17

சமீப காலமாகப் புத்தகக் கண்காட்சி தமிழ்நாட்டில் எந்த ஊரில் நடந்தாலும் களைகட்டுகிறது. பெற்றோர்களுடன் குழந்தைகளும் ஆர்வமாகப் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் இரண்டு முறை குழந்தைகளைத் திருப்பூரில் நடந்து கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துச் சென்று நொந்து போய் வந்துள்ளேன். காரணம் ஆளுக்கொரு புத்தகங்கள் தேர்ந்தெடுத்துவிட்டு அடுத்து அவர்கள் பார்வை செல்வது உள்ளே நுழையும் போது பார்வையில் தென்படும் உணவகத்தின் மேல் தான் விழுகின்றது.

அதற்குப் பிறகு அங்கே விற்கும் நொறுக்குத்தீனி வகையறாக்கள் மேல் தான் ஆர்வமாக இருக்கிறது. பள்ளிப் பாட புத்தகங்களில் ஆசிரியர்கள் எதிர்பார்ப்புக்கு மேல் சூரர்களாக இருக்கிறார்கள். ஆனால் மற்றப் புத்தக வாசிப்பில் அந்த அளவிற்கு ஆர்வத்தைக் கொண்டு வர பாடுபட்டுக் கொண்டுருக்கின்றோம்.

காரணம் ஆசிரியர்கள் மற்றும் நம்முடைய கல்விமுறை. படித்துத் துப்பினால் போதும் என்கிற சூழ்நிலை தான் முக்கியக் காரணமாக இருக்கிறது. என்னுடைய பார்வையில் நான் பார்த்து வந்த ஆசிரியர்கள் போலவே என் குழந்தைகளின் ஆசிரியர்களும் இருக்கிறார்கள் என்பதை உறுதியாகவே சொல்லமுடியும்.

என்ன காரணம்?

எனது இளமைப்பருவத்தை நினைத்துப் பார்க்கும் போது பாடப்புத்தகங்களைத் தவிர வேறெந்த புத்தகங்களும் தேவையில்லை என்பதாகக் கருதிக் கொள்ளும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிவுரையைக் கொண்டு தான் வாழ்ந்து வந்திருக்கின்றேன்.

கல்லூரி சென்ற பிறகே நூலகத்தில் நாம் படிக்கும் படிப்புச் சம்மந்தப்பட்ட புத்தகங்களையும் தேடிப் படிக்க வாய்ப்புண்டு என்பதைப் புரிந்து கொண்டேன். பள்ளி இறுதி வரைக்கும் எந்த ஆசிரியரும் நூலகத்தின் அருமை பெருமைகளைச் சொன்னதே இல்லை. காரணம் அவர்களும் நூலகம் பக்கம் தலைவைத்துப் படுப்பதும் இல்லை. பள்ளியில் நூலகம் என்றொரு பகுதி இருக்கிறது என்றார்கள்.

ஆனால் கடைசிவரைக்கும் எந்த மாணவனும் அந்த இடத்திற்குள் நுழைந்ததும் இல்லை, உள்ளே என்ன இருக்கிறது என்பதை எவரும் கண்ணால் கண்டதும் இல்லை. பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களைப் போலவே மற்றக் கதை, கட்டுரை மற்றும் பத்திரிக்கைகளை எப்போது முதல் முதலாகப் படிக்கத் தொடங்கினோம்? என்பதை எப்போதாவது நினைத்து பார்த்து இருக்கீங்களா?

எங்கள் வீட்டில் அப்பா கடைசிவரைக்கும் தினமணி மட்டுமே வாங்கினார். வேறு எந்தப் பத்திரிக்கைகளும் வராது. அவர் பார்வையில் மற்றப் பத்திரிக்கைகள் அத்தனையும் காசைப் பிடித்த கேடு. ஆனால் நான் அந்தத் தினமணியை தொட்டுக் கூடப் பார்க்க விரும்பதில்லை. எங்கே பார்த்தாலும் வெறும் எழுத்தாகவே இருக்கும்.

