27

அலுவலகத்தில் எந்த வேளையிருந்தாலும் தினந்தோறும் மதியம் மூன்று மணிக்கு வீட்டில் இருப்பது போலப் பார்த்துக் கொள்வது வழக்கம். அந்த நேரம் பள்ளி விட்டு மூவரும் வீட்டுக்கு வரும் நேரம். ஒருவர் மட்டும் சிலசமயம் தாமதமாக வருவார்.

காரணம் பள்ளி விட்டதும் நேராக விளையாட்டு மைதானத்திற்குச் சென்று களைத்துப் போகும் அளவுக்கு விளையாடி விட்டு வர மற்ற இருவரும் வந்து விடுகின்றார்கள். பள்ளியில் ஆறாவது வகுப்புக்கு மேல் தான் மாணவர்களை விளையாட்டு மைதானம் பக்கம் அனுப்புகின்றார்கள். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரைக்கும் வகுப்பு நேரத்தில் திடீரென ஏதோவொரு விளையாட்டை விளையாடச் சொல்லி கண்காணிப்போடு வகுப்பறைக்கு அனுப்பி விடுகின்றார்கள்.

ஆனால் வீட்டில் மூத்தவருக்குப் படிப்பைப் போல விளையாட்டிலும் அதீத வெறி. பன்முகத் திறமைகள் கொண்ட குழந்தைகள் உருவாவது இயற்கை தந்த வரம். ஒவ்வொரு முறையும் ஆச்சரியமாக இருக்கும். பயிற்சி இல்லாமலேயே அவர் காட்டும் ஆர்வமும், முயற்சியும் வியப்பில் ஆழ்த்தும். தடை சொல்லாமல் அனுமதிப்பதால் அவராகவே முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்.

எங்கள் வீட்டுக்கருகே பள்ளி உள்ளது.

அருகாமைப் பள்ளியென்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் ஆயிரமாயிரம் சந்தோஷத்தை தரக்கூடியது. பள்ளியிலிருந்து தொலைவில் இருந்து வருபவர்கள் படும் பாட்டையும், பள்ளி வாகனங்களில் வந்து போகும் குழந்தைகளின் அவஸ்த்தைகளையும் பார்த்துக் கொண்டிருப்பதால் நகர்புற வாழ்க்கையில் இது போன்ற அனுபவங்கள் ஏறக்குறைய நரகத்திற்குச் சமமானதே.

எங்கள் வீட்டிலிருந்து பள்ளிக்கு ஐந்து நிமிடத்திற்குள் நடந்து போய் விடலாம். ஆனால் அவர்கள் வீட்டுக்குள் நுழையும் போது அவர்களின் அலுப்பை பார்க்கும் போது தொடக்கத்தில் பாடச் சுமையின் தாக்கமோ? என்று நினைத்துக் கொண்டதுண்டு. ஆனால் நாள்பட அவர்களின் சுகவாசி தன்மையை உணர வைத்தது.

கிராமத்துப் பள்ளிகளில் ஐந்து கிலோ மீட்டர் மிதிவண்டி மூலம் பள்ளிக்கு வந்தவர்களும், நீண்ட தூரத்தை கடந்து வந்தவர்களையும் பார்த்த வாழ்க்கையில் எங்கள் குழந்தைகளின் அருகே உள்ள பள்ளியின் தூரத்தைக் கணக்கீடும் போது பெரிய தூரமில்லை தான். ஆனால் இன்று குழந்தைகளின் உடல் வலுவின் தன்மை மாறியுள்ளது.

ஓடி விளையாடிய காலம் மலையேறிவிட்டது. வீடு தான் மைதானம். கணினியும், தொலைக்காட்சியும் தான் விளையாட்டுப் பொருட்கள். இதுவே குழந்தைகளின் கண்களையும், கவனத்தையும் திருடிக் கொள்ள அடிப்படை ஆரோக்கியமும் அதோகதியாகிவிட்டது.

நடுத்தர வாழ்க்கையில் குறுகிய வீடுகளும், போராட்ட வாழ்க்கையும் ஓட வைத்துக் கொண்டிருக்க நாம் விரும்பிய வாழ்க்கையை விடக் கிடைத்த வாழ்க்கையைத் தக்க வைப்பதே பெரும்பாடாக உள்ளது. ஒரே இடத்தில் உட்கார்ந்து பழகி விட்ட குழந்தைகளிடத்தில் ஆரோக்கிமென்பது அளவாகத்தானே இருக்கும்.

