23

“கல்வியே வாழ்வின் கலங்கரை விளக்கம். அது தான் ஒருவருக்கு என்றுமே அழியாத சொத்து.”

“கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.”

“கல்வியறிவு இல்லாதவர் கண் இருந்தும் குருடனாவர்.”

இது போன்ற எத்தனை பழமொழிகளைக் கேட்டுருப்போம். ஆனால் இன்றைய கல்வியென்பது இரண்டு கட்டத்திற்குள் தான் நிற்கின்றது.

விற்க தயாராக இருப்பவர்கள். அதை வாங்க தகுதியிருப்பவர்கள்.

இவர்கள் இருவரையும் தாண்டி மிச்சம் மீதி இருப்பவர்களைப் பற்றித் தான் நாம் பேசப் போகின்றோம். என் மகன் பக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கின்றான் என்பது பழைய நிலை. என் மகன் இந்தப் பள்ளியில் படிக்கின்றான் என்பதே தற்போதைய கல்விச்சூழல்.

இது தவிர இன்னமும் சிறப்பான கல்வியை எந்தப் பள்ளி தருகின்றது என்ற ஆராய்ச்சியும் ஒவ்வொருவர் மனதிலும் இடைவிடாது ஓடிக்கொண்டே தான் இருக்கின்றது. தற்போது சிறப்பான கல்வி என்பதற்குச் சில குறிப்பிட்ட வரையறை உண்டு என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். பள்ளியின் பெயர் பிரபல்யமாக இருக்க வேண்டும். பள்ளியில் தமிழைத் தவிர மற்ற அத்தனை மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பள்ளியின் பாடத்திட்டம் மத்திய அரசாங்கத்தின் பாடத்திட்டமான சிபிஎஸ்சி யில் இருக்க வேண்டும். குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து ஓராண்டுக்குள் ஆங்கிலத்தில் பேச கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். இது போல இன்னமும் பலப்பல.

இங்குச் சிறப்பான கல்வி என்பது அறிவின் அடிப்படையில் அல்ல. அதிகமான மதிப்பெண்கள் வாங்குவது அல்லது வாங்க வைக்க உதவும் கல்விக்கூடங்களுக்குத்தான் மரியாதை. இந்த கல்விக்காகத் தான் திருவாளர் நடுத்தரவர்க்கம் தங்கள் தகுதிக்கு மீறி தரமில்லாத பள்ளியில் சேர்த்து கையோடு காலையும் சுட்டுக் கொண்டு தடுமாறிக் கொண்டிருக்கின்றது. அரசாங்கமும் கல்வியென்பது எங்கள் பொறுப்பல்ல என்று கைகழுவ தயாராகிக் கொண்டிருப்பதால் தனியார் கட்டண கொள்ளைகளைக் கொள்கை என்ற பெயரில் கண்டும் காணாமல் நகர்ந்து கொண்டேயிருக்கின்றது.

ஆனாலும் மக்களின் மாறியுள்ள மனோபாவத்தின் காரணத்தால் வருடந்தோறும் கல்வி வியாபாரிகள் வளர்ந்து கொண்டே தான் இருக்கின்றார்கள். கடந்த இருபது வருடத்திற்கு முன்னால் ஒரு சிறிய ஓட்டு வீட்டுக்குள் தொடங்கிய கல்விக்கூடங்கள் இன்று பல ஏக்கர் பரப்பளவில் பெரிய நிறுவனமாக வளர்ந்து வருடந்தோறும் கோடிகளை அள்ளி குவிக்க முடிவதால் கேடிகளின் கடைசி அடைக்கலமே இன்று கல்விச் சந்தையாக மாறியுள்ளது.

நம் நாட்டில் கல்வியென்பது தொடக்கத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே என்பதாக இருந்தது. அதற்குக் குரு சிஷ்யன் என்று புனிதம் பூசப்பட்டது. அதுவே படிப்படியாக மாறி திண்னைப் பள்ளிக்கூடம் என்கிற ரீதிக்கு வளர ஏராளமான மாற்றங்கள் தேவைப்பட்டது. கல்வியென்பது பரவலாக்கம் ஆகாத காரணத்தால் பல நூற்றாண்டுகள் இந்தியா என்பது அறியாமை இருளுக்குள்ளே முழ்கி கிடந்தது. உழைக்க மட்டுமே தெரிந்த மக்களுக்குப் பிழைத்துக் கிடப்பதே இந்த வாழ்க்கை என்கிற சூழ்நிலையில் கல்வியென்பது அந்நியமாகவே இருந்தது.