அதுவும் கவர்ச்சியற்ற அந்த வெள்ளை நிற படங்கள் அழுது வடிந்து கொண்டிருக்கும். வீட்டில் மற்றச் சகோதர சகோதரிகளும் தினமணியைத் தொட மாட்டார்கள். ஆனால் பக்கத்து வீடுகளில் இருந்து வரும் குமுதம், ஆனந்த விகடன் இது தவிர நூலகத்தில் இருந்து எடுத்து வரும் கதைப் புத்தகங்கள் தான் எங்களுக்குத் தீனி போட்டது. இதைத்தவிரப் பொழுது போக்கு என்பது இலங்கை வானொலி நிலைய பாடல்கள்.

முதன் முதலாகக் கூட்டுக்குடித்தனமாக இருந்த பழைய வீட்டிலிருந்து மாறி ஊருக்குள் கடைவீதிக்கு அருகே இருந்த வீட்டுக்குள் நாங்கள் மாறி வந்த போது தான் எனக்கு வெகுஜன பத்திரிக்கைகள் அறிமுகமானது. வீட்டில் இருந்து 200 அடி தொலைவில் கடை வீதிகள் ஆரம்பமாகும். கடைவீதி என்றதும் பெரிதாகக் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். . ஒரு பிள்ளையார் கோவில். எதிர்புறம் பெரிய குளம். அந்தக் குளத்தின் நான்கு புற கரையின் மேல் வரிசையான கடைகள். இது தான் மொத்த கடைவீதியே.

ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்குள் வீட்டில் கட்டாயம் அனைவரும் எழுந்து விட வேண்டும். இது நிரந்தரச் சட்டம். ஆனால் எழுந்தவுடன் என்னுடைய பார்வை வேறொரு பக்கம் செல்லும். வாசலில் உட்கார்ந்து கொண்டு அங்கேயே பார்த்துக் கொண்டிருப்பேன்.

பேப்பர்கட்டுகள் பேருந்தில் வந்து இறங்கியதை உறுதிப்படுத்தியவுடன் என் கால்கள் அங்கே செல்லத் துவங்கும்.

பேருந்து நிலையம் அருகே மாணிக்கம் டீக்கடை. அதிகாலை 5 மணிக்கே திறந்து விடுவார்கள். அடுத்தக் கடை முடிதிருத்தும் கடை. அடுத்தது சோலை பெட்டிக்கடை. கடைசியாக அண்ணாமலையண்ணன் மளிகைக்கடை. தினந்தந்தி, தினமலர், தினகரன் என்று இந்தக் கடைகளுக்கு தினந்தோறும் வந்து விடும்.

காலை ஆறு மணி முதல் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் இந்தப் பத்திரிக்கைகளை கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்து நிச்சயம் வாசித்து விடுவேன். பல பெருசுகளிடம் திட்டு வாங்கியதும் உண்டு. முக்கியமாகப் பத்திரிக்கைகளில் வரும் திரைப்பட ப்ளோ அப், நடிகர், நடிகைகள் சம்மந்தப்பட்ட கிசு கிசு சமாச்சாரங்களைத் தான் முக்கியத்துவம் கொடுத்துப் படிப்பேன்.

காரணம் இந்த விசயங்களைப் படித்து மனதில் ஏற்றிக் கொண்டால் தான் அன்று சாயங்காலம் கூடும் நண்பர்களுடன் தெருவோர பாலத்தில் அமர்ந்து பேசும் போது கதையளக்க வசதியாக இருக்கும்.

நடிகைகள் சம்மந்தப்பட்ட விசயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி பாதிக் கற்பனைகளை சேர்த்துக் கொண்டு அவர்களின் படுக்கையறையை நான் எட்டிப் பார்த்தது போலவே சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமில்லாமல் நண்பர்களுக்குச் சொல்லி கிலியை உருவாக்கி விடுவதுண்டு..

இந்த வாசிப்புப் பயணம் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையன்றும் நூலகம் போக வைத்தது.

ஊரில் நூலகமென்பது வீட்டுக்கு அடுத்தச் சந்தில் இருந்தது. அதுவொரு பழங்காலத்து செட்டியார் வீட்டின் பின்புற பகுதி. இந்த நூலகத்திற்கென்று மிகக் குறைந்த வாடகையில் ஒதுக்கி கொடுத்திருந்தார்கள். வெளியே சுவற்றில் நூலக ஆணைக்குழு என்று நீல நிற தகரத்தில் சிறிய அளவில் ஒரு போர்டு மாட்டியிருந்தார்கள். நூலகம் இருந்த சந்தின் வழியாகப் பலமுறை நான் சென்று இருந்த போதிலும் இந்த நூலகத்தை நான் கவனித்தது இல்லை.