“அடைகோழியாட்டாம் என்னடா வீட்டுக்குள்ளே?” என்று கேட்டு வெளியே விரட்டிய கிராமத்து வாழ்க்கையென்பது தற்போது “வெளியே போகாதே. கண்ணு மணணு தெரியாமா வர்றவன் மோத போறான்” என்று பயந்து வாழும் வாழ்க்கையில் சிலவற்றை இழந்து தான் குழந்தைகள் வளர வேண்டியதாக உள்ளது.

நாம் தான் காரணம்.

இதுவும் ஒருவகையில் நாம் உருவாக்கி வைத்துக் கொண்ட வசதிகளை யோசிக்க வைக்கின்றது. எது நமக்குத் தேவை? என்பதை விட நம் குழந்தைகள் ஆசைப்படுகின்றார்கள் என்பதற்காக ஒவ்வொன்றாகச் சேர்த்து வைக்க அதுவே குறிப்பிட்ட காலத்திற்குள் தேவையாகவும் மாறிவிடுகின்றது.

இவர்கள் வீட்டில் காலை ஆறு மணிக்கு எழுந்தது முதல் எப்போதும் போலப் பரபரப்புத் தொற்றிக் கொள்ளும். பல சமயம் கரையைக் கடக்கப் போகும் புயலைப் போல ஒவ்வொரு நிமிடமும் திகிலாக நகரும். ஆனால் வீட்டுக்குள் நடக்கும் பஞ்சாயத்துக்களில் நான் கலந்து கொள்வதில்லை.

காரணம் நாம் தான் கடைசியில் ப்யூஸ் போன பல்பு போல மாறிவிடும் அபாயமிருப்பதால் தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதோடு சரி.

வீட்டுக்குள் மூன்று பேர்கள் இருக்கின்றார்கள் என்று தான் பெயரே தவிர முப்பது பேர்கள் இருப்பதைப் போலவே ஒவ்வொரு முறையும் களேபரப்படுத்துகின்றார்கள். ஓயாத பேச்சும், நிறுத்த முடியாத சண்டைகளும், விடாத கேள்விகளுமாய்க் காலையில் இரண்டு மணி நேரத்திற்குள் வீட்டுக்குள் ஒரு போர்க்கள சூழலை கொண்டு வந்து விடுகின்றார்கள்.

பத்து வயதில் நாமெல்லாம் இப்படியா இருந்தோம்? என்ற வயதானவர்கள் எப்போதும் சொல்லும் கேள்விகள் மனதிற்குள் வந்து போனாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கவனித்துக் கொண்டே வருவதுண்டு.

என்ன செய்கின்றார்கள்? ஏன் செய்கின்றார்கள்? என்ற இரண்டு கேள்விகளுக்கும் தினந்தோறும் ஏராளமான பதில்களும் உடனடியாகக் கிடைத்து விடுகின்றது.

மூவரும் காலை எழுந்தது முதல் பள்ளிக்குச் செல்வது வரைக்கும் உண்டான ஒவ்வொரு அடியிலும் எவரோ ஒருவரின் சப்தம் ஓங்கியிருக்கும். தேவையிருக்கின்றதோ இல்லையோ எவரோ ஒருவர் மற்றொருவருடனும் வம்பிழுப்பதும் வாடிக்கையாகவே உள்ளது. நிறுத்தவும் முடியாது. அறிவுரையாகச் சொன்னாலும் எடுபடவும் செய்வதில்லை.

“வலுத்தவான் வாழ்வான்” என்று நினைத்துக் கொண்டு கவனித்தாலும் கடைசியில் அதுவும் தோற்றுப் போய்விடுகின்றது. சண்டைகள் உக்கிரமாகி என்னவோ நடக்கப் போகின்றது என்று யோசிக்கும் தருணத்தில் சம்மந்தமில்லாமல் வெள்ளைக்கொடி பறப்பதும், எதிர்பாராத சமயத்தில் வாள் சண்டையின் ணங் டங் என்ற சப்தம் கேட்பதும் வாடிக்கை என்றாலும் ஒவ்வொரு முறையும் நம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பார்க்க வேண்டியதாக உள்ளது. எதிர்பாராத சமயத்தில் கைகுலுக்கிக் கொள்கின்றார்கள். உள்ளே நுழைந்த நாம் தான் பல்பு வாங்க வேண்டியதாக உள்ளது.

“என் பென்சிலை பார்த்தீங்களா?”