இந்தியா சுதந்திரமடைந்தும் கூடத் திடீர் மாற்றங்கள் எதுவும் உருவாகவில்லை. இதுவே குறிப்பிட்ட சிறுபான்மையினர் மட்டுமே அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்தவும் வசதியாக இருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்றதும் படிப்படியான மாற்றங்கள் உருவான போதிலும் கல்வி ரீதியான மாற்றங்கள் மட்டும் மந்தகதியிலேயே இருந்தது. ஆங்கிலேயர்கள் உடலளவில் இந்தியன். உள்ளத்தளவில் ஆங்கிலேயன் என்கிற புதிய தலைமுறைகளை உருவாக்கி வைத்திருந்த காரணத்தால் எந்த மாற்றமும் இங்கே எட்டிப் பார்க்கவில்லை.

தமிழ்நாட்டில் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி தோற்றது. அதன் உண்மையான காரணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அரசியல் சாயம் பூசப்பட ஆட்சி மாற்றம் உருவான போது தான் இங்கே காமராஜர் என்றொரு தனிமனிதனின் சாதனைகளைச் சரித்திரம் குறித்துக் கொள்ளத் தொடங்கியது.

பெருந்தலைவர் காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வந்த பிறகே கல்வியென்பது அனைவருக்கும் உரியது. அரசாங்கம் இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டிய ஒன்று என்பதாக மாறியது. சாதி, மதம் என்ற அறைக்குள் அடைக்கப்பட்டு வைத்திருந்த கல்விக்கு அதற்குப் பிறகே இறகு முளைத்தது.

வாழ்க்கையென்பது ஒரு வட்டம் தானே?

இன்று கல்வியென்பது தொடங்கிய நிலைக்கே வந்து கொண்டிருக்கிறது. வசதியிருப்பவர்களுக்கே கல்வியென்றும் மற்றவர்களுக்கு எட்டா கனியாக மாறிக் கொண்டு வருகின்றது. இன்று இந்தியாவில் கல்வியென்பது விலை மிக்கப் பொருளாக மாறியுள்ளது. மலைபிரதேசங்களில் வாழ்பவர்களின் குழந்தைகளுக்கு இந்த விளக்கு கூடக் கிடைக்காமல் சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டுகளுக்குப் பின்பும் கல்வியறிவு இல்லாத இருட்டில் தான் இன்றும் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

சில காரணங்கள்.

அரசாங்கத்தின் தெளிவற்ற கொள்கைகள். ஆட்சியளார்களின் கல்வி குறித்த அலட்சிய மனப்பான்மை. மக்களின் மாறிக் கொண்டிருக்கும் மனோபாவங்கள். உருவான தொழில் வளர்ச்சியால் வளர்ந்த நடுத்தர வர்க்கம். அரசு பள்ளிகளின் பணியாற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை முறைப்படுத்தாத அரசாங்கத்தின் கொள்கையினால் உருவான வீழ்ச்சி.

அரசு பள்ளிக்கூடங்கள் என்பது அரசாங்கத்தால் கண்டும் காணாமல் இருக்க இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களிலும், அடிப்படை சுகாதாரமில்லாத நிலையில் தான் உள்ளது. கடந்த பத்தாண்டுகளாக அரசு பள்ளிகளின் வீழ்ச்சியென்பது அதளபாதாளத்தில் உள்ளது.

இன்று உலகமென்பது கிராமமாகச் சுருங்கியிருந்தாலும் இன்றும் இந்தியா என்பது மேலைநாடுகளால் கிராமத்தின் வடிவமாகவே பார்க்கப் படுகின்றது. எந்த மாற்றமும் இங்கே வந்து விடக்கூடாது என்பதில் தான் ஆட்சியாளர்கள் கவனமாக இருக்கின்றார்கள்.

தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டியவர்கள் தலையைத் தூக்கி கேள்வியேதும் கேட்டுவிடக்கூடாது என்பதில் தான் கவனம் செலுத்துகின்றனர்.

உருவாகக்கூடிய மாற்றங்களும் குறிப்பிட்ட சதவிகித மக்களுக்கு மட்டுமே போய்ச் சேர்ந்து கொண்டிருப்பதால் இங்கே 90 சதவிகித மக்களுக்கு மழுங்கடிக்கப்பட்ட சிந்தனைகளைத் தான் கல்வி என்ற பெயரில் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். கல்வித்திட்டத்தை இன்று வரையிலும் மாற்ற வேண்டும் என்ற எண்ணமில்லாத ஆட்சியாளர்களால் குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்வியைக் கற்பதிலே நாம் பெருமையடைகின்றோம். உண்மையான கல்விக்கும் நாம் கற்றுக் கொண்டிருக்கும் கல்விக்கும் உண்டான வித்தியாசங்களைப் பார்த்து விடுவோம்.

கேள்வி மீன் எங்கே வசிக்கின்றது?

பதில். மீன் தண்ணீரில் வசிக்கின்றது. இதுவொரு இயல்பான கேள்வி பதில்.

ஆனால் உண்மையான அறிவை வளர்க்கும் கல்வி எப்படி இருக்க வேண்டும்?