அந்த வீட்டையும் உள்ளே இருப்பவர்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே போயிருக்கின்றேன். வயதானவர்கள் உள்ளே உட்கார்ந்து படித்துக் கொண்டு இருப்பார்கள். சில சமயம் பல அக்காக்கள் உள்ளே சென்று விட்டு வெளியே வரும் போது சில புத்தகங்களைக் கையில் எடுத்துக் கொண்டு போவதையும் பார்த்து இருக்கின்றேன். தயங்கி தயங்கி வேடிக்கை பார்த்தபடி உள்ளே போகப் பயந்து கொண்டு நாட்களைக் கடத்தியிருக்கின்றேன். .

நூலகம் குறித்த விபரம் புரிந்த போது நாம் சிறுவனாக இருக்கிறாமோ? உள்ளே விடுவார்களா? என்று யோசித்தபடியே வாசலில் நின்று எட்டிப் பார்த்தபடி மீண்டும் வீட்டுக்கே வந்து விடுவேன்.

ஒரு நாள் சற்றுத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து விறுவிறுவென்று பத்திரிக்கைகள் வைத்திருக்கும் அந்தப் பெரிய மேஜைக்குச் சென்ற போது உள்ளே அமர்ந்திருந்த ஒருவர் சப்தம் போட்டு என்னை அழைத்தார்.

பயந்து கொண்டே உள்ளே சென்ற போது கையெழுத்து போட்டாயா? என்று கேட்டார். அப்போது தான் புரிந்தது உள்ளே வருபவர்கள் வாசலருகே வைத்திருக்கும் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன். அன்று முதல் தைரியமாக நூலகப் பயணம் தொடங்கியது.

முதல் நோக்கம் அங்கேயிருந்த அம்புலிமாமா. அதன்பிறகு ஒவ்வொன்றாக அறிமுகமாக உள்ளே வரும் அத்தனை பத்திரிக்கைகளையும் காலை எட்டு மணி முதல் மூடும் நேரமான 12 மணி வரைக்கும் வாசித்து முடித்து விடுவதுண்டு. மறுபடியும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணிக்கும் விட்ட குறை தொட்ட குறையாக இருக்கும் ராமகிருஷ்ண விஜயம் போன்ற தனிச்சுற்று புத்தகங்களையும் வாசித்து விடுவதுண்டு.

அங்கு வரும் எவருமே தொடாத பல புத்தகங்களையும் படித்து விடுவதுண்டு. புரியுதோ இல்லையோ அதென்னவோ வாசிப்பென்பது ஒரு வெறி போலவே எனக்குள் உள்ளே ஓடிக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு ஞாயிறன்றும் தவறாமல் போய் அந்த ஒரு வார புத்தகங்களையும் ஒரு கை பார்த்து விட்டு வருவதுண்டு. மெதுமெதுவாக நூலகரிடம் சிநேகம் பிடித்து உள்ளே அறைக்குள் செல்லும் அளவுக்குப் பழக்கத்தையும் உருவாக்கிக் கொண்டேன். எனக்கு அத்தனையும் இலவசமாக வாசிக்கக் கிடைக்கிறது என்பது தான் முக்கியக் காரணமாக இருந்தது.

காரணம் இது போன்ற புத்தகங்களை வெளியே எங்கேயும் வாங்கவும் முடியாது. ஊருக்குள் புத்தக விற்பனை என்று எங்குமில்லை. இப்போது கடைகளில் தொங்குவது போல எங்கேயும் பார்த்ததும் இல்லை. அப்போதுள்ள சூழ்நிலையில் என் கையில் ஐந்து பைசா தேறினாலே ஆச்சரியம். பத்துப் பைசா தேற்றிவிட்டால் அதிகபட்சமாகத் தேன் மிட்டாய் இரண்டு வாங்கித் தின்பது தான் உச்சக்கட்ட சந்தோஷமாக இருக்கும். தேவையில்லாமல் வீட்டில் காசு கேட்க முடியாது. எது தேவையோ அது வீட்டுக்கே வந்து விடும்.