“என்னுடைய ஹோம் ஒர்க் நோட்டை காணல”

என்று தொடங்கிக் கடைசியில் “என் ஜட்டியை இவள் போட்டுக்கிட்டாள்” என்பது வரைக்கும் நகைச்சுவைக்குப் பஞ்சமில்லாமல் ஒவ்வொரு நாளும் நகர்ந்து கொண்டேயிருக்கின்றது. வெறும் கேள்விகளாக வந்துகொண்டிருக்கும்

அவர்களின் ஒவ்வொரு எதிர்பார்ப்புகளுக்கும் நாம் கண்டும் காணாமல் இருந்தாலும் திட்டுக்கள் வரும். நான் கண்டு பிடித்துத் தருகின்றேன் என்றாலும் “ஆமா நீங்க கண்டு பிடித்து தருவதற்குள் எங்க பள்ளிக்கூடம் ஆரம்பிச்சுடுவாங்க” என்று நோ பால் ஆக்கும் தந்திரமும் நடக்கும்.

அவர்கள் தேடுகின்ற அனைத்தும் அருகே தான் இருக்கும். ஆனால் செயல்களின் அவசரமும், பொறுமையின்மையும் களேபரப்படுத்த நமக்கு அதிகக் கோபத்தை உருவாக்கினாலும் மூவரும் பள்ளிக்குச் சென்றதும் வீட்டைக் கவனித்ததால் வீட்டுக்குள் நிலவும் அமைதியென்பது நமக்குத் தாங்க முடியாத வெறுமையை உருவாக்குகின்றது.

குழந்தைகள் பள்ளிக்குச் சென்றதும் வீட்டை கவனித்தால் மிகப் பெரிய அமைதி தெரியும். இது வெறுமனே அமைதி என்று மட்டும் சொல்லி விட முடியாது. நாம் கதைகளில் படிக்கும் போர்க்களம் முடிந்து நிலவும் அமைதியைப் போலத்தான் இருக்கின்றது. இரைந்து கிடைக்கும் புத்தகங்களும், ஒழுங்கற்ற மேஜையில் ஓரத்தில் கிடக்கும் புத்தகங்களுமென எங்கெங்கு காணினும் ஏதோவொரு புத்தகங்கள். தொடக்கத்தில் அலுவலகத்தைப் போல ஒழுங்கை வீட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று முயற்சித்த போது முட்டி பெயர்ந்து முகம் முழுக்கக் காயம் பட்டது தான் மிச்சம்.

புத்தகங்களைச் சொத்து என்கிறார்கள். ஆனால் வீட்டுக்குள் புத்தகங்கள் மட்டுமே சொத்தாக இருக்கின்றது. பள்ளி விட்டு வரும் பொழுதே சுமந்து வந்த பைகளை மூலையில் தூக்கி எறிந்து விட்டு அப்படியே உடைகளைக் கூட மாற்றாமல் தரையில் படுத்துக் கொண்டு இரண்டு காலையும் அருகே உள்ள நாற்காலியில் தூக்கி வைத்துக் கொண்டு முழு வேகத்தில் சுழலும் மின் விசிறிக் காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தவர்களைப் பார்க்கும் போது கோபத்தில் கத்தியிருக்கின்றேன்.

சென்ற ஆண்டு, “அப்பா, கொஞ்ச நேரம்” என்றார்கள்.

ஆனால் இப்போது “ஏம்ப்பா டென்சன் ஆகுறீங்க.பாத்ரூம் ஓடியா போகப்போகுது? அங்கே தான் இருக்கும்” என்கிறார்கள். இது போன்ற சமயத்தில் அமைதியாய் இருந்தால் தான் நம் ஆரோக்கியத்தை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

இதனைத் தொடர்ந்து வரும் நேரலைக்காட்சிகள் தான் திகில்படம் போல நகரத் தொடங்கும். ஒருவர் மேல் ஒருவர் படுக்க முயற்சிக்க அடுத்தவர் அலற அருகே உள்ள மேஜை நகர, வைத்திருக்கும் பாத்திரங்கள் உருள, உள்ளேயிருந்து வரும் மிரட்டல் சப்தம் என நடந்து கொண்டிருக்கும் ரணகளத்தைக் கிளுகிளுப்பாய் ரசிக்கக் கற்றுக் கொண்ட பிறகே என் பிபி குறையத் தொடங்கியது.

