வந்து சேரவில்லை. அரசியல்வாதிகளை எவரும் நம்பத் தயாராக இல்லை. ஆனால் நமக்கேன் வம்பு? என்று ஒதுங்கிப் போய்விடவே விரும்புகின்றார்கள்.
விதி என்பதை ஆழமாய் நம்புகின்றார்கள். அது தான் இன்றைய வாழ்க்கை என்பதை உணர்ந்து வைத்துள்ளார்கள்.
ஒவ்வொருவரின் மனதில் இறைபக்தி மாற்ற முடியாத இடத்தில் உள்ளது. அதை விடத் தான் சார்ந்துள்ள சாதிப்பற்று அதிகமாகவே உள்ளது.
தாங்கள் எதிரே பார்க்கும் மிகப் பெரிய வித்தியாசங்கள் எவர் மனதில் எந்த மாறுதல்களையும் உருவாக்குவதில்லை. “தன் விதி தன்னை இப்படி வாழ வைக்கின்றது” என்ற கொள்கையே பணக்காரர்கள் மேலும் தவறான வழிகளில் செல்வம் சேர்க்கத் தூண்டுகின்றது. ஏழைகளை மேலும் மேலும் ஏழையாக மாற்றிக் கொண்டேயிருக்கின்றது.
புதுக்கோட்டை ராஜவீதியில் காலையில் ஐந்து மணிக்கு ஒரு பெரிய டீக்கடையில் டீ குடித்து விட்டு அடுத்த ஒரு மணிநேரமும் அங்கு வருபவர்களை (ஏறக்குறைய 100 பேர்கள்) கவனித்தேன். அந்த ஒரு மணி நேரத்தில் அங்கிருந்த தினந்தந்தியை பார்க்கின்றார்கள். கவனிக்கவும் படிக்கின்றார்கள் அல்ல. குறிப்பிட்ட சிலர் படிக்கும் முக்கியமான விசயமாகத் துணுக்குச் செய்திகளும், சினிமா விளம்பரங்கள் மட்டுமே உள்ளது. அதையும் முழுமையாகப் படிப்பதில்லை.
அப்படியே மடித்துக் கூட வைக்காமல் குப்பை போல அருகே போட்டு விட்டு சென்று கொண்டேயிருக்கின்றார்கள். இன்று வரையிலும் தெளிவான உண்மையான வாசிப்பு அனுபவம் இல்லாத தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒவ்வொருவரும் எதிர்பார்க்கும் மாற்று அரசியல், மாற்றுச் சிந்தனைகள் வெறும் கானல் நீரே.
என் பார்வையில் சிவகங்ககை, புதுக்கோட்டை என்ற இரண்டு மாவட்டங்களில் நான் பள்ளிக்கூடத்தில் படித்த போது மக்கள் எப்படி இருந்தார்களோ இன்றும் சிந்தனையளவில் இருக்கின்றார்கள். கட்டிடங்கள், ஆட்கள், வண்டிகள், வாகனங்கள் என்று பல வகையில் ஒவ்வொரு பகுதியும் மாற்றம் அடைந்துள்ளது. மக்களின் ஆசைகளும் விருப்பங்களும் மாறியுள்ளது.
மக்களின் வாழ்க்கை தரம் என்ற பெயரில் அவரவர் கட்டியுள்ள வீடுகளும், தாங்கள் வைத்துள்ள பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு அளவுகோலாகக் கொண்டு தங்களை வெற்றி பெற்ற மனிதராக முன்னிறுத்துகின்றார்கள்.
பொதுச் சுகாதாரம் என்ற வார்த்தையும், பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளும் தமிழ்நாட்டு மக்கள் கற்றுக் கொள்ள இன்னும் கால் நூற்றாண்டு காலம் ஆகலாம். வருகின்ற தலைமுறைகள் மூலம் இந்த மாற்றத்தின் தொடக்கம் இருக்கும் என்றே நம்புகின்றேன்.
“வாழ்வில் உயர மதிப்பெண்கள் மட்டுமே மிக முக்கியம்” என்ற கொள்கையினால் பாடப்புத்தகத்திற்கு அப்பாலும் ஒரு உலகம் உள்ளது என்பதையோ, மற்ற புத்தகங்கள் மூலம் தங்களை வளர்த்துக் கொள்ள முடியும் என்ற எண்ணமோ எவர் மனதிலும் இல்லை. அப்படியே ஆசைப்படும் மாணவர்களை ஊக்குவிக்க எவரும் தயாராக இல்லை. எதிர்காலப் பயமே இங்கே ஒவ்வொருவரையும் படாய் படுத்திக் கொண்டிருக்கின்றது.
ஒவ்வொரு தனியார் மருத்துவமனைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகின்றது. இதைப் போலப் பல மடங்கு அரசு மருத்துவமனைகளில் கூட்டம் உள்ளது.
ஆனாலும் பலரும் சுகாதரமற்ற சூழ்நிலையில் வாழ்ந்தாலும் ஆரோக்கியமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தன்னைப் பற்றி உணராமலும், தன்னைச் சுற்றிலும் உள்ள சமூகத்தைப் பற்றி உணர வாய்ப்பில்லாமல் இருப்பதால் எந்தக் கவலைகளும் பெரிதாக அவர்களைத் தாக்குவதில்லை.
கவலைகள் இல்லாத மனம் இயல்பான ஆரோக்கியத்தை அவர்களுக்கு வழங்குவதால் இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ கற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
மாறிக் கொண்டே வரும் தொழில்நுட்பங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது. ஆனால் அது சினிமா என்ற வடிவமாகத்தான் எடுத்துக் கொள்கின்றார்கள். சிந்திக்கவே பயப்படும் சமூகத்திலிருந்து நாம் உடனடி மாறுதல்களை எதிர்பார்ப்பது தவறு.
ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தொலைக்காட்சியில் வருகின்ற நெடுந்தொடர்கள் உண்மையான சேவையைப் புரிந்து கொண்டிருக்கின்றது. அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். பேரன், பேத்திகளுடன் சண்டை போட்டுக் கொண்டே தாங்கள் விரும்பும் சேனல்களை மகன், மருமகள் உதவியுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழகத்தில் மற்ற மாநிலங்களைப் போலச் சிந்தனை ரீதியான மாற்றம் நிச்சயம் வரும். தங்களால் இனி இங்கு வாழவே முடியாது என்கிற சூழ்நிலை வரும் போது மட்டுமே. அப்போது முதலில் பாதிக்கப்படப் போகும் சமூகம் நடுத்தரவர்க்கமே.