மீன் ஏன் தண்ணீரில் வசிக்கின்றது? என்ற கேள்வி எழுப்பப்படும் போது தான் மீனிற்கு உள்ள உடல் அமைப்பு முதல் அதன் வாழ்வியல் குறித்த அத்தனை விபரங்களையும் ஒரு மாணவனால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் பள்ளியில் நடத்தப்படும் பாடங்கள் அனைத்தும் கேள்வி பதில் என்கிற ரீதியில் இருப்பதால் அது குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் சிந்தனைகள் சென்று விடாதவாறு இருக்க வைக்கப்படுகின்றது.

உண்மையான அறிவு என்பது தேடுதலில் இருந்தே தொடங்கப் படவேண்டும். ஒரு பதிலில் இருந்து கேட்கப்படும் பல கேள்விகள் மூலமே ஒரு மாணவனின் அறிவு கூர்மையாகின்றது.. ஆனால் இங்கே பதில் என்பது வாங்கும் மதிப்பெண்களுக்காக என்கிற ரீதியில் மாற்றப்பட்ட பிறகு கூர்மை குறித்துக் கவலைப்படுபவர் யார்?

தொடக்கத்தில் இங்கே கல்வியென்பது ஒரு கனவாக இருந்தது. அது குறித்துக் கூட யோசிக்கக்கூட எவருக்கும் நேரம் இருக்கவில்லை. உடல் உழைப்பை வைத்து வாழ்ந்து வாழ்க்கையை முடித்துக் கொண்டு சென்றுவிட அடுத்து வந்த தலைமுறைகளும் அதன் வழியே நடக்க இருட்டுக்குள் இந்தியாவாக இருந்தது. அவரவர் நம்பிக்கைகளே வழி நடத்தியது. ஆனால் இன்று தலைகீழாக மாறியுள்ளது.

கல்வி என்பது இயல்பான ஒன்று. அது வாழ்க்கையின் அங்கம். படிக்காதவர்கள் என்றால் அவர்களுக்கு மரியாதையில்லை. கைநாட்டு மக்கள் இன்னமும் அதிக அளவில் உள்ள இந்தியாவில் கல்வி மூலம் வாழ்வில் உயர்ந்து அடுத்த நிலைக்கு நகர்ந்தவர்கள் கோடிக்கணக்கான பேர்கள் இருந்தாலும் உருவான மாறுதல்கள் என்பது இன்னமும் முழுவீச்சில் நடந்தபாடில்லை.

இன்று ஏழை, நடுத்தரவர்க்கம், என்று பாரபட்சமில்லாது தங்களின் குழந்தைகளின் எதிர்காலக் கனவுக் கோட்டையில் கல்வியைத் தான் அஸ்திவாரமாகக் கருதுகின்றார்கள். தங்களது மகன் மகள் எப்படியும் படித்து முடித்து ஒரு நிலையான வேலையில் அமர்ந்து விட வேண்டும் என்று எண்ணமில்லாத பெற்றோர்களே இன்று இல்லை என்று சொல்லலாம். நன்றாக நினைவு வைத்துக் கொள்ளவும்.

ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகள் நல்ல சம்பளம் வரக்கூடிய வேலையில் தான் அமர வேண்டும் என்று நினைக்கின்றார்களே தவிர மறந்தும் கூட ஒரு குறிப்பிட்ட தொழில் சார்ந்த விசயத்தில் ஈடுபட்டு மேலே வர வேண்டும் என்று நினைப்பதில்லை.

காரணம் நமது கல்வி சுயசார்புத் தன்மையைப் போதிப்பதில்லை. அண்டி வாழ்வதையும் மடங்கி நிற்பதையும் புத்திசாலியாகக் கற்பிக்கப்படுகின்றது.

காரணம் கூர்மையில்லாத ஆயுதமென்பது குத்திக் கிழிப்பதில்லை. கற்ற கல்வி பயத்தையும், நம்பிக்கையின்மையை வளர்த்துவிட வாழ்வதற்கு ஒரு வேலை போதும் என்கிற நிலைக்கு இயல்பாகவே தள்ளப்படுகின்றது.

இந்தியா சுதந்திரம் பெற்றபோது இருந்த முப்பது கோடி மக்கள் தொகை இன்று 120 கோடியாக மாறியுள்ளது. அதிலும் படிப்படியாக உருவான தொழில் வளர்ச்சியில் இன்று நடுத்தரவர்க்க மக்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

இதுவே வாங்கும் சக்தியை நாளுக்கு நாள் அதிகமாக்கிக் கொண்டிருக்கின்றது.

இதனால் எல்லாவற்றையும் வாங்க முடிகின்றது.

கூடவே கல்வி என்பதையும் வாங்க வேண்டியதாக மாறிக் கொண்டு வருகின்றது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி Copyright © 2015 by ஜோதிஜி திருப்பூர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book