இது போன்ற சமயங்களில் தான் சமீப காலத்தில் அதிகம் பரவியுள்ள “ஒரு பிள்ளை கலாச்சாரத்தை” நினைத்துக் கொள்வதுண்டு. கிராமத்திலிருந்து நகர்ந்து வந்தவர்களும், நகரமயமாக்கலும், இடப்பெயர்வும் தனி மனிதர்களுக்குப் பலவிதமான சுதந்திரங்களை வழங்கியுள்ளது.

ஓரளவுக்கேனும் சாதி வித்தியாசத்தை மாற்றிக் கொண்டு வருகின்றது என்பதைப் போல அவரவர் விரும்பும் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க வைத்துள்ளது. விரும்பிய உடைகள், விரும்பிய நேரத்தில் உணவு என உருவான காலமாற்றங்கள் கலாச்சாரம் என்ற வார்த்தையைக் காவு வாங்கி விட்டது.

அடுத்த வீட்டுக்கு தெரிந்து விடுமோ? என்ற பயம் மாறி விட்டது. சந்து முழுக்கப் பரவி விடுமோ என்ற அச்சம் போய்விட்டது. ஊர் முழுக்கக் காறித்துப்பி விடுவார்கள் என்ற எண்ணம் மாறி எண்ணிய அனைத்தையும் இயல்பான வாழ்க்கையாக மாற்றிக் கொள்ள முடிந்துள்ளது. இப்போது கூட்டுக்குடித்தனம் என்றால் கணவன், மனைவி, குழந்தைகள் ஒரு வீட்டுக்குள் இருந்தாலே அதுவே பெரிய சாதனையாக மாறியுள்ளது.

ஆனால் நாம் இழந்த கூட்டுக்குடித்தனங்கள் உருவாக்கிய “அளவான சிந்தனை நீடித்த ஒற்றுமை” என்பது மாறிப் போனாலும் தனி நபர்களின் சுதந்திரமும், விரும்பியவற்றை அனுபவிக்கக் கிடைத்த வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. நாகரிக சமூகமாக மாற்றியுள்ளது.

இதன் தொடர்ச்சியாகப் பெரும்பாலான வீடுகளில் ஒரு பிள்ளை கலாச்சாரம் என்பது இயல்பான ஒன்றாக மாறியுள்ளது. இதற்குப் பின்னால் சமூக, பொருளாதார, உடல் ரீதியான என்று பல காரணங்கள் இருந்தாலும் ஒரு பிள்ளை மட்டும் வைத்திருப்பவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் சொல்லி மாளாது.

குறிப்பாகக் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் என்கிற ரீதியில் திடீர் பிரச்சனைகள் உருவாகும் போது வீட்டில் உருவாகும் பதட்டமும், அதனால் பெற்றோர்கள் அடையும் மன அழுத்தத்தைப் பல குடும்பங்களில் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன்.

சில மாதங்களுக்கு முன் நள்ளிரவில் நண்பன் அழைத்த போது தூக்க கலக்கத்தில் அலைபேசியை எடுத்த போது அவனின் அழுகுரல்தான் முதலில் கேட்டது. பள்ளித்தோழன் என்பதால் அவனின் குடும்ப விபரங்கள் அனைத்தும் தெரியும். மனைவியுடன் சண்டை போட்டு முடிவே இல்லாமல் போகும் போது அழைப்பான்.

ஆனால் இந்த முறை அவன் பையன் மருத்துவனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்திருப்பதாகச் சொன்ன போது அவசரமாக ஓடினேன். அந்தப் பெரிய மருத்துவமனையின் வாசலில் இருவருமே நின்று கொண்டிருந்தார்கள். இருவர் கண்ணிலும் நிற்காமல் கண்ணீர வழிந்து கொண்டிருந்தது. இவர்களைப் பொருட்படுத்தாமல் குறிப்பிட்ட பகுதியில் உள்ள நர்ஸ்ஸைப் போய்ப் பார்த்துப் பேசிய போது இவர்களின் முட்டாள் தனத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.

மூன்று நாட்களாக மலம் கழிக்காமல் இருந்த பையனை இருவருமே கண்டு கொள்ளாமல் இருந்தன் விளைவு இப்போது இங்கே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. ஏற்கனவே பத்து வயது பையன் நோஞ்சானாக இருக்கின்றானே? ஒரு புள்ளையை வளர்க்கின்ற லட்சணமா? என்று பலமுறை திட்டியுள்ளேன்.