ஊரிலிருந்த ஜெயசெல்வாம்பிகை என்ற கீற்றுக் கொட்டகை சினிமா தியேட்டரில் வருடத்திற்கு ஒரு படம் பார்த்தால் ஆச்சரியம். வேறு எந்தப் பொழுது போக்குக்கும் வாய்ப்பில்லை. எவரிடமிருந்தாவது புத்தகங்கள் வாங்கினால் வீட்டுக்கும் கொண்டு போக முடியாது. வீட்டில் இருந்தால் பாடப்புத்தகங்களைத் தவிர வேறு எதுவும் படிக்க முடியாது. விடுமுறை நாட்களில் பகல் நேர அரட்டையின் போது நண்பர்களுடன் பேச இந்த வாசிப்பு அனுபவம் பல விதங்களிலும் எனக்குதவியது. தெரிந்தது, தெரியாதது என்று பாரபட்சம் இல்லாமல் கலந்து கட்டி பேச உதவியது.

இந்தப் பழக்கம் பனிரெண்டாம் வகுப்பு வருவதற்குள் எனக்குள் பல தாக்கத்தை உருவாக்க உதவியது. என்னை விட வயதான நபர்களுடன் பேச உதவியது. நூலகத்தில் உள்ள வெளிப்பகுதி பத்திரிக்கைகளைப் படித்து முடித்து உள்ளே வரிசைக்கிரமமாக அடுக்கி வைத்திருந்த பைண்டிங் புத்தகங்கள் மேல் பார்வை சென்றது.

அதற்குப் பணம் கட்ட வேண்டும் என்ற போது நானும் சகோதரிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரும் மூன்று உறுப்பினர் அட்டை வாங்கிக் கொண்டு புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து வரத் தொடங்கினோம். ஆனால் அப்பாவின் பார்வைக்கு இது தெரியாத அளவுக்கு ஒவ்வொருவரும் கவனமாக இருந்தோம். அப்பாவைப் பொறுத்தவரையிலும் பாடப்புத்தகங்களைத்தவிர வேறு எதையும் படிக்கக்கூடாது. கெட்டுப் போய்விடுவார்கள்.

கல்லூரி முடிப்பதற்குள் தமிழகத்தில் பிரபலமாக இருந்த அனைவரின் எழுத்துக்களையும் வாசித்து முடித்திருந்தேன். இறுதியாகப் பாலகுமாரன், சுஜாதா அளவுக்கு வந்து நின்றது. தாடி வைத்துக் கொண்டு மாறிய பாலகுமாரன் என்னை விட்டு ஒதுங்கிப் போய்விட இறுதியாகச் சுஜாதா மட்டுமே மிஞ்சினார்.

திருப்பூருக்குள் வந்து முதல் பத்தாண்டுகள் கடலில் கரைத்த பெருங்காயம் போலவே வாழ்க்கை மாறிவிட வேறொரு புத்தகத்தைப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. உயிருள்ள புத்தகங்கள். மனிதர்கள், அனுபவங்கள், சோகம், துக்கம், வலி, வேதனை, ஆச்சரியம், பொறாமை, உழைப்பு என்று ஒவ்வொரு மனிதரும் ஒரு கதாபாத்திரமாக இருந்து உருப்படியான அனுபவங்களை எனக்குத் கற்றுத் தந்துள்ளார்கள்.

வாசிப்பு என்பது மாறி கவனித்தல் என்ற நிலைக்கு வாழ்க்கை மாறியது. இந்தப் பயணத்தின் இறுதியாகக் கடந்த நாலைந்து ஆண்டுகளில் கட்டுரை சார்ந்த புத்தகங்களை மட்டுமே படிக்கும் அளவுக்குச் சிந்தனை வளர்ந்துள்ளது.

கதைப் புத்தகங்கள் படித்து ஏறக்குறைய 15 வருடங்கள் ஆகிவிட்டது.

