"

4

3.காரைக்குடி உணவகம் பசியா? ருசியா?

சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி பட்டிமன்றத் தலைப்பு போல இருக்குதே என்று யோசிக்கின்றீர்களா?

வேற என்ன செய்வது?

உண்ண வழியில்லாமல் ஒரு பெருங்கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கின்றது. அடுத்து என்ன மாதிரி வித்தியாசமான சுவையில் உண்ணலாம் என்று அலையும் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தானே இருக்கிறது.

பழைய சாதம். தொட்டுக்கக் கொஞசம் முதல் நாள் வைத்த பழைய புளிக்குழம்பு? ரெண்டு வெங்காயம். எனக்கு இது போதும். சோறு தவிர வேறெந்த கருமாந்திரமும் தேவையில்லை. சோறு தான் வேண்டும். அதைச் சாப்பிட்டால் எனக்குச் சாப்பாடு சாப்பிட்ட திருப்தி?

அய்யோ? இந்தச் சோறு சாப்பிடுபவர்களைப் பார்த்தாலே எனக்கு எரிச்சலா வரும். விதவிதமான டிபன் வகைகள் தான் எனக்கு எப்போதும் விருப்பம்?

விதவிதமான புதிய வகைகளைச் சுவைத்துப் பார்ப்பது எனக்குப் பிடிக்கும்? வர வர பீட்ஸா, பர்கர் கூடப் பிடிக்கமாட்டுது.

அடப் போங்கப்பா சாப்பாடு என்றால் அசைவம் தான் உண்மையான சாப்பாடு. ஒரே ஒரு கருவாடு. ஒரு தட்டு சாப்பிட்டு விடுவேன். எனக்குச் சிக்கன், மட்டன் இருந்தா ஒரு கட்டு கட்டி விடுவேன். ஒரு முட்டை கூடச் சாப்பிட்டுற சாப்பாட்டில் இல்லைன்னா அது என்னப்பா சாப்பாடு?

இந்த ஐந்துக்குள் தானே நாமே ஏதோவொரு இடத்தில் ஒளிந்து தின்று கொண்டிருக்கின்றோம்.

இந்தப் பஞ்சபாண்டவர்களைப் போல இவங்க முப்பாட்டனும் நான்கில் இருந்து தான் தொடங்குகின்றார்கள். .

இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு.

ஆனாலும் இதன் நீட்சி அதிகம் என்றாலும் இப்போது இதனை மட்டும் எடுத்துக் கொள்வோம். கண்மாய் மீனில் கருப்பட்டி போட்டு சமைத்தால் நன்றாகவா இருக்கும்?

அல்வாவை அயிரை மீன் பக்குவத்தில் செய்ய முடியுமா?

புளியோதரையில் அதிகமாக உப்பை அள்ளிக் கொட்டினால் உப்போதரை என்று சொல்ல மாட்டார்கள். செய்தவர் அடிவாங்கி விடுவார். .

சொல்லிக் கொண்டே போகலாம். காரணம் நாம் விரும்பும் ருசி தான் நமக்கு முதலில் பசியைத் தூண்டுகின்றது. குழப்பமாக இருக்கின்றதா? இயல்பாக உடம்பில் நேரம் வந்ததும் பசி எடுப்பது என்பது வேறு?

ருசி நம்மைத் தூண்டுவது என்பது வேறு.

திடீரென்று சுவராஸ்சியம் இல்லாமல் ஒரு கிராமத்துக் கடையில் வேண்டா வெறுப்பாகச் சாப்பிடும் சூழ்நிலை உருவாகின்றது என்று வைத்துக் கொள்ளுங்க. இயல்பான பசிக்காக உள்ளே நுழைந்து இருப்பீங்க. வேறு எந்தக் கடைகளும் அந்தச் சமயத்தில் கண்களுக்குத் தென்பட்டு இருக்காது. ஆனால் அவங்க கொடுத்த கோழிக் குழம்பை பார்த்து சொக்கிப் போய் என் சொத்தை வேண்டுமானாலும் எழுதித் தருகின்றேன். இன்னோரு கரண்டி ஊத்துங்க என்று உறிஞ்சத் தோன்றுமே?

அது தான் ருசியின் மகிமை.

கூழாக மாற்றுங்க.

இன்று ஒவ்வொருவரும் ருசியாகச் சாப்பிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு எத்தனையோ விதமான உணவுகளைத் தினந்தோறும் தினறு பார்க்க முயற்சித்துக் கொண்டே தான் இருக்கின்றோம். ஆனால் எப்படிச் சாப்பாடுகின்றோம் என்பது தான் பெரிய கேள்விக்குறி?

சாப்பிடுவதைப் பற்றி இப்போது பேச வேண்டும்.