“டேய் சின்ன வயசுல நாமும் இப்படித்தானே இருந்தோம்” என்று சப்பைக்கட்டுக் கட்டியிருக்கின்றான். ஆனால் இன்று தான் அதற்கான முழுமையான விடை எனக்குக் கிடைத்தது. இது பையனின் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல.

நாம் தேர்ந்தெடுத்துள்ள வாழ்க்கை முறையும் சேர்த்து அடங்கியுள்ளது. விஸ்தாரமான வீடுகள் மறைந்து தீப்பெட்டி வீட்டுக்குள் வாழ வேண்டிய சூழ்நிலையும், ஆதரவற்ற அண்டை வீடுகள் என் எல்லாமும் சேர்ந்து வீட்டுக்குள் முடங்க வைக்க உருவாகும் மனஅழுத்தத்தைப் போக்க இன்று உதவிக்கொண்டிருக்கும் ஒரே சமாச்சாரம் இந்த டிவி பெட்டிகள் தான்.

பேச முடியாத பொரணிகளை நெடுந்தொடர் கொண்டு வந்து விடுகின்றது. ஆட முடியாத ஆட்டங்களைத் திரைப்படங்கள் காண்பிக்க, பத்து முறை பார்த்த காட்சியென்றாலும் கண் இமைக்க மறந்து குடும்பமே பெட்டிப்பாம்பாய் அடங்கி விடுகின்றது.

நண்பன் இரவு வேலை முடித்து அதிகாலை வந்தாலும் அவன் பார்க்கும் காட்சிகள் தொடங்கி, அவன் மனைவி பார்க்க விரும்பும் சீரியல் என்று நாள் முழுக்க ஏதோவொரு காட்சிகள் ஓடிக்கொண்டேயிருக்கின்றது.

பாவத்தின் சாட்சியாய் வீட்டில் குழந்தைகள் இருக்கக் குடும்பத்தின் அடிப்படை ஆரோக்கியம் அதோகதியாகிவிடுகின்றது. கவனிக்க ஆளில்லை. கவனித்துச் சொல்லவும் இருப்பவர்களுக்கு நேரமும் இல்லை. இதற்கு மேலாகப் பள்ளிகளில் கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்கள் என்றொரு பெரிய கொடுமை ஒன்று உண்டு. பாலர் பள்ளி படிக்கும் குழந்தைக்கு வயது அதிகபட்சம் நான்கு வயது கூட முடிந்து இருக்காது. கைவலிக்க இரண்டு மணி நேரம் எழுத வைக்கும் கொடுமை தான் இப்போதுள்ள நவீன கல்வி.

“மிஸ் வெளியே நிறுத்திடுவாங்க” என்ற பயம் பாதி. வெறுப்பு மீதி என்கிற ரீதியில் கழிவுகளை உடம்புக்குள் அடக்க, அதுவே பழக்கமாகி விடக் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமன்நிலை மாறிப் போய்விடுகின்றது. காலையில் அவசரமாய் ஓட வேண்டும். மாலையில் வீட்டுக்கு வந்ததும் எழுத உட்கார வேண்டும். குழந்தைகளுக்கு விளையாட நேரமில்லை.

விளையாட விடுமுறை கிடைத்தாலும் வெளியே சென்று வர இடமும் இருப்பதில்லை. ஒரு நகர்புற நடுத்தரவர்க்கம் என்றால் இழப்பை பொருட்படுத்தாமல் இயல்பாக வாழ கற்று இருக்க வேண்டும். தினந்தோறும் வீட்டை விட்டு நகர்ந்தால் தான் அப்பாவுக்குக் காசு. அத்தனை பேர்களும் வீட்டை விட்டுக் கிளம்பினால் அம்மாவுக்கு நிம்மதி.

எங்கே கொஞ்ச முடியும்? எப்போது பேச முடியும்?

இருப்பதை வைத்து வாழ நினைப்பவர்களை இயலாமையின் வெளிப்பாடு என்கிறார்கள்.

எல்லாவற்றையும் பெற்றவர்களின் வாழ்க்கையை உழைப்பின் பலன் என்கிறார்கள்.

ஆனால் இருவருமே சுதந்திரத்தின் வெளிப்பாடாகத் தங்களை மாற்றிக் கொள்ளத் தொடங்கும் போது தான் இங்கே பலருக்கும் வாழ்க்கையே மாறிவிடுகின்றது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி Copyright © 2015 by ஜோதிஜி திருப்பூர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book