32 வயதில் தொழில் ரீதியாக அலுவகத்தில் இணையம் அறிமுகமானது. ஆனால் இன்று எங்கள் குழந்தைகள் எட்டு வயதில் இணையத்தைக் கையாள்கிறார்கள். இன்று வரை பல ஆச்சரியங்களை எனக்குத் தந்து கொண்டிருக்கிறார்கள். நன்றாகக் கவனித்துக் கொள்ளவும். நான் எதுவும் அவர்களுக்குக் கற்றுத் தந்ததே இல்லை. வாய்ப்புகளை மட்டுமே உருவாக்கிக் கொடுக்கின்றேன்.

அதன் மூலம் அவர்களாகவே அடுத்தடுத்த படிகளை கடந்து சென்று கொண்டு இருக்கிறார்கள். குறிப்பிட்ட விசயத்துடன் நின்று விடும் எனக்கு அவர்களின் தற்போதைய கணினி அறிவு பல சமயம் பயத்தை உருவாக்குகின்றது. அவர்கள் கேட்கும் பாதி விசயங்கள் எனக்குப் புரியாது அல்லது தெரியாது. நைஸாகத் தப்பிச் சென்று விடுவேன். திரும்பி வரும்போது இது தான் இப்படித்தான் என்று விளக்கும் போது சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டு நகர்ந்து விடுவதுண்டு.

ஆனால் இவர்களைப் பலமுறை புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துச் சென்று உள்ளேன். ஆர்வமாகப் பல புத்தகங்களை வாங்கிக் கொண்டு வருவார்கள். ஆனால் வீட்டுக்கு வந்ததும் அதைச் சீண்டக்கூட மாட்டார்கள். ஏதோவொரு மூலையில் அனாதையாகத் தூசி அடைந்து கிடைக்கும். கடந்த இரண்டு வருடங்களாக இப்படித்தான் இருந்துள்ளார்கள். பலமுறை மாற்ற முயற்சித்துள்ளோம்.

இந்த வருடம் தான் (2012) தமிழ் ஆங்கிலப் புத்தகங்களை ஆர்வமாக வாசிக்கத் தொடங்கி உள்ளார்கள். தினந்தோறும் காலையில் தமிழ் பத்திரிக்கைகளை வாசிக்கும் அளவுக்குக் கொண்டு வந்துள்ளோம்.

கடந்த 20 ஆண்டுகளில் காசு கொடுத்து நான் வாங்கிய புத்தகங்கள் மட்டும் ஏறக்குறைய ஆயிரம் இருக்கலாம். மாறிய இடங்களால் இன்று என் கையில் இருப்பது நூற்றுக்கணக்கான புத்தகங்கள் மட்டுமே. நான் வைத்துள்ள பலவிதமான புத்தகங்களைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைத்த போதிலும் முழுமையாக அவர்களால் தங்களைப் புத்தகங்களுடன் ஈடுபடுத்திக் கொள்ள முடிவதில்லை.

காரணம் தொலைக்காட்சி. முதல் இருபது வருடத்தில் நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதையும் பார்த்தது இல்லை. ஊருக்குள் ஒரே ஒரு முஸ்லீம் வீட்டில் மட்டும் தொலைக்காட்சி இருந்ததாக ஞாபகம். நண்பர்களுடன் அங்கே சென்ற போது கூடியிருந்த கூட்டத்தின் காரணமாக எவரையும் அவர்கள் உள்ளே விடவில்லை. இது போன்ற காரணங்களினால் எனக்கு இருந்த ஒரே வாய்ப்பு வாசிப்பு மட்டுமே.

ஆனால் இன்று குழந்தைகளுக்கு வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. அதிகமான சுதந்திரத்தை கொடுத்துள்ளோம். எதை வேண்டுமானாலும் பேசலாம் என்கிற அளவுக்கு அவர்களை ஆர்வமூட்டி அவர்களின் கேள்விக்கணைகளைப் பொறுமையாக நான் மட்டுமே கையாள்கின்றேன்.

நான் ஒவ்வொரு நாளும் வீட்டுக்குள் நுழையம் போது அவர்களின் ஆர்வம் கரைபெருக்கெடுத்து ஓடும். மனதில் உள்ள மொத்த கவலைகளை வாசலருகே விட்டு விட்டு அவர்களின் கேள்விகளை எதிர் கொண்டே உள்ளே வருவேன்.