ஒரு கையில் அப்படியே எடுத்து ஒரு உருண்டை உருட்டி அப்படியே வாயில் திணிப்பது ஒரு வகை. வாய் என்பது ஒரு சிறிய அளவு உள்ள பகுதி. ஆனால் அதன் கொள்ளவுக்கு மேல் திணிக்கும் போது பாதிக்கும் மேலே அரைக்காமலேயே அப்படியே உள்ளே போய்விடுகின்றது. வயிறு என்பது செரிக்கத்தானே இருக்கிறது என்பது நீங்க சொல்வது என் காதில் விழத்தான் செய்கின்றது. ஆனால் வயிறு என்பதன் பணி வேறு.

சாப்பிடுவதை முறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு விரலின் நுனியில் தொடங்கும் முதல் கோடு வரைக்கும் தான் சாப்பாட்டை எடுக்க வேண்டுமாம். அதாவது நான்கு விரல்களும் சோர்ந்த அந்த அளவுக்கு எடுக்கும் போது தான் கிடைக்கும் அளவு தான் வாயில் இயல்பாகப் பற்கள் கடித்து நாக்கு சுழற்றி அது கூழாக மாற்றி உள்ளே இறங்க உதவும். அளவுக்கு மீறி எடுத்து வாயில் திணிக்கும் போது தான் பாதிக் கடித்தும் கடிக்காமலும் உள்ளே போக ஒவ்வொரு பஞ்சாயத்தின் தொடக்கமும் இதில் இருந்து தான் தொடங்குகின்றது.

செரிக்காமல் வயிற்றில் தங்குவது, செரிமாணத்தின் அளவு தெரியாமல் சாப்பிடுவது, எப்போது சாப்பிட வேண்டுமோ அதை மீறி கண்ட நேரத்தில் சாப்பிடுவது, ஓய்வு கொடுத்தே ஆக வேண்டிய நேரத்தில் உள்ளே தள்ளிக் கொண்டேயிருப்பது……………

இத்தனையும் செய்து விட்டு குத்துதே குடையுதே என்றால் தற்கு என்ன தான் தீர்வு?

நோய்களின் ஆரம்பம் ஒவ்வொருவரின் வயிற்றில் இருந்து தான் தொடங்குகின்றது. அந்த வயிற்றைச் சரியாகக் கவனிக்காமல் வைத்திருக்கும் போது வயிற்றுப் போக்கு முதல் வெளியே தள்ளி விடுப்பா என்று சொல்லாமலேயே செய்யும் வாந்தி வரைக்கும் நம்மை வரவேற்கின்றது.

மைதா மாவு போன்ற சமாச்சாரங்களை வழிக்குக் கொண்டு வர ஈஸ்ட் என்ற பொருளைச் சேர்ப்பதை கவனித்து இருப்பீர்கள் தானே?

காரணம் நொதித்தல் என்ற நிலை நடக்க வேண்டும். அப்புறம் வகுத்தல் கூட்டல் பெருக்கல் போன்ற சமன்பாடுகள் நடக்கும்.

அதன் பிறகே நாம் விரும்பிய பலகாரத்தைச் செய்ய முடியும். மாவு நொதிக்கவில்லை என்றால் நாம் நொந்து போய் அந்த மாவை வேடிக்கைப் பார்க்க மட்டுமே உதவும். அதைப் போலத்தான் நம் வாயில் உள்ள எச்சில் என்ற உமிழ்நீர் என்ற அற்புத பணியைச் செய்கின்றது. காறி காறி துப்பி அதை வீணாக்கும் மனிதர்களுக்கு அதன் அருமை புரியப்போவதில்லை.

சுவை என்பது நாக்கு மட்டுமே உணரும். உள்நாக்கில் தொடங்கும் அந்த உணவின் கூழ் என்பது வெறும் சாறு தான். அதற்குப் பிறகு அதன் சுவையை எந்த உறுப்பும் உணர வேண்டிய அவசியமில்லை.

ஆனால் இந்த நாக்கு வரைக்கும் நடக்கும் பயணத்திற்குத்தான் நான் நாயாய் பேயாய் அலைந்து அலைந்து கண்ட கண்ட இடங்களில் உள்ள கருமாந்திரங்கள் வாங்கி வாயில் கொட்டிக் கொண்டேயிருக்கின்றோம். ஆனால் கூழாக மாறி உள்ளே அளவோடு உள்ளே செல்லும் எந்த உணவும் உங்களுக்கு ஆரோக்கியத்தைத் தருகின்றதோ இல்லையோ அது அவஸ்த்தையைத் தராது.

சத்துக்கு உணவா? சக்திக்கு உணவா? இல்லை சாவதற்குள் அத்தனை சுவையையும் தின்று பார்க்கத்தான் இந்த உணவா? என்று எத்தனை எண்ணங்கள் இருந்தாலும் ருசியோடு அத்தனை பசியையும் போக்குவதோடு நன்றாக வாயில் அரைத்து அதைக் கூழாக்கி உள்ளே அனுப்புங்க. ஆயுள் கெட்டி என்று அர்த்தம். நோய்கள் வர யோசிக்கும்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காரைக்குடி உணவகம் Copyright © 2015 by Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.