“கண்டதையும் அவள்களுக்குச் சொல்லி அவர்களை மேலும் மேலும் வாயாடியாக மாற்றிக் கொண்டுருக்கீங்க” என்று மனைவி கோபித்துக் கொண்ட போதிலும் நான் கண்டு கொள்வதில்லை. சுட்டி டிவி, கார்டூன் என்று தொடங்கி டிஸ்கவரி வரைக்கும் கலந்து கட்டி பார்க்கிறார்கள்.

தொடக்கத்தில் தொலைக்காட்சியின் மேல் பைத்தியமாகத்தான் இருந்தார்கள். நிறைய கவலைப்பட்டுள்ளேன்.

இதன் காரணமாக வீட்டுக்காரம்மாவுடன் நிறைய வாக்குவாதம் வந்துள்ளது. பள்ளிக்கூடத்திற்குத் விடுமுறை என்றாலோ ஞாயிற்றுக் கிழமை தினங்களில் முழுக்கத் தொலைக்காட்சியே கதியேயென்று கிடப்பார்கள். கோபத்தில் ஒரு மாதம் ஒயரை பிடுங்கி வைத்துள்ளேன்.

இது மேலும் ஆர்வத்தைத் தூண்டும் என்பதைப் புரிந்து கொண்டு வெளியே அழைத்துச் செல்லத் துவங்கி அவர்களின் மனோநிலையை மாற்றத் தொடங்கினேன். அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடம் வீட்டுக்கு அருகே இருப்பதால் ஞாயிறன்று பள்ளிக்கூட விளையாட்டு மைதானத்தில் கொண்டு போய் விட்டு விடுவதுண்டு. சிறகடித்துப் பறப்பார்கள். இப்போது குழந்தைகளின் தொலைக்காட்சி ஆர்வம் சற்று மாறியுள்ளது.

குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை மட்டும் பார்க்கும் அளவுக்குப் புரியவைத்துள்ளேன், அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்கியுள்ளோம். பார்க்கத் தொடங்கும் போதே குறிப்பிட்ட நேரத்தை சொல்லி அவர்களாகவே அதை விட்டு வெளியே வர பழக்கியுள்ளோம்.

இப்போது பள்ளிக்கூடத்தில் இருந்து கொடுக்கும் பொது அறிவு சார்ந்த கேள்வி பதில்களுக்கு இணையத்தில் தேடுவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுத்துள்ளேன். தொலைக்காட்சி பார்ப்பது இன்னமும் குறைந்துள்ளது. கணினியில் சிறப்பாகப் படம் வரைய கற்றுள்ளார்கள். சமீபகாலமாக ஆன்லைன் விளையாட்டுகளைத் தானாகவே கற்றுக் கொண்டு ஒவ்வொரு படியாக மேலேறிக் கொண்டு இருக்கிறார்கள்.

பெரிய அட்டைகள் வாங்கிக் கொண்டு வந்து ஓய்வு நேரங்களில் படம் வரைய ஆர்வமூட்டிய காரணத்தால் இன்று மூலைக்கொருவராய் கலர் பென்சில்களை வைத்துக் கொண்டு தங்களுக்குத் தெரிந்த படங்களை வரைந்து கொண்டு இருக்கிறார்கள்.

தொலைக்காட்சியில் நான் எப்போதும் பார்க்க விரும்புவது தமிழ் ஆங்கிலச் செய்தி சேனல்களை மட்டுமே. இருவர் மட்டும் என்னுடன் அரசியல் குறித்துப் பேசும் அளவுக்கு வளர்ந்துள்ளார்கள்.

ஆனால் இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாகச் சேனல் வைத்துக் கொண்டு போட்டி போட்டு லாவணி கச்சேரி நடத்திக் கொண்டிருப்பதால் மண்டை விண்விண் என்று தெறிக்க வடிவேல் காட்டும் கிச்சுசிச்சுக்களை மட்டுமே கிடைக்கும் குறுகிய நேரத்தில் பார்த்து சிரித்து மகிழ்கின்றேன்.

குழந்தைகளும் வந்துட்டான்ய்யா………. என்று கத்துகின்றார்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி Copyright © 2015 by ஜோதிஜி திருப்பூர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book